சாத்தானின் வக்கீல்

சாத்தானின் வக்கீல்
Published on

ஒரு நிருபரின் டைரி – 25

– எஸ். சந்திரமெளலி

ங்கில நியூஸ் சேனல்களில் மூத்த பத்திரிகையாளர்கள் பிரபலங்களுடன் உட்கார்ந்துகொண்டும், நின்றுகொண்டும், நடந்துகொண்டும் உரையாடும் நிகழ்ச்சிகள் பல இருந்தாலும், எனக்கு மிகவும் பிடித்தது கரன் தாபருடைய பேட்டிகள்தான். மனுஷர் நிஜமாகவே எதிராளியைக் கேள்விகளால் வறுத்தெடுப்பதில் சாத்தானின் வக்கீல்தான்! நான், யாரை பேட்டி காணப்போனாலும் முன்னதாகவே உட்கார்ந்து ஹோம் ஒர்க் செய்து அவரிடம் என்னென்ன கேள்விகள் கேட்கவேண்டும் என்று, பட்டியல் போட்டுக் கொண்டு தயாராகப் போகிறேன் என்றால், அதன் அவசியத்தை எனக்கு உணர்த்தியவர் கரன் தாபர்தான்.

அவருடைய கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் திணறும் முக்கியஸ்தர், நிலைமையைச் சமாளிப்பதற்காக ஏதாவது சொல்லிவிட்டால், உடனே இவர், "இல்லையே! இதைப் பற்றி இன்ன தேதியில் நீங்கள் இப்படித்தானே சொல்லி இருக்கிறீர்கள். ஆனால், இப்போது அதை மாற்றிச் சொல்லுகிறீர்களே?" என்று கொக்கி போடுவார். அதைச் சமாளிக்க முடியாமல் பிரபலங்கள் திணறும் காட்சி கரன் தாபரின் டி.வி. ஷோவில் சகஜம். இதன் காரணமாக பாதியில் பேட்டியை நிறுத்திக்கொண்டவர்களும் உண்டு.  ஒரு பத்திரிகையாளராக அவரது நிகழ்ச்சியை ரசித்த எனக்கு, ஒரு சமயம் அவரையே பேட்டி காண வாய்ப்பு கிடைத்தது. அதற்கு வழி செய்தவர் ஜெயலலிதா. எப்படி? கரன் தாபர் 2004ல், பி.பி.சி. யில் ஒளிபரப்பாகி வந்த தன் 'ஹார்டு டாக்" (இன்றைய டெவில்ஸ் அட்வகேட்டின் முந்தைய பிறவி) நிகழ்ச்சிக்காக சென்னைக்கு வந்து தலைமைச் செயலகத்தில் அன்றைய முதலமைச்சர் ஜெயலலிதாவை பேட்டி கண்டார்.

அதுதான் அவருக்கு ஜெயலலிதாவுடனான முதல் பேட்டி. ஆனால், அவருக்கு ஜெயலலிதா கொடுத்தது, இரண்டாவது அப்பாயின்மென்ட். இதென்ன கலாட்டா என்கிறீர்களா? ஜெயலலிதா இரண்டாவது முறையாக தமிழக முதலமைச்சர் ஆனவுடன், கரன் தாபர் அவரை பேட்டி காண விரும்பியபோது, அவரும் சில மாதங்கள் காத்திருக்கச் செய்து, அதன் பிறகு அப்பாயின்ட்மென்ட் கொடுத்தார். ஆனால், எதிர்பாராத விதமாக, பேட்டிக்கு ஒரு வாரம் முன்பாக, உச்ச நீதிமன்ற ஆணைப்படி அவர் பதவி விலகும்படி ஆனது. எனவே, அந்தச் சந்திப்பு நடைபெறவில்லை. அவர் மறுபடியும் முதல்வரானதிலிருந்து விடாமல் முயற்சி செய்ததன் பலனாக இரண்டாவது தடவையாக பேட்டிக்கு ஒப்புக்கொண்டார் ஜெ. ஆனால், அந்த பேட்டியின்போது, "உங்களோடு உரையாடியதில் எனக்கு மகிழ்ச்சி" என்று கரன் தாபர் சொல்ல, "எனக்கு உங்களுடன் பேசியதில் மகிழ்ச்சி இல்லை" என்று வெடுக்கென்று சொன்னார் ஜெ. ஒளிபரப்பானபோது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது அந்தப் பேட்டி.

பேட்டி ஒளிபரப்பான கையோடு, ஜெயலலைதாவை பேட்டி கண்ட அனுபவம் குறித்து கரன் தாபரை பேட்டி காண விரும்பினேன். ஹிந்து ராமுக்கு போன் செய்து, கரன் தாபரது டெல்லி டெலிபோன் நெம்பரை வாங்கி அவருக்கு போன் செய்தால் மனுஷர் போனை எடுக்கவில்லை. அதன் பிறகு அவரே கூப்பிட்டு விசாரித்தார். விஷயத்தைச் சொன்னதும் பகல் ஒரு மணிக்கு நேரம் கொடுத்தார்.

போனிலேயே அவரை பேட்டி கண்டேன். முதல் கேள்வியே, "இந்த பேட்டிக்கு உங்களை எப்படித் தயார் செய்துகொண்டீர்கள்?" என்பதுதான். "நான் டெல்லியில் வசித்தாலும், தினமும் ஹிந்து படிக்கிற பழக்கம் உண்டு. எனவே, தமிழ் நாட்டு அரசியல் நிலவரத்தை நன்றாகவே அறிவேன். தவிர, எங்கள் ஆய்வுக் குழுவினர் ஜெயலலிதாவின் பேட்டிகள், அவரை விமர்சித்து எழுதப்பட்ட தலையங்கங்கள், கட்டுரைகள் ஆகியவற்றைப் படித்து ஏரளமான தகவல்களைத் திரட்டினார்கள். அவை அனைத்தையும் அடிப்படையாக வைத்து நான் கேள்விகளைத் தயார் செய்தேன்" என்றார்.

ஜெயலலிதாவின் பேட்டி தலைமைச் செயலகத்தில்தான் படம் பிடிக்கப்பட்டது. அதுவும் ஜெயலலிதாவின் தேர்வுதான். 2004, செப்டம்பர் 15ஆம் தேதி, கோட்டையில் உள்ள பத்தாவது மாடியில் இருக்கும் கான்ஃபிரன்ஸ் ஹாலில்அவருக்கு ராசியான பச்சை பின்னணியில் ஒரு சிறு வட்டமான மேஜை போடப்பட்டு, அதில் எதிரெதிரே ஜெவும், கரன் தாபரும் அமர அந்த சுறு சுறு பேட்டியின் ஷூட்டிங் நடந்தது. 23 நிமிடம் பேட்டி ஒளிப்பதிவானது. ஒளிப்பதிவு முடிந்தவுடன் எழுந்து சென்றுவிட்டார். ஒளிப்பதிவு செய்யப்பட்ட அந்தப்  பேட்டியில் எதையும் வெட்டாமல் அப்படியே ஒளிபரப்பானது.

"அவரை மடக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன் நீங்கள் டெல்லியிலிருந்து புறப்பட்டு வந்தீர்களா மிஸ்டர் தாபர்?" என்று கேட்டவுடன் ஒரு மைல்டு சிரிப்பு சிரித்துவிட்டு, "ஒரு விஷயத்தை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். நான் தமிழ்நாட்டு அரசாங்கத்தின் மக்கள் தொடர்பு அதிகாரியும் இல்லை. அ.இ.அ.தி.மு.க. கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளரும் இல்லை. பி.பி.சி.யில் ஒளிபரப்பாகும் ஒரு நிகழ்ச்சியின் பேட்டியாளர். நிகழ்ச்சியின் பெயரே "ஹார்டு டாக்" மக்கள் மனதில் நினைக்கிற விஷயங்களை, கேட்க நினைக்கும் கேள்விகளை கேட்பதுதான் என் கடமை. எனவே, அத்தகைய கேள்விகளைக் கேட்பதுதான் என்னுடைய நோக்கமே தவிர, அவரை மடக்க வேண்டும் என்பதல்ல" என்றார்.

"இந்தப் பேட்டிக்கு நான் ஒப்புக்கொண்டிருக்கக் கூடாது" என்று பேட்டியின்போது ஜெ குறிப்பிட்டது குறித்து கரன் தாபரது கமென்ட் இதுதான்: "பேட்டிக்கு ஒருவர் ஒப்புக்கொள்வதும், ஒப்புக்கொள்ளாமல் இருப்பதும் அவரவர் விருப்பம். அதேபோல பேட்டி அளிக்கும்போதும், விரும்பாத கேள்விகளுக்கு பதில் சொல்லாமல் இருப்பதும் அவரது உரிமை. அது பற்றி நான் விமர்சனம் செய்யக் கூடாது". மற்றபடி ஜெயலலிதா என்ற அரசியல்வாதியைப் பற்றி அவரது கருத்து: "அவர் மீது எனக்கு மதிப்பும் மரியாதையும் உண்டு. சில விஷயங்களில் அவர் என்னை வியப்பில் ஆழ்த்தி இருக்கிறார்."

"இன்னொரு தடவை நீங்கள் பேட்டிக்கு நேரம் கேட்டால், அவர் சம்மதிப்பார் என நினைக்கிறீர்களா?" என்று கரன் தாபரது வாயைக் கிண்டும் விதமாக கேட்டபோது, வழக்கமாக பேட்டி காண்கிறபோது இருக்குமே அதுமாதிரி தன் முகத்தை படு சீரியசாக வைத்துக் கொண்டு " எனக்குத் தெரியாது; அது அவருடைய உரிமை" என்றார்.

இந்த பேட்டியைத் தொடர்ந்து கரன் தாபரது அலுவலகத்தில் மீடியா தொடர்பினை கவனித்து வந்த ஆராவமுதன் என்பவரது நட்பு கிடைத்தது. அவரிடம் அடுத்த முறை கரன் தாபர் சென்னை வரும்போது நேரில் சந்தித்து பேட்டி காண விரும்புகிறேன் என்று சொன்னதை நினைவில் வைத்துக்கொண்டு 2006 கடைசியில் தாபர், வைகோவை பேட்டி காண சென்னை வந்தபோது தகவல் சொன்னார். இந்த முறை தாபர் பேட்டி கண்டது சி.என்.என் – ஐ.பி.என். சேனலின் 'டெவில்ஸ் அட்வகேட்' நிகழ்ச்சிக்காக. பகல் 12 மணி வாக்கில் தாபருக்கு போன் செய்து, எங்கே சந்திப்பது என்று கேட்டுத் தெரிந்து கொள்ளும்படி எனக்கு ஆராவமுதனிடமிருந்து தகவல். அதற்குள் கரன் தாபரது கேள்விகளால் கடுப்பாகிப் போன வைகோ பாதியில் வாக் அவுட் செய்ய, தாபர் அவரை சமாதனப்படுத்தி, மீண்டும் பேச வைத்ததாக எனக்கு டெல்லியிலிருந்து ஆராவமுதன் அப்டேட் கொடுத்தார். கரன் தாபருக்கு போன் செய்தபோது, என்னை நேரே ஏர் போர்ட்டுக்கு வரச்சொல்லிவிட்டார்.

டெல்லிக்கு விமானம் ஏறுவதற்கு முன் கரன் தாபர், சென்னை விமான நிலையத்தில் என்னுடன் 20 நிமிடங்கள் பேசினார். மற்ற அரசியல் கட்சிகளைப் போல இல்லாமல், வைகோவின் பகிரங்கமான தீவிர விடுதலைப் புலிகள் ஆதரவு நிலைபாடும், அடிக்கடி கூட்டணி மாறி, ஒரு 'சந்தர்ப்பவாதி' என்ற விமர்சனத்துக்கு அவர் உள்ளாகி இருந்ததும்தான் கரன் தாபர் வைகோவை பேட்டி காண்பதற்கான அடிப்படைக் காரணங்கள். வைகோ பொடா சட்டத்தின்படி சிறை வைக்கப்பட்டு, ஜாமீனில் வெளியான போது ஒரு முறையும், அதனையடுத்து அவர் ஜெயலலிதாவுடன் கூட்டணி வைத்துக்கொண்டபோது ஒரு முறையும் கரன் தாபர் வைகோ பேட்டிக்கு முயற்சி செய்தாலும், அவர் ஒப்புக்கொள்ளவில்லை. தன் முயற்சியில் தளராத விக்ரமாதித்தனாய் கரன் தாபர் முயன்று கடைசியாக வெற்றி கண்டுவிட்டார்.

பேட்டியின்போது, "விடுதலைப் புலிகள் அரசியல் தலைவர்களை குறிவைத்துத் தாக்கி அழிப்பது தவிர்க்க முடியாதது. விடுதலைப் போராட்டத்தில் இது சகஜமான ஒன்று" என வைகோ கூறியபோது, கரன் தாபர் இடை மறித்து "இந்த வாதம் ராஜிவ் படுகொலைக்கும் பொருந்துமா?" என்று மடக்கியதும், வைகோ மூடு அவுட் ஆகிவிட்டார். "சரி! அந்தக் கேள்வி ஒளிபரப்பாகாது என சொல்லி சமாதானப்படுத்தின பிறகு பேட்டி தொடர்ந்ததாம். அடுத்து, கூட்டணி மாறும் சந்தர்ப்பவாதம் பற்றின கேள்விக்கும் அவர் மூடு அவுட்டாம்.

இதில் சுவாரசியம் என்னவென்றால், பேட்டியின்போது வைகோ ரொம்ப கடுப்படைந்தாலும், மறுநாள் கரன் தாபர் பேட்டிக்கு நன்றி தெரிவித்து கடிதம் எழுத, வைகோ தாபருக்கு போன் செய்து, "வருத்தம் தெரிவித்ததுடன், அடுத்த முறை முழு ஒத்துழைப்பு அளிப்பதாகக் கூறியதுடன், நம் நட்பு தொடரட்டும்" என்றும் சொன்னாராம்.

கரன் தாபரிடம் எனது வழக்கமான, "பேட்டி கண்டவர்களில் மறக்க முடியாதவர் யார்?" என்று கேட்டேன். "ஜெனரல் முஷாரஃப், ராம் ஜெத் மலானி, ராகுல் பஜாஜ், ஜெயலலிதா என பெரிய பட்டியலே சொல்லலாம். ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதத்தில் மறக்க முடியாதவர்கள். பேட்டியின்போது ராம் ஜெத்மலானி ரொம்ப ஆவேசமாகப் பேசினாலும், பேட்டி முடிந்ததும், ரொம்ப கூலாக, "வாங்க! விஸ்கி சாப்பிடலாம்" என அழைத்தது வித்தியாசமானது. அரசியல்வாதிகள் என்றாலே பலர் வெறுப்புடன் பார்த்தாலும், அவர்களிடமும் பாராட்டத்தக்க, ரசிக்கத்தக்க அம்சங்கள் உண்டு. தமிழ்நாடு முதல்வராக இருந்த ஜெயலலிதாவை பேட்டி கண்டபோது என்ன ஆச்சு என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால், அவரை ஒரு முறை டெல்லியில் தேசிய ஒருமைப்பாட்டுக் குழு கூட்டத்தின்போது சந்தித்தபோது, சிரித்தபடி இருவரும் கைகுலுக்கிக் கொண்டோம் " என்றார்.

பிரதமர்  நரேந்திர மோடி குஜராத் முதலமைச்சராக இருந்த சமயம் கரன் தாபர் அவரை பேட்டி கண்டபோதும், மோடி மூடு அவுட் ஆகி, பாதியில் பேட்டியை நிறுத்திக் கொண்டார். அத்தோடு சரி! மோடி பிரதமர் ஆன பிறகு  கரன் தாபர் மோடியுடனான தன் உறவை சீர் செய்ய பல்வேறு சமயங்களிலும், பல்வேறு வழிகளிலும் முயற்சிகள் செய்தும் பலனில்லை. ஒரு கட்டம் வரை கரன் தாப்பருக்கு தன் மீதான நரேந்திர மோடியின் கோபத்துக்கான காரணம் என்ன என்று கூட பிடிபடவில்லை. 2002ல் குஜராத் கலவரங்களைத் தொடர்ந்து  ஹிந்துஸ்தான் டைம்ஸ் நாளிதழில் தான் எழுதி வந்த ஞாயிறு பத்தியில் மோடியை கடுமையாகத் தாக்கியதா, அல்லது 2007 ல் மூன்றே நிமிடங்களில் முடிந்துபோன பேட்டியா என்ற குழப்பம். கரன் தாப்பர் எழுதிய "டெவில்ஸ் அட்வோகேட்:   அன்டோல்டு ஸ்டோரி" என்ற புத்தகத்தில் இது பற்றி விரிவாக ஒரு அத்தியாயமே எழுதி இருக்கிறார்.  அதில் அவர் குறிப்பிட்டுள்ள ஒரு தகவல் மிகவும் சுவாரசியமானது. 2014ல் மோடி பா.ஜ.க.வின் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பிறகு, பா.ஜ.க.வுக்கு பாராளுமன்றத் தேர்தல் வியூகம் வகுக்கும்  ஆலோசகராக இருந்தவர்  இங்கே தி.மு.க. ஆட்சியைப் பிடிக்க வியூகம்  வகுத்துக் கொடுத்த பிரஷாந்த் கிஷோர்தான். அவர்,  பிரதமர் வேட்பாளரான மோடிக்கு சிக்கலான கேள்விகளை எதிர்கொள்வது எப்படி? தர்மசங்கடமான சூழ்நிலையை எதிர்கொள்வது எப்படி என்று பயிற்சி அளித்தாராம். அப்போது  கரன் தாப்பர் எடுத்த மூன்று நிமிட மோடி பேட்டியை முப்பது தடவைகள் திரும்பத் திரும்ப போட்டுக் காட்டினாராம்.

(தொடரும்)

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com