
உலக புத்தக தினம் இந்தியாவிலும் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 23-ம் தேதி கொண்டாடப்படுகிறது. புத்தகங்களை வாசிப்பதற்கும் வெளியிடுவதற்கும் மக்களை ஊக்குவிப்பதற்காகவும் விழிப்பூட்டுவதற்காகவும் இந்தியாவின் பல பகுதிகளில் இது நினைவுகூரப்படுகிறது. உலக புத்தகம் மற்றும் பதிப்புரிமை தினம் என்பது புத்தகங்கள் மற்றும் வாசிப்பின் இன்பத்தை ஊக்குவிப்பதற்கான ஒரு கொண்டாட்டமாகும். ஒவ்வொரு ஆண்டும், ஏப்ரல் 23-ம் தேதி புத்தகங்களின் நோக்கத்தை அங்கீகரிக்க உலகம் முழுவதும் கொண்டாட்டங்கள் நடைபெறுகின்றன. கடந்த காலத்திற்கும் எதிர்காலத்திற்கும் இடையிலான இணைப்பு, தலைமுறைகளுக்கும் கலாச்சாரங்களுக்கும் இடையிலான ஒரு பாலமாகும்.
2025-ம் ஆண்டு உலக புத்தக தினத்திற்கான கருப்பொருள் "உங்கள் வழியைப் படியுங்கள்" என்பதாகும். இந்தக் கருப்பொருள் குழந்தைகள் வாசிப்பை ஒரு வேலையாகப் பார்ப்பதற்குப் பதிலாக, தங்கள் சொந்த பாணியில் அதைக் கண்டறிந்து, அதில் மகிழ்ச்சியைக் காண ஊக்குவிக்கிறது. வாசிப்பை ஒரு மகிழ்ச்சிகரமான மற்றும் தனிப்பட்ட அனுபவமாக மாற்றுவதன் முக்கியத்துவத்தை இது வலியுறுத்துகிறது.
புத்தகங்கள் காகிதத்தில் செய்யப்பட்ட அறிவு பொக்கிஷங்கள். தற்போது செல்போனில் அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள முடியும். ஆனால் அவை எல்லாம் புத்தகங்களில் இருந்து பதிவேற்றப்பட்டதே.
வாசிப்பு பழக்கம்:
பல லட்சக்கணக்கான புத்தகங்கள் இன்னும் மின்னியல் பதிவேற்றத்துக்கு உட்படுத்தப்படவில்லை. அதனால் புத்தகங்கள் எப்போதும் மதிப்பில்லாதது. ஒரு மனிதனுக்கு வாசிப்பு பழக்கம் ஏற்பட்டு விட்டாலே போதும். அவனை செதுக்குவதற்கு அந்த புத்தகத்தை தவிர வேறு உளி தேவையில்லை. கரடு முரடான எண்ணங்களையும் புத்தகங்கள் கட்டுப்படுத்தும். அலைபாயும் சிந்தனைகளை வாசிப்பு பழக்கம் அமைதிப்படுத்தும். ஓலைச்சுவடியில் இருந்து நம்முடைய இலக்கிய, இலக்கணங்கள் காகிதமாக அச்சில் ஏற்றப்பட்டு, புத்தகமாக உருவகம் பெற்ற பின்னரே அது மக்களிடம் சென்றது.
சினிமா, அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு என எதையாவது படித்துக்கொண்டே இரு. உன் மூளைக்கு அதைவிட வேறு புத்துணர்ச்சி கிடைக்காது என்று உளவியல் அறிஞர்கள் கூறுவார்கள்.
பழமொழி:
செல்போனின் அதிதீவிர வளர்ச்சியால் புத்தகங்களை வாசிப்பது என்பது 90 சதவீதம் குறைந்து விட்டது. அனைத்து தகவல்களும் செல்போனில் உள்ள இணையதள சேவைகளில் புதுப்புது செயலிகளில் கிடைத்து விடுகிறதே என்று புத்தகத்தை கைவிட்டு விடக்கூடாது. கதையோ, நாவலோ, பாடலோ, செய்யுளோ அதை புத்தகமாக பார்க்கும்போது உயிருள்ள பொருள்போல தெரியும். இந்த உணர்வு செல்போன் பயன்பாட்டில் கிடைக்காது.
புத்தகங்களை தொடர்ந்து வாசிப்பது ஒரு சிறந்த பழக்கம். தொடக்கத்தில் சோம்பல் ஏற்படும். ஆனால் தொடர் முயற்சி இருந்தால் எந்த வேலை இருந்தாலும் அதை அப்படியே விட்டுவிட்டு புத்தகம் படிக்க தோன்றும்.
கண்டதை படித்தவன் பண்டிதன் ஆவான் என்ற பழமொழி உள்ளது. கண்டதை என்றால் கண்ணில் கண்ட எல்லாவற்றையும் என்று பொருள்படும். கண்ணில் படும் அனைத்து புத்தகங்களையும் படிக்க தொடங்கிவிட்டாலே நமக்கே தெரியாமல் நாம் பண்டிதர்களாகிவிடுவோம்.
உலக புத்தக தினம்:
இப்படிப்பட்ட புத்தகங்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் ஆண்டுதோறும் ஏப்ரல் 23-ந் தேதி உலக புத்தக தினமாக கடைபிடிக்கப்படுகிறது. 1995-ம் ஆண்டு பாரிஸில் நடைபெற்ற யுனெஸ்கோவின் பொது மாநாட்டில் ஏப்ரல் 23-ந் தேதியை உலக புத்தக தினமாக அறிவித்தது. வில்லியம் ஷேக்ஸ்பியர், மிகுவல் டி செர்வாண்டஸ் மற்றும் இன்கா கார்சிலாசோ டி லா வேகா உள்ளிட்ட பல முக்கிய எழுத்தாளர்கள் இறந்த தேதி இது. மறைந்த பல எழுத்தாளர்கள், புத்தகங்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு இந்த நாளில் உலகளாவிய அஞ்சலி செலுத்தவும், அனைவரும் புத்தகங்களை அணுக ஊக்குவிக்கவும் இது ஒரு இயற்கையான தேர்வாகும். ரஷ்யப் படைப்பாளிகள் புத்தக உரிமைக்கும் (காப்புரிமை) முக்கியத்துவம் அளிக்கப்படவேண்டும் என்று கருதியதால் ஏப்ரல் 23 உலகப் புத்தகம் மற்றும் புத்தக உரிமை தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது.
செல்போனை மட்டுமே நாடும் கண்களுக்கு இப்போது புத்தகங்கள் தெரிவதில்லை. இது ஆரோக்கியமான பழக்கம் இல்லை. உடற்பயிற்சி எப்படி உடலை சீராக்குகிறதோ அதுபோல் புத்தகம் வாசிப்பது உள்ளத்தையும், அறிவையும் சீராக்கும். எனவே விட்டு விடாமல் நாள்தோறும் புத்தகங்களை வாசிப்போம். நேசிப்போம்.