

ஒரு வங்கியில் பலரும் தினந்தோறும் பணத்தைக் கொடுக்கிறார்கள்; எடுக்கிறார்கள். ஒரு கட்டத்தில் இவர்களில் யார் எவ்வளவு பணம் தந்தார்கள் என்று குழப்பம் வருமல்லவா? வங்கியின் இருப்பில் உள்ள பணத்தில் முதல் நபரின் பங்கு எவ்வளவு, இரண்டாவது நபரின் பங்கு எவ்வளவு என்று சந்தேகம் வருமல்லவா?
இரண்டு பேருக்கே இப்படி என்றால், ஆயிரக் கணக்கில் லட்சக்கணக்கில் வாடிக்கையாளர்களைக் கொண்ட வங்கிகள் எப்படி அனைத்து வரவு செலவு களையும் கையாளும்?
அதற்குதான் வங்கிக் கணக்கு பயன்படுகிறது. ஒவ்வொரு வாடிக்கையாளரும் தன்னிடம் முதன்முறை பணப்பரிமாற்றம் செய்ய வரும்போது, அவரது பெயரில் ஒரு கணக்கைத் தொடங்கி, அதற்கு ஓர் எண்ணைக் கொடுத்துவிடுவார்கள். அதன் பிறகு அவர் செலுத்துகிற, எடுக்கிற பண விவரங்கள் அனைத்தும் கணினி மூலம் இந்த எண்ணின்கீழ் பதிவு செய்யப்படும். இந்த முறையில் குழப்பமே வராது!
ஒரு வாடிக்கையாளருக்கு ஒரு கணக்குத்தான் இருக்க வேண்டுமா?
அப்படி ஒன்றும் கட்டாயம் இல்லை. ஒருவருக்கே ஒன்றுக்கு மேற்பட்ட கணக்குகள் ஒரே வங்கியில் இருக்கலாம். அல்லது ஒருவருக்கு மேற்பட்டவர்கள் சேர்ந்து ஒரே கணக்கையும் வைத்துக்கொள்ளலாம்.
உதாரணமாக, உங்களிடம் எழுபத்தைந்து ரூபாய் இருக்கிறது. அதில் இருபத்தைந்து ரூபாயைப் புத்தகம் வாங்குவதற்கும், ஐம்பது ரூபாயை சைக்கிள் வாங்கு வதற்கும் சேமித்துவைக்க விரும்புகிறீர்கள்.
ஆனால் புத்தகத்தின் விலை நூறு ரூபாய்; சைக்கிளின் விலையோ சில ஆயிரம்!
ஆகவே இந்தப் பணத்தை நீங்கள் தனித் தனி உண்டியல்களில் போடுகிறீர்கள். அதன் பிறகு உங்களுக்குப் பணம் கிடைக்கும்போதெல்லாம் இங்கே கொஞ்சம், அங்கே கொஞ்சம் என்று சேமிக்கிறீர்கள்.
நீங்கள் ஒருவர்தான்; ஆனால் உங்களிடம் இரண்டு உண்டியல்கள் இருக்கின்றன. அவற்றில் தனித் தனியே பணத்தைச் சேமிக்கிறீர்கள். சில நாள் கழித்து, உங்களுடைய சைக்கிள் கனவில் உங்கள் தம்பியும் இணைந்துகொள்கிறார். அவரும் அந்த இரண்டாவது உண்டியலில் பணத்தைச் சேமிக்கத் தொடங்குகிறார். அதேபோல வங்கிகளிலும் ஒரே வாடிக்கையாளர் வெவ்வேறு கணக்குகளைத் தொடங்கலாம், அல்லது பல வாடிக்கையாளர்கள் சேர்ந்து ஒரே கணக்கையும் தொடங்கலாம்.
ஒருவர் உடனடிச் செலவுகளைக் கவனிக்க ஒரு வங்கிக் கணக்கும், நீண்ட நாள் முதலீடுகளுக்கு இன்னொரு வங்கிக் கணக்கும் வைத்திருக்கலாம்; கணவன், மனைவி அல்லது பங்குதாரர்கள் சேர்ந்து ஒரே வங்கிக் கணக்கையும் தொடங்கலாம்!
-என். சொக்கன்