

காலையில் இருந்தே பயங்கர கடுப்பிலிருந்தாள் கவிதா. ‘இந்தக் குழந்தை எத்தனை சொன்னாலும் கேட்க மாட்டேங்குதே? ஸ்கூலுக்கு சீக்கிரம் போகணும், எந்திரினா எந்திரிக்கவே மாட்டேங்குதே?! எத்தனை சொன்னாலும் கேட்க மாட்டேங்குது! என்னதான் பண்றது?! முதுகுல ரெண்டு சாத்து சாத்தலாமா’ன்னு கூட யோசித்தாள்.
அவளுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. தன் குழந்தை ஸ்ரீ காதுபடவே கத்தினாள் கவிதா. “இத பாரு ஸ்ரீ! நீ சொன்னா கேக்கவே மாட்டேங்கற! பேசாம, உன்னைக் குடுத்துட்டு, நாங்க பக்கத்து வீட்டு சித்துவ வாங்கிக்காலாம்னு பார்க்கிறோம்!” என்றாள். இதுக்காவது பயப்படுதான்னு பார்ப்போம் என்பது அவள் நினைப்பு.
ஆனால், அன்றைக்குப் பள்ளிக்குப் போய்விட்டு வந்த குழந்தை, தன் ‘டெடிபியர்’ பொம்மையை வைத்துக்கொண்டு எதையோ பேசியபடி விளையாடிக் கொண்டிருக்க, என்னன்னு காதுகொடுத்துக் கவனித்தாள் கவிதா.
குழந்தை ஸ்ரீ தன் டெடிபியரிடம் பேசிக் கொண்டிருந்தது…
“இத பாரு புஜ்ஜிம்மா… (புஜ்ஜிம்மா ஸ்ரீ குட்டியின் டெடிபியர் பொம்மைக்குப் பெயர்) இன்னைக்கு உனக்கு ஒரு கதை சொல்லட்டுமா…? நீ சமத்தாத் தூங்கி, காலைல நேரத்துல எந்திரிச்சிடனும்.
கவிதா, ‘ஸ்ரீ’யின் விளையாட்டைக் காது கொடுத்துக் கேட்க ஆரம்பித்தாள். குழந்தை கதை சொல்லத் தொடங்கியது.
“இன்னைக்கு ஸ்கூல்ல நான் கேட்டுட்டு வந்த கதைதான் உனக்குச் சொல்றேன் கேளு”ன்னு சொல்லிட்டு டெடிபியருக்குக் கதை சொல்லத் தொடங்கியது ஸ்ரீ குட்டி.
“ஜூப்பிட்டர்னு ஒரு பிளானட்டாம். அது ரோமானியர் கடவுளாம். அது ஒருநாள் எல்லாருக்கும் ஒரு போட்டி வச்சுதாம்? என்ன போட்டி தெரியுமா? ‘உலகிலேயே அழகான’ ஒரு குட்டியைக் கொண்டு வந்து காட்டினா, ஒரு பெரிய பரிசு தருவேன் சொல்லிச்சாம்.
உலகிலிருக்கிற ஒவ்வொரு உயிரினமும் ஒவ்வொன்னும் தன் குழந்தையைக் கொண்டு வந்து ஜூப்பிடர்ட்ட காட்ட முன்னால வரிசைல நின்னுச்சாம். புலி, சிங்கம், யானை, மயில், குயில்னு நெறைய வரிசைல நின்னுச்சாம். அந்த வரிசைல ஒரு குரங்கும் தன் குட்டியோட நின்னுச்சாம்.
எல்லா விலங்கும் குரங்கைப் பார்த்துச் சிரிச்சு கேலி பண்ணிச்சாம். “அய்யோ! குரங்கோட குட்டிய பாரு..?! சப்பை மூக்கு.. முடியே இல்லாம வழுவழுன்னு! இதுவா அழகு? இதுக்கா பரிசு?”ன்னு சொல்லிச் சிரிக்க, குரங்கு தன் குட்டீட்ட, ‘ஜூப்பிடர் வேணா எந்தக் குட்டிக்கு வேணாலும் என்ன பரிசு வேணாலும் கொடுக்கட்டும்.. ஆனா, எனக்கு நீதான் அழகு’ன்னு சொல்லி தன் குரங்குக் குட்டியை முத்தமிட்டு அணைச்சுக்கிச்சாம்! இந்தக் கதைதான் எங்க டீச்சர் இன்னைக்குச் சொன்னாங்க!
புஜ்ஜிம்மா.. எனக்கு நீதான் அழகு. அம்மா சொல்றா மாதிரி உன்னை விட்டுட்டு பக்கத்துவீட்டுப் பையன் ‘சித்துவெல்லாம் எனக்கு வேண்டாம்”னு சொல்லி, தன் டெடிபியர் புஜ்ஜிம்மாவை ஸ்ரீ முத்தமிட, கவிதாவுக்குத் தன் கன்னத்தில் தன்னை ஓங்கி யாரோ அறைந்தது போலிருந்தது!
தன் குழந்தையை எடுத்து அணைத்து முத்தமிட்டாள் கவிதா. கூடவே அன்றைக்கு ஜூப்பிடர் கதையைக் குழந்தைகளுக்குச் சொன்ன டீச்சர் டியருக்கும் மானசீகமாக நன்றி சொன்னாள்.