மாமனிதனாக ஒரு சாதாரணன் உயர்வதுதான் கதை.

மாமனிதனாக ஒரு சாதாரணன் உயர்வதுதான் கதை.

தமது எழுத்தின் மூலம் சமூக மாற்றத்தை ஏற்படுத்த விரும்பும் எழுத்தாளர். சுவாரஸ்யமான நடையில், பயனுள்ள தகவல்களையும், புதிய சிந்தனைகளையும் தமது பல்வேறு படைப்புகள் வாயிலாக கல்கி ஆண்லைன் வாசகர்களுக்கு வழங்குகிறார்.

Updated on: 

மாமனிதன் சினிமா விமர்சனம்

லதானந்த்

Reading between the Lines என்பார்கள். வரிகளுக்கிடையேயான எழுதப்படாத அர்த்தத்தை அறிந்து கொள்வது. அது திரைக்கதைக்கும் பொருந்தும். இப்போது பெருகியிருக்கும் வெப் சீரிஸ்களில் இதை பார்க்கலாம். திரைப்படங்களில் எழுதப்படும் இரண்டு காட்சிகளுக்கு இடையே கடந்துபோகும் பல உணர்வுகள் இருக்கும். அப்படி கடக்கும் உணர்வுகளில் பல அற்புதமாக விஷயங்கள் பொதிந்திருக்கும். அதை கண்டறிந்து அதை கடக்காமல் அதை காட்சியாக வடிப்பதில் வல்லவர் இயக்குனர் சீனு ராமசாமி.

செய்யாத தவறுக்காகத் தலைமறைவாய் ஆண்டுக்கணக்கில் வாழவேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டும், அதற்குக் காரணமானவரை மன்னித்துவிடுவதன் மூலம் மாமனிதனாக ஒரு சாதாரணன் உயர்வதுதான் கதை.

கழுத்து சுளுக்கும் அளவுக்குத் திருப்பங்கள் இல்லை; வண்ண வண்ன ஆடைகள் அணிந்த ஆடல் பாடல்கள் கிடையாது; அடிதடி, கடத்தல், டமால் டுமீல் நஹி; உருவக் கேலி, கவுன்டர் வசனங்களும் இல்லை; குழப்பும் வகையிலான திரைக்கதையும் இல்லை. ஆனாலும் குடும்பத்தோடு அமர்ந்து 2 மணி நேரம் பார்க்கும்படியாக இருப்பதுதான் படத்தின் மிகப் பெரிய சிறப்பு. எழுதி, இயக்கியிருக்கும் சீனு ராமசாமிக்குப் பாராட்டுகள்!

பண்ணைபுரத்தில் முதல் ஆட்டோ தன்னுடையதுதான் எனப் பெருமைப்பட்டுக்கொண்டு, எளிய வாழ்க்கை வாழும் மிகச் சாதாரண மனிதராக அறிமுகமாகும் விஜய் சேதுபதி, எந்தவித மிகை நடிப்பும் இன்றிப் பாத்திரத்தோடு பொருந்திப்போகிறார். தனது தோற்றத்துக்கும் வயதுக்கும் ஏற்ற வகையில், வளர்ந்த பிள்ளைகளுக்குத் தகப்பனாக நடித்திருக்கிறார் வி.சே.

அவரது மனைவியாக நடித்திருக்கும் காயத்ரி யதார்த்தமான மனைவி வேடத்தில் ஜொலிக்கிறார். இந்து முஸ்லீம் மத நல்லிணக்கத்தைப் பிரதிபலிக்கும் விதமாக இஸ்லாமியராக வேடம் ஏற்றிருக்கும் குரு சோமசுந்தரத்தின் நடிப்பும் அபாரம்.

பொது மக்களிடம் வசூலித்த பணத்தைச் சுருட்டிக்கொண்டு வில்லன் தலைமறைவாவதும், அதனால் ஏற்படும் பிரச்னைகளை அப்பாவி பார்ட்னர் எதிர்கொள்வதுமான காட்சிகள் மகா நதி திரைப்படத்தை நினைவூட்டுகின்றன. அதே போலக் காசி மாநகர் காட்சிகளில், 'நான் கடவுள்' தெரிவதையும் மறுப்பதற்கில்லை.

அப்பழுக்கற்ற மனிதராகச் சித்தரிக்கப்படும் வி.சே – ஒரு காட்சியில் என்றாலும் – மது அருந்துவதையும், கஞ்சா பிடிப்பதையும் தவிர்த்திருக்கலாம். அதேபோல அவரது வெள்ளைச் சட்டையில் ஒட்டியிருக்கும் ஸ்டிக்கர் பொட்டின் மூலம் அவர் தவறிழைத்ததையும் சிம்பாலிக்காகக் காட்டியிருக்க வேண்டாமோவெனத் தோன்றுகிறது.

கதையின் ஆரம்பக் கட்டம் பண்ணைபுரத்திலும், நடுப் பகுதி ஆலப்புழாவிலும், இறுதிப் பகுதி காசியிலும் நடப்பதாகக் காண்பிக்கிறார்கள்.

இளையாராஜாவும் யுவன் சங்கர் ராஜாவும் இணைந்து இசையமைத்திருக்கிறார்கள் என்றாலும் பாடல்கள் சுமார் ரகம்தான்.

"மனசில் பிரச்னை வந்தா ஓடணும்" எனப் பிள்ளைகளுக்கு விளையாட்டாய் அறிவுரை சொல்வார். வி.சே. ஆனால், அது எந்தளவுக்கு முக்கியமான வசனம் என்பது விரைவிலேயே தெரிந்துவிடுகிறது.

மோசடி செய்த தொழிலதிபர் ஏன் ஏழையாகித் தொழுநோயாளியுமாகிறார் என்ற விவரங்கள் சொல்லப்படவில்லை. ஒரு வேளை அது படத்துக்குத் தேவையில்லை என நினைத்து விட்டிருப்பார்களோ என்னமோ?

சந்தோஷமான குடும்பத்தை ஆரம்பத்தில் இழைய இழையக் காட்டும்போதே பின்னால் ஏதோ நேரப்போகிறது என்பதை யூகித்துவிடலாம்; அப்படியேதான் நடக்கவும் செய்கிறது.

பெண்ணுக்கு வாங்கின நகையை ஆட்டோவில் பறிகொடுத்தவர் முகத்தில் நகை காணாமல் போன எவ்வித உணர்ச்சியும் இல்லாமல் இருக்கிறார். கவனித்துச் செப்பனிட்டிருக்கலாம்.

ஆலப்புழைக் காட்சிகளில் இயற்கை கொஞ்சுகிறது. மலையாளம் பேசும் தொழிலதிபரின் தாயாரும் தேநீர்க் கடை உரிமையாளரான பெண்ணும் வெகு இயல்பாக நடித்திருக்கிறார்கள். படம் நெடுக ஆங்கில சப் டைட்டில்கள் இருப்பதால் கதாபாத்திரங்கள் பேசும் மலையாள வசனங்கள் எளிதில் புரிகின்றன.

மொத்தத்தில் மாமனிதன் = மகத்தானவன்!

Loading content, please wait...
logo
Kalki Online
kalkionline.com