மத்திய அரசின் தேசிய மின் ஆளுமை விருதை வென்று சாதனை படைத்துள்ளார் வாரணாசி மாவட்ட ஆட்சியர் எஸ்.ராஜலிங்கம். இவர் தமிழகத்தைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் எப்படி இந்த விருதை வென்றார்? இவருடைய பின்னணி என்ன என்பதை அலசுகிறது இந்தப் பதிவு.
தேசிய மின் ஆளுமை விருதை கடந்த 2003 ஆம் ஆண்டு முதல் மத்திய அரசு ஆண்டுதோறும் வழங்கி வருகிறது. இந்தியாவில் மிகச் சிறப்பாக செயல்படும் நிர்வாக அமைப்புக்கு இவ்விருது வழங்கப்படுகிறது. அவ்வகையில் இந்த விருதுக்கு இந்தியாவில் உள்ள யூனியன் பிரதேசங்கள், மத்திய அமைச்சகம், மத்திய இணை அமைச்சகம், மத்திய மாநில அரசு நிறுவனங்கள், மாவட்ட நிர்வாகங்கள், உள்ளாட்சி நிர்வாகங்கள், தனியார் கல்வி மற்றும் ஆய்வு நிறுவனங்கள் விண்ணப்பித்து வருகின்றன.
நடப்பாண்டும் பல அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் தேசிய மின் ஆளுமை விருதுக்கு விண்ணப்பித்தனர். ஆனால், இவ்விருதை இந்த ஆண்டு தட்டிச் சென்றவர் ஒரு தமிழர் என்பது தமிழ்நாட்டிற்கே பெருமை சேர்க்கும் விஷயமாகும். உத்தரபிரதேசத்தில் இருக்கும் வாரணாசி மாவட்ட ஆட்சியராக பணிபுரியும் தமிழ்நாட்டைச் சேர்ந்த எஸ்.ராஜலிங்கம் தான் இந்த விருதைப் பெறப் போகிறார். மாவட்ட ஆட்சியர் ராஜலிங்கத்தின் தலைமையில் கீழ் இயங்கும் அதிகாரிகள் குழுவிற்கு தேசிய மின் ஆளுமை விருதை அறிவித்து இருக்கிறது மத்திய நிர்வாக சீர்திருத்தம் மற்றும் பொதுமக்கள் குறைத் தீர்ப்பு துறை அமைச்சகம்.
லேப் மித்ரா திட்டம்:
பொதுமக்கள் அடிக்கடி மருத்துவமனைகளுக்கு வந்து செல்வதை தவிர்க்கும் விதமாக, வட்டார அளவில் உள்ள அரசு மருத்துவமனைகளில் லேப் மித்ரா திட்டத்தை கடந்து ஆண்டு அறிமுகப்படுத்தி உள்ளார் எஸ்.ராஜலிங்கம். இத்திட்டத்தின் படி, பொதுமக்களின் மருத்துவப் பரிசோதனை முடிவுகள் அனைத்தும் இணையத்தில் பதிவேற்றம் செய்யப்படும். பிறகு, முடிவுகள் குறுஞ்செய்தியாக பொதுமக்களுக்கு அனுப்பி வைக்கப்படும். இதன்மூலம், பொதுமக்களின் வீண் அலைச்சலைக் குறைக்க முடியும். வாரணாசி மாவட்ட ஆட்சியர் எஸ்.ராஜலிங்கத்தின் இந்த புதிய திட்டத்திற்குத் தான் தேசிய மின் ஆளுமை விருது கிடைத்துள்ளது.
மும்பையில் நடைபெறப் போகும் தேசிய மின் ஆளுமை கருத்தரங்கு நிகழ்வில் எஸ்.ராஜலிங்கம் இவ்விருதை பெற்றுக் கொள்ள இருக்கிறார். இத்திட்டத்தின் மூலம் சுமார் 2 இலட்சம் பொதுமக்கள் பயனடைகிறார்கள் என்றும், இத்திட்டம் பொது சுகாதார நிலையங்களுக்கு கூடிய விரைவில் விரிவுபடுத்தப்படும் என்றும் கூறப்படுகிறது.
எஸ்.ராஜலிங்கம்:
தமிழ்நாட்டில் உள்ள தென்காசி மாவட்டத்தின் கடையநல்லூரைச் சேர்ந்தவர் தான் எஸ்.ராஜலிஙகம். திருச்சியில் உள்ள என்ஐடி கல்லூரியில் பொறியியல் பட்டப்படிப்பை முடித்துள்ளார். மாவட்ட ஆட்சியராக வலம் வர வேண்டும் என்ற இவரது கனவு கடந்த 2009-இல் நனவானது. கடந்த 2006 ஆம் ஆண்டில் சிவில் சர்வீசஸ் தேர்வில் தேர்ச்சி பெற்று உத்தர பிரதேசத்தின் ஐபிஎஸ் அதிகாரியாக பதவியேற்று தனது பணியை சிறப்புறச் செய்துள்ளார்.
இருப்பினும், தொடர்ந்து படித்து 2009 இல் ஐஏஎஸ் பிரிவில் தேரிச்சி பெற்றார். அதன் பிறகு, ஐபிஎஸ் ஆக பணியாற்றிய அதே மாநிலத்திலேயே ஆட்சியராக பொறுப்பேற்று மக்கள் பணி ஆற்றி வருகிறார். இவருடைய தந்தையார் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மேலாளராகவும், தாயார் கடையநல்லூர் நகராட்சி கவுன்சிலராகவும் பணியாற்றி உள்ளார்கள்.