

குட்டீஸ்களா, கிறிஸ்துமஸ் வரப்போகிறது! கிறிஸ்துமஸ் தாத்தா உங்களை எல்லாம் மகிழ்விக்க பரிசுப் பொருட்களுடன் வருவார் என எதிர்பார்த்துக் காத்திருப்பீர்கள். அந்த கிறிஸ்துமஸ் தாத்தா உருவான கதை உங்களுக்குத் தெரியுமா?
கிறிஸ்துமஸ் தாத்தா என்று அழைக்கப்படும் 'சாண்டாகிளாஸ்' உண்மையில் கற்பனையில் உருவாக்கப்பட்ட ஒரு பாத்திரம். 'கிறிஸ்துமஸ் தாத்தா' என்றவுடன் எல்லோருக்கும் பருத்த உடல், பனிக்குல்லாய், சிவந்த கன்னக் கதுப்புகள், குறும்பு கொப்பளிக்கும் கண்கள், சிவப்பு கம்பளி ஆடை மற்றும் தோளிலே ஒரு மூட்டை - இவைதான் ஞாபகம் வரும்.
ஆனால், உண்மையில் துருக்கியில் நிக்கோலஸ் என்ற புனித பாதிரியார் பிஷப்பாக இருந்து, பல ஏழைகளின் துயரைத் துடைத்து வந்தார். இவரின் நினைவாகத்தான் 'கிறிஸ்துமஸ் தாத்தா' பாத்திரம் உருவானது.
இதனை உருவாக்கியவர் டாக்டர் கிளமெண்ட்ஸி மூர் என்பவர் ஆவார். அன்பு, நல்லுறவு, தாராள மனம், குழந்தைகளிடம் விருப்பம் ஆகிய நற்குணங்களுக்கு உரியவரான இந்த செயின்ட் நிக்கோலஸ் என்பதுதான் கிறிஸ்துமஸ் தாத்தாவின் உண்மையான பெயர்.
கிறிஸ்துமஸ் திருநாளில் பனிவண்டியில் பறந்து வந்து, வீடுகளின் புகைப்போக்கி வழியாக இறங்கி, குழந்தைகளுக்குப் பரிசுகள் வழங்கும் நீண்ட வெண்தாடி வைத்த ஒரு குண்டு தாத்தா என்பது கிறிஸ்தவர்களின் ஐதீகம்.
சாண்டா கிளாஸ் உலகம் முழுவதும் உள்ள குழந்தைகளின் பட்டியலை வைத்திருப்பாராம். அவர்களின் நடத்தையின் அடிப்படையில் 'இனிமையான குழந்தை' அல்லது 'குறும்புக்கார குழந்தை' என்று வகைப்படுத்தி வைத்திருப்பாராம். கிறிஸ்துமஸ் நாளுக்கு முந்தைய நாள் இரவில், நன்னடத்தை உடைய குழந்தைகளுக்குப் பொம்மைகள், மிட்டாய்கள் உள்ளிட்ட பரிசுகளையும், தீய நடத்தை உள்ள குழந்தைகளுக்கு நிலக்கரியையும் வழங்குவார் எனக் கூறப்படுகிறது. வட துருவத்திலிருந்து தனது 'ரெயின்டீர்' பனிச்சறுக்கு வண்டியில் அவர் வருவதாக நம்பப்படுகிறது.
இங்கிலாந்து: இங்குச் சாண்டா 'ஸ்லெட்ஜ்' வண்டியில் வருவார். குழந்தைகள் தங்கள் கட்டிலின் கால்மாட்டில் 'ஸ்டாக்கின்ஸ்' (உறைகள்) தொங்கவிட்டிருப்பார்கள். சாண்டா புகைப்போக்கி வழியாக வந்து அதற்குள் பரிசுகளைப் போட்டுவிட்டுப் போவார்.
கென்யா (ஆப்பிரிக்கா): இங்குத் தாத்தா கலைமானில் வருவதில்லை; ஹெலிகாப்டரில் வந்து குதிக்கிறார்! ஆப்பிரிக்கப் போலீஸார் தங்கள் தேசிய உடை அணிந்து இதைக் கொண்டாடுகிறார்கள்.
பிரான்ஸ்: பிரெஞ்சு குழந்தைகளுக்குத் தாத்தாவின் பெயர் 'பாபா நோயல்'. குழந்தைகள் வரிசையாக வைத்துள்ள 'பூட்ஸ்'களில் அவர் பரிசுகளைப் போடுவார். தாத்தாவிற்காகக் குழந்தைகள் பிஸ்கட்களையும் மதுபானத்தையும் பூட்ஸிற்கு அருகில் வைப்பார்கள்.
ரஷ்யா: ரஷ்யாவில் மட்டும் வருவது தாத்தா அல்ல, பாட்டி! ரஷ்யாவில் 'பாபுஸ்கா' என்ற பாட்டிதான் வந்து சிறுவர் சிறுமிகளுக்குப் பரிசுகளை அளிப்பார்.
என்ன குட்டீஸ்களே, கிறிஸ்துமஸ் தாத்தா உங்கள் வீட்டிற்கு எப்பொழுது வருவார் என ஆவலுடன் காத்திருக்கிறீர்களா? சாக்லேட்களும் பொம்மைகளும் தந்து உங்களை மகிழ்விப்பதோடு, இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் பண்டிகையை மறக்க முடியாத மகிழ்ச்சியான நாளாக அவர் மாற்றுவார்.
கிறிஸ்துமஸ் தாத்தா வந்த கதை இப்போது தெரிந்துவிட்டதல்லவா? அனைவருக்கும் ஹேப்பி கிறிஸ்துமஸ்!