ஒரு வாரமாக ஆள் நடமாட்டம் கொஞ்சம் அதிகமாகத்தான் இருக்கிறது. ஆனால் வருபவர்களும் போகிறவர்களும் அவரைக் கண்டுக் கொள்வதே இல்லை. அப்படியே பார்த்தாலும் பார்க்காதது போல் பார்வையைத் திருப்பிக் கொண்டு நகர்ந்து விடுகிறார்கள்..அவர் அதைப் பற்றியெல்லாம் கவலைப்படவில்லை. வழக்கமாக தட்டில் விழும் ஒரு ரூபாய், இரண்டு ரூபாய், ஐந்து ரூபாய் நாணயங்கள் குறையவில்லை. அவருடைய இரண்டு வேளைக்கு அது போதுமானது. மிச்சம் கூட இருக்கும்..இருந்தாலும் இந்த திடீர் ஆள் நடமாட்டம் எதற்காக என்று அவருக்குப் புரியவில்லை..அவர் பெயர் தெரியாது. சுமார் எழுபத்தைந்து வயதிருக்கலாம். நோஞ்சான் கூடான உடம்பு. தலையில் அங்கொன்றும் இங்கொன்றுமாக ஒட்டிக் கொண்டிருக்கும் முடி. சவரம் செய்யப்படாத முகம். பழுப்பேறிய பொத்தல் பனியன். அழுக்கேறிய லுங்கி. பக்கத்தில் அழுக்கு மூட்டை. முன்னால் ஒரு அலுமினியத் தட்டு. அதில் சிதறிக் கிடக்கும் சில்லறைகள்..கடந்த பத்து வருடங்களாக அந்த வீட்டின் முன் மதிற்சுவரை ஒட்டித்தான் அவருடைய ஜாகை. இரவு பகலென்று எந்நேரமும் அந்த இடத்தை விட்டு நகர மாட்டார். குளிப்பதற்கும் மற்ற கடன்களுக்கும் மட்டும் பக்கத்திலிருக்கும் பொது கழிப்பிடத்திற்கு போவார். மழை நேரங்களில் எதிர் வரிசையில் இருக்கும் அரசு பள்ளிக்கூடத்து வராண்டாவில் ஒதுங்கிக் கொள்வார்..சொல்லப் போனால் அந்த வீட்டு மதிற்சுவரை அவர் தேர்ந்தெடுத்தற்கு முக்கியக் காரணமே அதில் பதிந்திருக்கும் முருகன் விக்கிரகம்தான். சாதாரணமாக பிள்ளையாரின் படத்தைத்தான் மதிற் சுவரில் பதிப்பார்கள். இல்லை சின்ன பிள்ளையார் சிலையை சிறு பீடம் கட்டி வைத்திருப்பார்கள். ஆனால் இந்த வீட்டுக்காரர் கொஞ்சம் வித்தியாசமாக கோயில் மாதிரியே நிர்மாணித்து முருகன் விக்கிரகத்தைப் பதித்திருந்தார்..சிறுவயதிலிருந்தே கிழவருக்கு முருகன்தான் இஷ்ட தெய்வம். மற்றவர்களையும் "முருகா" என்று தான் அழைப்பார்..சொல்லப்போனால் போகப்போக அந்த இடத்தின் பேரில் அவருக்கு ஒரு பந்தம் ஏற்பட்டுவிட்டது. சொந்த வீட்டில் இருப்பது போன்ற பந்தம். பத்து வருடங்களாக அந்த இடத்தை அவர் வேறு யாருக்கும் விட்டுக் கொடுத்ததில்லை. அந்த இடத்தில் உட்கார்ந்து மதிற்சுவரில் சாய்ந்துக் கொள்வார். முருகனின் அரவணைப்பில் சாய்ந்திருப்பது போல்தான் அவருக்குத் தோன்றும். அவராக யாரிடமும் வாயைத் திறந்து "தர்மம் பண்ணுங்க" என்று கேட்க மாட்டார். எல்லோரும் தானாக தட்டை நிரப்பிவிட்டுப் போவார்கள். எல்லாம் முருகன் வீற்றிருக்கும் அந்த சுவரின் ராசிதான் என்று அவர் நம்பினார்..அவர் அங்கு வந்த புதிதில் அந்த வீட்டுச் சொந்தக்காரருக்கு அவரைப் பிடிக்கவில்லை. முகம் சுளித்தார். ஆனால், வீட்டுச் சொந்தக்காரரின் மனைவி ஆரம்பத்திலிருந்தே சிரித்த முகத்துடன் அவரை ஏற்றுக் கொண்டாள். அவள் கையால் அடிக்கடி அவருக்கு சாப்பாடு கிடைக்கும். அதுவும் பழைய சோறு இல்லை… சுடச் சுட புதிய சோறு….ஒரு முறை அரசியல் கட்சிக்காரர்கள் அந்த சுவரில் தேர்தல் பிரசாரம் எழுத வந்தார்கள். ஆனால் அவர் தீவிரமாக அவர்களை சமாளித்து விரட்டினார்.."இங்க யாரு இருக்காங்க பார்த்தீங்கல? எங்கப்பன் முருகன். இது கோயில் முருகா. இதை அசிங்கப்படுத்த நான் அனுமதிக்கமாட்டேன்.".அதே மாதிரிதான்… சினிமா போஸ்டர், இரங்கல் போஸ்டர்… எதற்கும் அந்த சுவரில் இடம் கிடையாது… அவரை மீறி யாரும் ஒட்ட முடியாது..இதையெல்லாம் கவனித்த பிறகு அந்த வீட்டுச் சொந்தக்காரருக்கும் அவர் மீது ஒருவித அன்யோன்யம் ஏற்பட்டு விட்டது. அவரும் அடிக்கடி ஏதாவது சாப்பிட வாங்கிக் கொடுக்க ஆரம்பித்தார்..அது மட்டுமல்ல… தீபாவளி, பொங்கல் போன்ற விசேஷங்களுக்கு அவருக்கு நிச்சயம் புது வேஷ்டி, துண்டு உண்டு. ஆனால், புது வேஷ்டி கட்டி பிச்சை எடுத்தால் தட்டில் சில்லறை விழாது என்பதால் பழைய அழுக்கு லுங்கியைத் தான் கட்டுவார். எப்பவாவது கோயிலுக்கோ கடைக்கோ போகும்போது மட்டும் புது வேஷ்டியை எடுத்துக் கட்டிக் கொள்வார். அப்படிப் போகும் போது கண்டிப்பாக முகச் சவரமும் செய்துக் கொள்வார். பார்ப்பவர்களுக்கு அவர் பிச்சைக்காரர் என்றே சொல்ல முடியாது. கோயிலுக்குப் போகும் போது அங்கு வயதான பிச்சைக்காரர்களுக்கு உதவாமல் வர மாட்டார்..அந்த வீட்டுச் சொந்தக்காரர்களுக்கு ஒரே மகள். அவர் அங்கு வந்த சமயம் பள்ளியில் படித்துக் கொண்டிருந்தாள். அதன் பிறகு கல்லூரி படிப்பு முடித்து வேலைக்குப் போய் கல்யாணமும் நடந்து இப்போது கணவனுடன் அமெரிக்காவில் இருக்கிறாள்..அவள் கல்யாணத்துக்கு அவருக்கு விசேஷ அழைப்பு. அதுவும் புது வேஷ்டி, சட்டை, அங்கவஸ்திரத்துடன் அழைப்பு. முகச்சவரம் செய்துக் கொண்டு சந்தோஷமாகப் போனார்.."எங்களுக்கு ரொம்ப வேண்டப்பட்டவர்" என்று அந்த வீட்டுக்காரர்கள் மற்றவர்களிடம் அறிமுகப்படுத்தியபோது அவருக்கு நெகிழ்ச்சியாக இருந்தது.."ஏன் தெருவுல இருக்கீங்க… பேசாம எங்க வீட்டு முன்னால ஒரு ரூம் இருக்கே… அங்கேயே வந்து தங்கிக்குங்க.. எதுக்கு வீணா வெயில்லயும் மழைலயும் கஷ்டப்பட்டுக்கிட்டு…".பலமுறை அந்த வீட்டுச் சொந்தக்காரர் அவருக்கு அழைப்பு விடுத்திருக்கிறார். ஆனால் அவர் மறுத்துவிட்டார்.."நான் இந்த இடத்தை விட்டு எங்கும் வரமாட்டேன்… இது என் முருகன் இருக்கிற இடம்.. என் கடைசி மூச்சு வரை இங்கதான் இருப்பேன்.".அந்த வீட்டு மதிற்சுவரில் கோயில் மாதிரியான அமைப்பில் நின்றிருந்த அந்த முருகன் விக்கிரகம் முக்காலடி உயரம் இருக்கும். கருங்கல்லில் செய்யப்பட்டு முகம் திருத்தமாக இருக்கும். கண்களில் ஒளி… நேரில் பார்ப்பது போன்ற பிரமை ஏற்படும்… திருப்பரங்குன்றத்தில் கோயில் வாசலில் ஒரு கடையில் வாங்கியதாக அந்த வீட்டுச் சொந்தக்காரர்ஒருமுறை அவரிடம் கூறியிருந்தார்.."அப்பத்தான் இந்த வீடு கட்டிட்டிருந்தேன்… வீடு நல்லபடியா முடியணும்னு என் இஷ்ட தெய்வம் திருப்பரங்குன்றம் முருகனை வேண்டிக்கிட்டு வெளில வந்தேன். உடனே எதிர் கடைல இந்த முருகன் விக்கிரகம் என் கண்ணுல பட்டுது. என்ன பார்க்கறே? என்னைக் கூட்டிட்டுப் போ… எல்லாம் நான் பார்த்துக்கறேன்… அப்படின்னு முருகன் சொன்ன மாதிரி எனக்குப்பட்டது. உடனே கேட்ட விலையைக் கொடுத்து வாங்கிட்டு வந்து இங்க கோயில் மாதிரி கட்டி நிக்க வெச்சிட்டேன். அதுலேர்ந்து இந்த முருகன்தான் எங்களுக்குக் காவல். இப்ப முருகன் கூட நீங்களும் எங்களுக்குக் காவல்."."முருகா… முருகா…".தினமும் முருகனைக் குளிப்பாட்டி பாலாபிஷேகம் செய்து விதவிதமாக அலங்காரம் செய்து, பூமாலை அணிவித்து, மணி அடித்து கற்பூரம் காட்டி மகிழ்வாள் அந்த வீட்டு அம்மா. அந்த தெய்வானுபவத்தை மெய்மறந்து அவர் பார்த்துக்கொண்டிருப்பார்..இப்படியிருக்கும் போதுதான் திடீரென்று ஒரு நாள் மாலை அலுவலகத்திலிருந்து வந்த அந்த வீட்டுச் சொந்தக்காரர் மயங்கி விழுந்தார்… அதன் பிறகு எழுந்திருக்கவே இல்லை..அந்த அம்மா இடிந்து போய் விட்டாள்..மகளும் மருமகனும் அமெரிக்காவிலிருந்து வந்து காரியங்கள் முடிந்தது..சில நாட்கள் மௌனமாகக் கழிந்தது. அவரும் இயல்புக்கு வரமுடியாமல் தவித்துக் கொண்டிருந்தார்..அதன் பிறகு ஒரு வாரமாக அதிகமான ஆள் நடமாட்டம்..என்ன விஷயம் என்று அவரால் தெரிந்துக்கொள்ள முடியவில்லை. அந்த வீட்டுச் சொந்தக்காரர் போனதிலிருந்து அந்த அம்மா வெளியிலேயே வரவில்லை. மகளும் மருமகனும்தான் அடிக்கடி வெளியே போய் வந்தார்கள். கூடவே யார் யாரோ வந்து போகிறார்கள்..சில சமயங்களில் அவர் மதிற்சுவர் வழியாக எம்பிப் பார்க்கும் போதெல்லாம் மகளும் மருமகனும் சிலருடன் ஏதோ விவாதித்துக் கொண்டிருப்பது தெரியும். தொலைவிலிருந்து அவருக்கு எதுவும் கேட்காது… புரியாது….மறுநாள் பொறுக்காமல் அந்த வீட்டில் வேலை செய்யும் ஆயாவை மடக்கினார்.."என்ன நடக்குது இந்த வீட்டுல… தினம் யார் யாரோ வராங்க… ஏதேதோ பேசறாங்க…".ஆயா அவரை ஒரு மாதிரியாகப் பார்த்தாள்…."உனிக்கு விசயமே தெரீயாதா? அய்யா பூட்டதுல அம்மா ரொம்பக் கலங்கிப் பூட்டாங்கோ… இனிமேட்டு அவங்களை தனியா வுட முடியாதுன்னு அவுங்க பொண்ணும் மருமவனும் முடிவு பண்ணிட்டாங்கோ… அத்தொட்டு அந்த அம்மாவையும் அவுங்கோ கூட அமேரிக்கா இட்டுகினு போகப் போறாங்கோ"."அப்படியா?"."ஆமா.. அதோட இந்த வூட்டை கட்டடம் கட்டறவங்க கிட்ட கொடுக்க முடிவு பண்ணிட்டாங்கோ.. அதுல ஒரு வூடு மட்டும் அம்மா பேருல இருக்குமாம்.. அவுங்க எப்பவாவது வந்தா தங்க..".அவர் மௌனமாகக் கேட்டுக் கொண்டிருந்தார்.."இன்னும் பத்து நாளுல வூட்டைக் காலி பண்ணிருவாங்கோ. பொறவு டமால் தான். வீட்டை இடிச்சிருவாங்கோ. மொதல்ல இந்தசுவரைத்தான்யா இடிப்பானுங்கோ. நீ வேற எடத்துக்கு போவ வேண்டியது தான்.".ஆயா சொன்னதைக் கேட்டு அவருக்கு உலகமே இருண்டுவிட்டது.."இந்த வீடு இடிபடப் போகிறதா?.எதற்கு? நன்றாகத்தானே இருக்கிறது..சரி… வீட்டை இடிக்கட்டும்… அவர்கள் இஷ்டம்… ஆனால் எதற்கு இந்தச் மதிற்சுவரை இடிக்க வேண்டும்? அதுவும் எங்கப்பன் முருகன் இருக்கும் இடத்தை..இடிப்பவர்களுக்கு என்ன தெரியும்? சுவரோடு சுவராக அவர்கள் முருகனையும் இடித்துத் தரைமட்டமாக்கிவிடுவார்கள்..ஐயோ… கூடாது… என் முருகன் இடிபடக் கூடாது… என்னால் அதைத் தாங்க முடியாது… தாங்க முடியாது… என் உயிர் இருக்கிறவரை அது நடக்காது… முருகா… முருகா…".மனம் அரற்ற… கண்கள் இருள… தலை சக்கரத்தைவிட வேகமாகச் சுற்ற….அப்படியே மயங்கி அந்தச் சுவரில் சாய்ந்தார்….மறுநாள் காலையில் அந்த வீட்டு அம்மா வெளியே வந்தாள்…."வீடு இடிபடப் போவதை அவரிடம் சொல்ல வேண்டும். அவரை வேறு பாதுகாப்பான இடம் பார்த்துக்கொள்ளச் சொல்லவேண்டும்… அவர் சம்மதித்தால் ஏதாவது முதியோர் இல்லத்தில் கூடச் சேர்த்து விடலாம்… இதோ… கணிசமான தொகை… இதை உங்கள் பாதுகாப்புக்காக வைத்துக் கொள்ளுங்கள்… இனிமேல் நீங்கள் பிச்சை எடுக்க வேண்டாம் என்று சொல்ல வேண்டும்…".அடுத்தடுத்து நினைத்துக் கொண்டே கேட்டைத் திறந்து கொண்டு வெளியே வந்தவளுக்கு அதிர்ச்சி….வழக்கமாக அவர் உட்கார்ந்திருக்கும் இடம் வெறுமையாக இருந்தது… அவருடைய துணி மூட்டை… அலுமினியத் தட்டு… எதையும் காணவில்லை…."எங்கே போயிருப்பார்? ஒரு வேளை வீடு இடிபடப் போகும் விஷயம் தெரிந்து அவரே எங்கேயாவது போய்விட்டாரோ? அப்படிப் போனாலும் என்னிடம் ஒரு வார்த்தை கூடச் சொல்லாமல்…".சஞ்சலத்துடன் திரும்பியவள் உரைந்து நின்றாள்..சுவரில் முருகன் இருந்த கோயிலும் வெறுமையாக இருந்தது.