
ஹாய் குட்டீஸ்,
உலக புத்தக தினம் அல்லது சர்வதேச புத்தக தினம் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 23ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. புத்தக வாசிப்பின் முக்கியத்துவத்தை இந்த நாள் வலியுறுத்துகிறது.
புத்தகங்கள் புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்வதற்கும் உங்கள் மனநலனை மேம்படுத்துவதற்கும் உதவுகின்றன.. புத்தக வாசிப்பு ஒரு மனிதனை ஒழுங்குப்படுத்தும் என்பது பொதுவான நம்பிக்கை..
உலக புத்தக மற்றும் பதிப்புரிமை தினம் 1995 ஆம் ஆண்டு தொடங்கியது. ஏப்ரல் 23ஆம் தேதியை யுனெஸ்கோ உலகளவில் உள்ள எழுத்தாளர்களைக் கொண்டாடும் நாளாக அறிவித்தது.
இந்த நாள் உலகின் சிறந்த எழுத்தாளர்களான வில்லியம் சேக்ஸ்பியர், பிரபல ஸ்பானிஷ் வரலாற்று ஆசிரியர் இன்கா கார்சிலாசோ டி லா வேகா ஆகியோரின் நினைவு நாளை குறிக்கும் வகையிலும் அமைந்துள்ளது.
உலக அளவில் புகழ் பெற்ற பிரபல எழுத்தாளர்களான மாரிஸ் ட்ரூன், ஹால்டோர் கே. லக்ஸ்னஸ், விளாடிமிர் நபோகோவ் மற்றும் மானுவல் மெஜியா வலேஜோ ஆகியோரின் பிறந்தநாளாகவும் இந்த நாள் அமைந்துள்ளது.
இந்த புகழ் பெற்ற எழுத்தாளர்கள் உலகை விட்டு சென்றாலும் இலக்கியத்திற்கு அளித்த மகத்தான பங்களிப்பு தலைமுறை தலைமுறையாக புத்தக வாசகர்களையும், எழுத்தாளர்களையும் ஊக்குவித்து வருகிறது.
புத்தக வாசிப்பின் நன்மைகள்:
இந்த டிஜிட்டல் உலகில் நாம் எந்த விஷயத்திலும் தொடர் கவனம் செலுத்தமுடியவில்லை என்பதே உண்மை. ஆனால் புத்தக வாசிக்கும் பழக்கமானது கவனத்தை அதிகரிக்கும் திறனை கொண்டது.
புத்தக வாசிப்பு உங்கள் வாழ்க்கையை அழகாக மாற்றிவிடும். புத்தக வாசிப்பு பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள மற்றும் கட்டாயப்படுத்த வேண்டிய முக்கிய காரணங்களை கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டும்.
புத்தகங்களை வாசிப்பதால் புதிய புதிய சொற்களை கற்க முடியும். இதனால் உங்களின் சொற்களஞ்சியம் கணிசமாக விரிவடையும்.
புதிய சொற்களை நீங்கள் கற்கும் போது உங்கள் அறிவு மேம்பட்டு மொழி பற்றிய தெளிவான புரிதல் கிடைக்கும். இதனால் உங்கள் எழுத்து திறனும் மேம்படும்.
மன அழுத்தத்தை குறைக்க புத்தக வாசிப்பு ஒரு சிறந்த வழியாகும். அன்றாட சலசலப்புகளில் இருந்து மனதை விலக்கி ஓய்வெடுக்கவும் அமைதியை பெறவும் இது உதவுகிறது.
நீங்கள் மன அழுத்தத்தைக் குறைக்க விரும்பினால் உங்களுக்கு பிடித்தமான புத்தகத்தை எடுத்து படிக்க தொடங்குங்கள். முக்கியமாக இரவு நேரத்தில் படியுங்கள். அது உங்கள் மனதில் உள்ள காயங்களை சோகங்களை எல்லாம் நீக்கி விடும்.
புதிய புதிய புத்தகங்களை படிக்கும் போது நம்முடைய அறிவு மேன்மேலும் விரிவடைகிறது. கற்றுக் கொண்டே போகலாம். நமக்கு இதுவரை தெரியாத பல விஷயங்களை நூலகத்தில் இருக்கும் பழைய புத்தகங்கள் நமக்கு சொல்லும்.
புத்தகங்களை படிப்பதால் கற்பனை திறன் அதிகமாகும். நம்முடைய செறிவுத் தன்மை விரிவடையும்.
இன்றைய காலத்து குழந்தைகளிடம் உள்ள மிகப் பெரிய குறைபாடு இந்த செறிவு தன்மைதான். காரணம் புத்தகம் படிக்கும் பழக்கமே போய் விட்டது. எதற்கெடுத்தாலும் இப்போது google தான்.
புத்தகத்தை படிக்கும் பொறுமையே போய் விட்டது. முன்பெல்லாம் இரவில் நாவல்களை படித்து விட்டு தூங்குவார்கள். ஆனால் இப்போதோ laptop பார்த்து விட்டு தூங்குகிறார்கள்.
புத்தகத்தை படிப்பதால் ஞாபக சக்தி பெருகும். சிந்தனை திறன் வளரும். பேச்சுத் திறன் அதிகரிக்கும். எண்ணங்களில் மாற்றம் வரும். புத்தக வாசிப்பினால் மேன்மேலும் புதிய புதிய அனுபவங்கள் உருவாகலாம்.
ஆகவே இந்த புத்தக நாளில் நாம் எல்லோரும் புத்தக வாசிப்பின் பெருமையையும் பலனையும் உணர்ந்து, பிறருக்கும் எடுத்துக் கூறி மீண்டும் இதை உயிர்பிக்க வேண்டும்.
இந்த கோடை விடுமுறையில் நூலகத்திற்குச் செல்லுங்கள். பயனுள்ள பல புத்தகங்களை படியுங்கள்!