தூங்கும் பொழுது இரத்தத்தை ஊறிஞ்சித் தொல்லை தரும் உயிரினங்கள் இரண்டு. ஒன்று கொசு, மற்றது மூட்டைப்பூச்சி. மூட்டைப் பூச்சியானது வெப்ப மண்டல நாடுகளுக்கே உரிய உயிரினம். இது பூச்சி வகைகளிலுள்ள சைமிசிடேயி (Cimicidae) என்ற குடும்பத்தைச் சார்ந்ததாகும். மூட்டைப் பூச்சியின் உருவம் நீண்டவட்ட வடிவமாகும். தலையின் முன்புறம் இரு நுண் உணர்விகள் உண்டு. இந்த நுண் உணர்விகளில் சக்தி வாய்ந்த உரோமங்கள் உள்ளன. வெப்ப நிலையின் மாறுதலை அறிந்துகொள்ள இவைகள் உதவுகின்றன. மேலும் மனித உடலிலிருந்து வெளி வரும் இரத்த வாடையை இந்த உரோமக் கற்றைகள்தான் மூட்டைப் பூச்சிக்கு உணர்த்துகின்றன.
மூட்டைப் பூச்சியின் தாடையானது நீண்ட குழல் போல இரத்தத்தை உறிஞ்சுவதற்கு ஏற்ற வகையில் அமைந்துள்ளது. இரத்தத்தை உறிஞ்சும்போது இரத்தம் உறைதலை உமிழ்நீர்ச் சுரப்பிகள் தடை செய்கின்றன. இரத்தத்தை உறிஞ்சும்பொழுது இந்த உறிஞ்சு குழலானது முன்புறம் நீட்டப் படுகிறது. ஏனைய சமயங்களில் வாயின் கீழ்ப்பகுதியில் மடக்கப்படுகிறது.
மூட்டைப் பூச்சி ஓர் இடத்தில் இருப்பின் அங்கிருந்து தாங்க முடியாத நாற்றம் சில சமயங்களில் வருவதுண்டு. அதன் பின் கால்களில் அமைந்திருக்கும் சில சுரப்பிகளின் உற்பத்தியே இதற்குக் காரணம் என்று உயிரியலார் கருதுகின்றனர்.
மூட்டைப் பூச்சியை ஒருசில நாடுகளில் மருந்தாகப் பயன்படுத்துகின்றனர். பண்டைக் காலத்தில் கிரேக்கர்கள் மூட்டைப் பூச்சிகளை அரைத்து நீரில் கலக்கி அதை மயக்கம் நீக்கும் மருந்தாகப் பயன்படுத்தினராம். பாம்பின் விஷத்தைப் போக்கும் நச்சு முறிவு மருந்தாகவும் இது பயன்பட்டதாம்.
மூட்டைப் பூச்சியானது சுவரிலுள்ள வெடிப்புக்கள், மேஜை, நாற்காலி, கட்டில் போன்றவற்றின் அடிப்பகுதி முதலிய வற்றில் மறைந்து வாழும். இரவில்தான் இரை தேட வெளி வரும்.
இரத்தத்தை உறிஞ்சும்பொழுது மனிதனின் உடலில் ஏறி இரத்தத்தை உறிஞ்சுவதை மூட்டைப் பூச்சி விரும்பு வதில்லை. படுக்கையில் பதுங்கிக்கொண்டு தன் உறிஞ்சியை மாத்திரம் உடலில் செலுத்தி உறிஞ்சவே முயற்சி செய்கிறது.
ஒரு மூட்டைப் பூச்சி வயிறு நிறைய இரத்தம் உறிஞ்ச
சுமார் பத்திலிருந்து பதினைந்து நிமிடமாகும். இரத்தம் வயிற்றில் நிறைந்துகொண்டிருக்கும்பொழுதே அதன் மலக் குடலிலிருந்து மலம் வெளியேற்றப்படும். ஒருதடவை வயிறு நிறைய இரத்தம் குடித்துவிட்டால் அது ஜீரணமாக ஒரு வார காலமாகும். இரத்தம் இல்லாமல் சுமார் ஒரு வருடம் மூட்டைப் பூச்சி உயிர் வாழும் தன்மையினை உடையது. இக்காலங்களில் இதன் உடல் காய்ந்த சருகு போல வெளுத்துக் காணப்படும்.
மூட்டைப் பூச்சியின் முட்டையானது முத்துப் போல வெண்மை நிறம் உடையது. நீண்ட வட்ட வடிவமுடைய இந்த முட்டையின் தலைப்பகுதி சிறிது தட்டையாயி ருக்கும். ஒரு பெண் மூட்டைப் பூச்சியானது ஒரு தடவைக்கு 100லிருந்து 250 முட்டைகளை இடும். ஆறிலிருந்து பத்து நாட்களுக்குள் முட்டையிலிருந்து இளசுகள் வெளிவரும். ஏழு முதல் பத்து வாரங்களுக்குள் இளசானது முழு வளர்ச்சியடையக் கூடும்.
மூட்டைப் பூச்சியின் மூலம் ஒரு சில வியாதிகள் பரவக்கூடும் என்று விலங்கியலார் கருதுகின்றனர். டைபாய்டு, பிளேக், தொழுநோய் போன்ற நோய்களை உண்டாக்கும் வைரஸ்களும் (Virus), பாக்டீரியாக்களும் (Bacteria) மூட்டைப் பூச்சிகளின் வயிற்றில் வாழ்வதைக் கண்டுபிடித்துள்ளனர். வீட்டிலே வாழும் மூட்டைப் பூச்சிகளைவிட, சினிமா அரங்குகளிலும், விடுதிகளிலும் உள்ள மூட்டைப்பூச்சிகள் அதிக அளவில் தொற்று நோயைப் பரப்புகின்றன.
இவ்வாறு நித்திரையைக் கெடுத்து இரத்தத்தை உறிஞ்சி, நோயைப் பரப்பும் மூட்டைப் பூச்சிகளை ஒழிப்பதில் நாம் தீவிர கவனம் செலுத்த வேண்டும். வீட்டிலுள்ள நாற்காலி, மேஜை போன்ற மரச்சாமான்கள், சுவர்களிலுள்ள இடைவெளிகள் முதலியவற்றை வாரம் ஒருமுறை சுத்தமாகத் துடைத்து மூட்டைப் பூச்சிகள் வளரவிடாமல் தடுக்க வேண்டும்.
-கே.கே.ராஜன்