
தமிழகத்தின் கடைக்கோடி மாவட்டமான கன்னியாகுமரியில் பிறந்த ஏழை வீட்டுப் பிள்ளையான வ.நாராயணன், இன்று விண்ணை நோக்கி ஏவுகணைகளை செலுத்துவதில் வல்லவராகத் திகழ்கிறார். அன்று கூரையே இல்லாத பள்ளியில் படித்தவர் தான், இன்று இஸ்ரோவின் தலைவராக உயர்ந்துள்ளார். இது தமிழர்கள் அனைவருக்கும் பெருமை சேர்க்கும் விஷயமாகும். ஒரு தமிழர் இஸ்ரோவில் ஆதிக்கம் செலுத்துவது இது முதல்முறை அல்ல. ஏற்கனவே ஏபிஜே அப்துல் கலாம், மயில்சாமி அண்ணாதுரை மற்றும் சிவன் உள்ளிட்ட பல தமிழர்கள் இஸ்ரோவில் நாட்டிற்காக சாதனைகளைப் புரிந்தவர்கள் தான். அவ்வகையில் தற்போது இஸ்ரோவின் புதிய தலைவர் நாராயணனைப் பற்றி அறிந்து கொள்ள இந்தப் பதிவு உங்களுக்கு உதவும். மேலும் அவரது அர்ப்பணிப்பும், கடுமையான உழைப்பும் உங்களுக்குப் புரியும்.
நிலவில் மனிதன் இறங்கியதை ஆசிரியர் சொல்லக் கேட்டு, முதல் வகுப்பு பயிலும் போதே விண்வெளிப் பயணத்தை தொடங்கி விட்டார் நாராயணன். அரசு பள்ளியில் தமிழ்வழிக் கல்வியில் தனது படிப்பைத் தொடர்ந்த நாராயணன், ஒன்பதாம் வகுப்பு வரை மின்சாரமே இல்லாத வீட்டில் மண்ணெண்ணெய் விளக்கு வெளிச்சத்தில் தான் படித்தார். நன்றாக படிக்கும் திறன் பெற்ற இவர் பத்தாம் வகுப்பில் பள்ளியிலேயே முதல் மாணவராகத் தேர்ச்சி பெற்றார். அடுத்ததாக இவர் தந்தை வன்னிய பெருமாளின் வழிகாட்டுதல்படி, டிப்ளமோ படிப்பில் சேர்ந்தார். அதோடு இவரது கல்விப் பயணம் நிற்கவில்லை.
கல்வியின் மீதிருக்கும் தீராத ஆர்வத்தால் இவரது பட்டப்படிப்புகளின் எண்ணிக்கையும் உயர்ந்தது. கோரக்பூர் ஐஐடி-யில் AMEI மெக்கானிக்கல் இன்ஜினியரிங், M.Tech., கிரையோஜெனிக் இன்ஜினியரிங் மற்றும் ஏரோஸ்பேஸ் இன்ஜினியரிங் போன்றவற்றில் PhD பட்டங்களைப் பெற்றார். 1984 ஆம் ஆண்டு இஸ்ரோவில் தனது பணியைத் தொடங்கிய நாராயணன், கடந்த 40 ஆண்டுகளில் விண்வெளித் துறையில் பல்வேறு சாதனைகள் புரிய துணை நின்றிருக்கிறார். C-25 என்ற அதிசக்தி வாய்ந்த கிரையோஜெனிக் இன்ஜின் திட்டத்தின் இயக்குநராக பணியாற்றி, அதனை வெற்றிகரமாக மாற்றிய பெருமை இவரையேச் சேரும்.
நிர்வாகத்திறன் மற்றும் தொழில்நுட்ப ஆற்றலை ஒருசேர கையாண்ட நாராயணனுக்கு வெற்றி மேல் வெற்றி கிடைத்தது. LVM-3 ராக்கெட்டில் பயன்படுத்தப்பட்ட கிரையோஜெனிக் இன்ஜின் அதிசக்தி வாய்ந்தது. இது முழுக்க முழுக்க உள்நாட்டிலேயே இவரது தலைமையின் கீழ் தயாரிக்கப்பட்டது தான்.
நாராயணன் தலைமையிலான குழுவின் அர்ப்பணிப்பு தான், சந்திராயன்-3 ராக்கெட் நிலவில் தரையிறங்க முக்கியக் காரணமாக அமைந்தது. மேலும் நிலவை மென்மையான முறையில் சுற்றி வருவதற்கும் தகுந்த ஏற்பாடுகளைச் இந்தக் குழுவினர் செய்தனர். இதற்கு அடிப்படையாக அமைந்தது சந்திராயன்-2 ராக்கெட்டின் தோல்விதான். சந்திராயன்-2 ஏன் நிலவில் சரியாகத் தரையிறங்கவில்லை; தவறு எங்கே நிகழ்ந்தது; அதை எப்படி சரிசெய்யலாம் என்பதையெல்லாம் சிந்தித்து, அத்தவறுகள் சந்திராயன்-3 ராக்கெட்டில் ஏற்படாதவாறு, உழைத்துக் காட்டினார் நாராயணன்.
விண்வெளித் துறையில் பல்வேறு சாதனைகள் புரிந்த இவரை விருதுகளும் அலங்கரிக்கத் தவறவில்லை. இந்திய விண்வெளித் துறையில் சிறந்த பங்களிப்பிற்கான விருது, கிரையோஜெனிக் இன்ஜினைத் தயாரித்ததற்காக குழும விருது, ஏரோநட்டிக்கல் சொசைட்டி ஆஃப் இந்தியா வழங்கிய தேசிய அளவிலான விருது, சந்திராயன்-3 மற்றும் ஆதித்யா L-1 வெற்றிகளைப் பாராட்டி வழங்கப்பட்ட விருதுகள் உள்பட சுமார் 25 விருதுகள் இவரை அலங்கரித்துள்ளன.
‘கல்வியே துணை’ மற்றும் ‘உழைத்தால் முன்னேறலாம்’ போன்ற உயரிய தத்துவங்களைச் செயலில் காட்டி இன்றைய இளைஞர்களுக்கு முன்னோடியாகத் திகழ்கிறார் இஸ்ரோ தலைவர் வ.நாராயணன். தமிழ் மற்றும் ஆங்கில வழிக் கல்வி எனப் பாராமல், உழைத்தால் நிச்சயமாக உயரலாம் என்று இளைஞர்களுக்கு இவர் அறிவுரையையும் வழங்கியிருக்கிறார். கற்ற கல்வி ஒருவரை எப்போதும் கைவிடாது என்பது, இஸ்ரோ தலைவரின் மூலம் மீண்டும் ஒருமுறை நிரூபணமாகியுள்ளது.