சிறுகதை.ஓவியம் : தமிழ்.– S.L. நாணு .மைலாபூர் வடக்கு மாட வீதியில் இருக்கும் அந்தப் பழங்கால கட்டிடத்தின் முதல் மாடி பச்சைக் கலர் ஜன்னலில் மாலைக் கதிரவன் படர்ந்திருந்தான். சற்று நெருங்கும் போது எம்.எஸ்.ஸின் "காற்றினிலே வரும் கீதம்" லேசாகக் கேட்கிறது..இன்னும் கொஞ்சம் உள்ளே எட்டிப் பார்க்கும் போது தீப்பெட்டி அளவில் இருக்கும் சமையலறையில் பழைய கேஸ் அடுப்புடன் போராடிக் கொண்டிருந்தாள் லெஷ்மி மாமி. சுமார் அறுபத்தைந்து வயதுஇருக்கலாம். ஒல்லியான உருவம். இத்தனை வருட உழைப்பின் களைப்பு முகத்தில் ரேகைகளாகப் பளிச்சிட்டது. வெள்ளைக் கம்பிகள் கணிசமாகத் தெரியும் சாயம் பூசாத ஒரிஜினல் முடி.. கலர் மங்கிப் போன சுங்கிடிச் சேலை..அப்படியே சமையலறையிலிருந்து வெளியே வந்தால் ரொம்பவே சிக்கனமான ஹால். பக்கத்தில் ஒரு பட்ஜெட் அறை. இன்னொரு பக்கம் அதைவிடக் கஞ்சத் தனமான குளியலறை… கழிவரை….ஹாலில் ஒரு மெலிந்த உருவம் சாய்வு நாற்காலியில் கண்களை மூடிக் கொண்டு எம்.எஸ். காற்றில் இசைத்த கீதத்தை ரசிப்பது தெரிகிறது. ஒரு காலத்தில் வெள்ளையாக இருந்திருக்க வேண்டிய பனியன். அதைவிடப் பளிச் வெள்ளையாக இருந்திருக்க வேண்டிய வேஷ்டி. இப்போது நிறம் தெரியாமல் சாயக் கரைகளும் பொத்தல்களும் நிறைந்து அந்த உருவத்தோடு ஈஷிக் கொண்டிருக்க. தலையில் ஆங்காங்கே ஒட்டிக் கொண்டிருக்கும் நான்கைந்து நைலான் கம்பிகள். இது வேற யாருமல்ல. இதுதான் வெங்கு மாமா. லெஷ்மி மாமியின் கணவர். எம்.எஸ்.ஸின் இனிமையான இசைக்கு ஏற்ப அவர் தலை மட்டும் ஆடிக் கொண்டிருக்க. அந்த ஆட்டத்துக்கு ஈடு கொடுக்க முடியாமல் எப்போது வேண்டுமானாலும் மூக்கிலிருந்து நழுவி விழுவேன் என்று அச்சுருத்தும் அவர் மூக்குக் கண்ணாடி..அப்படியே கொஞ்சம் நிமிர்ந்து பார்த்தால் வெங்கு மாமா ரசிக்கும் இசையைப் பரப்பிக் கொண்டிருக்கும் டூ-இன் ஒன் டேப்-ரெக்கார்டர். அந்தக் காலத்து ஸேன்யோ தயாரிப்பு. ஜப்பான் காரன் கைங்கர்யம்.. புதுச் செருப்பு வரும் அட்டைப் பெட்டியை விட சின்னதாக இருந்தது. ப்ளே, ஃபாஸ்ட் பார்வார்ட், ரீ-வைண்ட் என்று குறியீட்டுகளில் விளக்கி அதன் கீழே சதுரங்க பட்டன்கள். அதில் ஒரு பட்டனைத் தட்டினால் கொட்டாவி விடும் வாயைப் போல் மெதுவாக முன் பக்கமாக வாயைப் பிளக்கும் சிறு கதவு.. கேஸட் டேப்பை விழுங்கத் துடிக்கும் பசியுடன்...அந்தக் காலத்தில் கூட்டுரவு வங்கியில் வேலைக்குச் சேர்ந்து கிடைத்த முதல் மாத சம்பளத்தில் வெங்கு மாமா விருப்பப் பட்டு வாங்கிய டூ-இன்-ஒன்.. தனது வாழ்நாள் பொக்கிஷமாக இது வரை பொத்திப் பொத்திப் பாதுகாத்து வருகிறார்.. குழந்தையின் உடம்பில் இருக்கும் அழுக்கை ம்ருதுவாகத் துடைப்பது போல் தினம் அந்த டூ-இன்-ஒன்னை பத்து தடவையாவது துடைத்து ஒரு தூசு பொட்டு இல்லாமல் பார்த்துக் கொள்வார்…. குழந்தையின் தலையைப் பாசத்துடன் வருடிக் கொடுப்பதைப் போலவே அதை அடிக்கடி வருடுவார்.. ஒரு வேளை தங்களுக்கென்று ஒரு குழந்தை இருந்திருந்தால் இத்தனை பாசம் இந்த ஜப்பான் காரன் தயாரிப்பின் மேல் வெங்கு மாமா காட்டியிருக்க மாட்டாரோ என்று கூட லெஷ்மி மாமி சில சமயங்கள் யோசித்தது உண்டு...வெங்கு மாமாவிற்கு கர்நாடக சங்கீதம் தெரியாது.. புரியாது.. எம்.கே.டி, தண்டபாணி தேசிகர், சி.எஸ். ஜெயராமன்.. இது போல குறிப்பிட்டவர்களின் அந்தக் காலத்து சினிமாப் பாடல்கள் தான் வெங்கு மாமாவின் நேயர் விருப்பம். அதிலும் எம்.எஸ்ஸின் மீரா பாட்டுக்கள் அவரின் உயிர் மூச்சு.. காற்றினிலே வரும் கீதத்தை தினமும் பத்து பதினைந்து தடவையாவது கேட்டு விடுவார்...தினமும் இதைப் பாடிப் பாடி எம்.எஸ்ஸுக்கே அலுப்பு வந்து விடப் போகிறது என்று லெஷ்மி மாமி அடிக்கடி கிண்டலடிப்பதுண்டு. ஆனால் அதையெல்லாம் பொருட் படுத்த மாட்டார் வெங்கு மாமா..வெங்கு மாமா அடிக்கடி விரும்பிச் சாப்பிடுவது லெஷ்மி மாமி போடும் பில்டர் காப்பி தான்.. அதுவும் டீக் கடையில் கிடைப்பது போல் அவுன்ஸ் காப்பி தான்.. அதாவது கால் டம்ளர்.. ஆனால் இரண்டு மணிக்கு ஒரு முறை கேட்டு வாங்கி பாட்டு கேட்டுக் கொண்டே காப்பியை உரிஞ்சுவார்...ஒரு முறை வெங்கு மாமாவின் டூ-இன்-ஒன் வேலை செய்யாமல் மக்கர் செய்தது. உடனே பதறிப் போய் விட்டார். ஜுரமடிக்கும் குழந்தையை சுமந்துக் கொண்டு டாக்டரிடம் ஓடும் தாயைப் போல் அந்த டூ-இன்-ஒன்னை சுமந்துக் கொண்டு ஒவ்வொரு ரிப்பேர் கடையாக ஏறி இறங்கினார்..அதைப் பார்த்த கடைக் காரர்கள் இளக்காரமாகச் சிரித்தனர். ஒரு சிலர் அந்த டூ-இன்-ஒன்னை குப்பையில் போட்டுவிட்டு புதிதாக சி.டி.பிளேயர் வாங்கிக் கொள்ளும்படி அறிவுரை கூறினர்..இதைக் கேட்டதும் வெங்கு மாமா இடிந்து போய் விட்டார். ரிப்பேர் கடைக்காரர்கள் சொன்னதை அவர் மனம் ஏற்க மறுத்தது. அங்கே இங்கே விசாரித்து மண்ணடியில் ஒரு கடைக்குப் போனார்..அந்தக் கடைக்காரரிடம் தனது குழந்தையைக் கொண்டு வந்திருப்பதாகவும்.. அவர் தான் கைவிடாமல் எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்றும் அழமாட்டாக் குறையாகச் சொன்னார் வெங்கு மாமா..கடைச் சொந்தக்காரர் மாணிக்கம் வெங்கு மாமா சொல்வதைப் பொறுமையாக் கேட்டார். இது போன்ற செட்டெல்லாம் இந்தக் காலத்தில் யாரும் ரிப்பேருக்கு எடுத்துக் கொள்வதில்லை என்பதை அவரும் ஆமோதித்தார். ஆனால் வெங்கு மாமா அதை தன் குழந்தை என்று சொன்னது மாணிக்கத்தை ரொம்பவே பாதித்தது.. ஒரு குழந்தையைப் பறி கொடுப்பது எவ்வளவு கொடுமை என்று பறி கொடுத்த அவருக்குத் தெரியும். அதனால் அந்தக் குழந்தையை நல்லபடியாக வெங்கு மாமாவிடம் ஒப்படைக்க வேண்டியது தன் பொறுப்பு என்று கூறினார்..இதைக் கேட்டதும் வெங்கு மாமாவுக்கு சென்னையில் இருக்கும் தண்ணீர் பிரச்சனையே தீர்ந்து விடும் அளவிற்கு ஆனந்தக் கண்ணீர்...சொன்னபடி அந்த டூ-இன்-ஒன்னை வெங்கு மாமாவிடம் உயிரோடு ஒப்படைத்து விட்டார் மாணிக்கம். அதிலிருந்து மாணிக்கமும் வெங்கு மாமாவும் நெருங்கிய நண்பர்கள் ஆகி விட்டனர். மாணிக்-கத்துக்கும் அந்தக் காலத்து சினிமாப் பாடல்கள் தான் விருப்பம் என்று தெரிந்தவுடன் அவர்கள் நட்பு பெவி-ஸ்டிக்கால் ஒட்ட வைத்தது போல் இறுகிக் கொண்டது...ஒரு முறை மைலாப்பூர் பக்கம் ஏதோ வேலையாக வந்த மாணிக்கம் எதேச்சையாக வெங்கு மாமா வீட்டிற்கு விஜயம் செய்தார்..வெங்கு மாமாவிடமிருந்த கேஸட் டேப் சேகரிப்புகளைப் பார்த்து அசந்து போய் விட்டார் மாணிக்கம்..தண்டபாணி தேசிகர்.. என்.சி. வசந்த கோகிலம்.. சுப்பைய்யா நாயுடு...வெங்கு மாமா ஒவ்வொரு காஸெட்டாக எடுத்துக் காட்ட மாணிக்கத்துக்கு ஆச்சர்யமாக இருந்தது. இதையெல்லாம் எப்படிப் பிடித்தார் என்று வாய் பிளக்கக் கேட்டார்...ஒவ்வொன்றையும் தெருத் தெருவாக தேடி அலைந்து வாங்கியதாக வெங்கு மாமா கூறவே அவருக்கு மேலும் ஆச்சர்யம்..ஆம்.. வெங்கு மாமாவிடமிருந்த காசெட்டுகளில் பாதிக்கு மேல் நடை பாதையில் பரப்பியிருந்த கேஸட் கடைகளிலிருந்து வாங்கியது தான். ஆனால் அந்தக் கடைகளெல்லாம் இப்போது இல்லையே என்று அவருக்கு வருத்தம் உண்டு. விஞ்ஞான முன்னேற்றத்தின் பலனாக ஏதோதோ கருவிகள் வந்தாலும்.. வெங்கு மாமாவுக்கு அவருடைய குழந்தை இசைக்கும் இசை மட்டும் தான் உலகம்..அடுத்த முறை வரும்போது மாணிக்கம் தன்னிடமிருந்த சில பழைய கேஸட்டுகளை வெங்கு மாமாவிடம் கொடுத்தார். அதைப் பார்த்து வெங்கு மாமாவிற்கு வாயெல்லாம் பல்.. ஏதோ சிறந்த இசையமைப் பாளருக்கான தேசிய விருது தனக்குக் கிடைத்து விட்டது போன்ற சந்தோஷம்.. அதிலும் அந்தக் காலத்து மருத நாட்டு இளவரசி காசட்டைப் பார்த்துத் துள்ளிக் குதிக்காத குறை தான்...திடீரென்று ஒரு நாள் மாணிக்கம் அவசரமாக வந்தார்..ஹெரிடேஜ் கிளப் என்று ஒரு குழு இருப்பதாகவும், அதில் பழைய விஷயங்களை நினைவிற்கு கொண்டு வருவது போன்ற நிகழ்ச்சிகளை ஒவ்வொரு மாதமும் நடத்துவதாகவும்.. அதில் தன் நண்பர் தான் முக்கிய பொறுப்பாளர் என்றும் கூறினார்..இதையெல்லாம் ஏன் தன்னிடம் கூறுகிறார் என்று புரியாமல் விழித்தார் வெங்கு மாமா..அதைப் புரிந்துக் கொண்ட மாணிக்கம் தன் நண்பரிடம் வெங்கு மாமாவின் டூ-இன்-ஒன் பற்றியும் அவரிடம் இருக்கும் கேஸட் கலெக்ஷன் பற்றியும் தான் சொன்னதாகவும் அதற்கு அவருடைய நண்பர் வெங்கு மாமாவை வைத்து ஒரு நிகழ்ச்சி நடத்தியே ஆக வேண்டும் என்று தீர்மானம் செய்து விட்டதாகவும் கூறினார்..வெங்கு மாமாவுக்கு எதுவும் புரியவில்லை. பாட்டு கேட்பார்.. ஆனால் நிகழ்ச்சி நட்த்துவதற்கெல்லாம் தம்மால் முடியுமா என்று ரொம்பவே தயங்கினார்...ஆனால் மாணிக்கம் விடவில்லை.. டூ-இன்-ஒன்னில் வெங்கு மாமா ஒவ்வொரு கேஸட்டையாகப் பிளே பண்ணினால் போதும். அதற்கு முன்னால் அந்தப் பாடல் இடம் பெறும் திரைப் படத்தின் பெயர், யார் இசை அமைத்திருக்கிறார்கள், யார் பாடியிருக்கிறார்கள் போன்ற விவரங்களைச் சொல்ல வேண்டும்.. இது ஒன்றும் வெங்கு மாமாவுக்குப் பெரிய காரியம் இல்லை என்று மாணிக்கமே தீர்மானம் செய்துவிட்டார். இருபத்தி மூன்றாம் தேதி ஞாயிற்றுக் கிழமை நிகழ்ச்சி என்றும் ஊர்ஜிதம் செய்து விட்டு.. அவரே வந்து வெங்கு மாமாவை அழைத்துச் செல்வதாகவும் கூறிவிட்டுக் கிளம்பி விட்டார்..வெங்கு மாமாவுக்கு ஒரே பரபரப்பு.. உடனே தன்னிடம் இருந்த காசட்டுகளையெல்லாம் எடுத்துப் பரப்பினார்.. அதை அந்தந்த சினிமா வெளிவந்த வருஷப் பிரகாரம் தனக்கு நினைவு இருக்கும் வரை வகைப் படுத்தினார்...அடுத்த ஒரு வாரத்திற்கு ஒவ்வொரு காசட் போடும் முன்னும் என்ன சொல்ல வேண்டும் என்று குறிப்பெடுத்து மண்டையில் ஏற்றிக் கொண்டார்.. மற்ற விஷயங்களை எளிதில் மறந்து விடும் வயதில் இந்த விவரங்கள் மட்டும் இன்னமும் எப்படித் தெளிவாக நினைவிலிருக்கிறது என்று அவருக்கே ஆச்சர்யமாக இருந்தது.. இந்த வேலையில் வெங்கு மாமா ஒரு வாரமாக ரொம்பவே பிஸியாக இருந்ததில்.. லெஷ்மி மாமிக்கு ஒரே சந்தோஷம்.. காரணம் இந்த ஒரு வாரமாக "காற்றினிலே வரும் கீதம்" பாடாமல் எம்.எஸ்ஸுக்கு ஓய்வு.. அதைக் கேட்காமல் அவளுடைய செவிகளுக்கும் ஓய்வு...சொன்னது போலவே நிகழ்ச்சி அன்று வெங்கு மாமாவை அழைத்துச் செல்ல மாணிக்கம் வந்து விட்டார்..கட்டைப்பை ஒன்றில் காஸெட்டுகளையும், டூ–இன்-ஒன்னையும் வைத்துக் கொண்டு கிளம்பி விட்டார் வெங்கு மாமா..அவர் எதிர் பார்த்ததை விடவே அதிக கூட்டம் இருந்ததைப் பார்த்து முதலில் வெங்கு மாமாவுக்கு சற்று தயக்கமாக இருந்தது.. இவர்களுக்கு முன்னால் தான் எப்படி?… ஆனால் முதல் பாட்டைப் பற்றிச் சொல்லி அதை தன் டூ–இன்-ஒன்னில் ஒலிக்கச் செய்தவுடன்.. ரசிகர்கள் கொடுத்த கரவொலி ஆதரவில் அவருக்கு தன்னம்பிக்கை வந்து அதன் பிறகு அடுத்த இரண்டு மணி நேரத்துக்கு அந்த அரங்கத்தையே தன் வசம் ஈர்த்துக் கொண்டார் வெங்கு மாமா...நிகழ்ச்சி முடிந்ததும் எல்லோரும் அவரை சூழ்ந்துக் கொண்டு விட்டார்கள்.. எப்படி அவரால் இப்படிப் பட்ட பொக்கிஷங்களை சேகரிக்க முடிந்தது என்று வியந்தார்கள்.. அவருடன் போட்டோ எடுத்துக் கொண்டார்கள்.. ஒரு பத்திரிகை நிருபர் அவரை தனியாக அழைத்துப் போய் பேட்டி கண்டார்.. பேட்டி முடிந்து வரும் சமயம் மாணிக்கமும் நிகழ்ச்சி ஏற்பாடு செய்திருந்த இருவரும் அவருக்காகக் காத்திருந்தனர்.. மற்றபடி அரங்கமே காலியாகி இருந்தது...நிகழ்ச்சி ஏற்பாடு செய்திருந்த மாணிக்கத்தின் நண்பர் வெங்கு மாமாவை மனதாரப் பாராட்டினார். விரைவிலேயே இன்னொரு நிகழ்ச்சி நடத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். சந்தோஷமாக ஒப்புக் கொண்டார் வெங்கு மாமா..மாணிக்கம் சொன்னவுடன் கிளம்பத் தயாரானார் வெங்கு மாமா. டூ–இன்-ஒன்னும் கேஸட்டும் வைத்திருந்த தன்னுடைய கட்டைப்பையை எடுக்கப் போனவருக்கு அதிர்ச்சி.. அதைக் காணவலில்லை...உடனே பரபரப்புடன் அங்குமிங்கும் தேடினார்...அவருடைய பரபரப்பை புரிந்துக் கொண்ட மாணிக்கமும் அவருடன் தேட ஆரம்பித்தார்.. ஆனால் அந்தப் பை எங்கேயும் கிடைக்க வில்லை.. ஒரு வேளை மைக் கட்டியவர் தவறுதலாக இந்தப் பையையும் எடுத்துச் சென்று விட்டாரோ?.நிகழ்ச்சி ஏற்பாடு செய்தவர் மைக் கட்டியவரை அலைபேசியில் அழைத்து விசாரித்தார். அவரும் தான் அதை எடுக்க வில்லை என்று கூறி விட்டார்...வெளி ஆள் யாரும் அங்கு வர வாய்ப்பில்லை...ஒரு வேளை இப்படிப் பட்ட கேஸட் கலெக்ஷனுக்கு ஆசைப் பட்டு யாராவது...வெங்கு மாமா மெதுவாக சந்தேகம் எழுப்பிய உடனேயே அப்படியெல்லாம் இருக்காது என்று மறுத்து விட்டார் மாணிக்கம்..தான் தீர விசாரிப்பதாகவும்.. அந்த இடத்தை விட்டு எங்கேயும் போயிருக்காது என்றும் தைரியம் கூறினார் மாணிக்கம்..அதை ஆமோதித்த நிகழ்ச்சி அமைப்பாளர் கிளம்புவதற்கு அவசரப் படுத்தினார்..கிட்டத் தட்ட கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளாத குறை.. பாவம்.. அவரைச் சொல்லியும் குற்றமில்லை.. ஒன்பது மணிக்கு மேல் ஒரு நிமிடம் போனால் கூட அதிக வாடகை வசூலித்து விடுவார் அந்த இடத்து கறார் மேனேஜர்...மாணிக்கம் தான் வெங்கு மாமாவை ஆட்டோவில் வீட்டுக்கு அழைத்து வந்தார்.. வெங்கு மாமாவுக்கு எதுவுமே ஓட வில்லை.. உலகமே இருண்டு விட்டது போன்ற உணர்வு...லெஷ்மி மாமியிடம் நடந்ததைச் சொல்லி.. வெங்கு மாமாவை ஜாக்ருதையாகப் பார்த்துக் கொள்ளும் படி கூறினார்.. தான் தீவிரமாக முயற்சி செய்வதாகவும்.. அந்தப் பை எப்படியும் கிடைத்து விடும் என்றும் நம்பிக்கை சொன்னார். பின் தன் மொபைல் நம்பரைக் கொடுத்து ஏதாவது தேவையென்றால் உடனே தன்னை அழைக்குமாறும் கூறிவிட்டுக் கிளம்பினார்..பிரமை பிடித்தவர் போல் உட்கார்ந்திருக்கும் கணவரை திகிலோடு பார்த்தாள் லெஷ்மி மாமி..ஒரு வாரமாக மாணிக்கத்துக்கு வெங்கு மாமாவின் கட்டைப்பையைத் தேடுவது தான் வேலை.. யார் யாரிடமோ விசாரித்தார்.. மறுபடியும் மறுபடியும் விழா நடந்த இடத்துக்குப் போய்ப் பார்த்தார். அங்கு எல்லா இடங்களிலும் மறுபடியும் மறுபடியும் தேடினார்.. இதோ இப்போது கூட அங்கு தான் இருக்கிறார்.. மேனேஜர் தீர்மானமாக அன்று வந்திருந்த யாராவது தான் அதை எடுத்திருக்க வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே மாணிக்கத்தின் செல் போன் அலறியது...வெங்கு மாமாவின் பக்கத்து வீட்டுப் பையன் மறுமுனையில்.. மாணிக்கத்தை அவசரமாக வரும்படி கொஞ்சம் பதட்டமாக்க் கூறினான்..என்ன ஏது என்று கேட்பதற்குள் மறுமுனையில் கால் துண்டிக்கப் பட்டு விட்டது..தனது டி.வி.எஸ்-50ஐ மைலாபூருக்கு விரட்டினார் மாணிக்கம். வெங்கு மாமாவின் வீட்டு வாசலில் கூட்டம் கூடியிருந்ததைப் பார்த்து அவருக்கு பகீரென்றது...அவசரமாக வண்டியைப் ஓரங் கட்டிவிட்டு அவர் வீட்டை நோக்கிப் போக...இழுத்துக் கொண்டிருக்கிறது என்ற சிலாகிப்புகளும், வாரிசில்லாத அவருக்கு யார் இறுதிச் சடங்கு செய்வார்கள் போன்ற கேள்விகளும் அவர் காதில் விழ...அதையெல்லாம் நிராகரித்து விட்டு அவசரமாக வீட்டுக்குள் நுழந்தார் மாணிக்கம்..தரையில் ஜமுக்காளம் விரித்து கிழிந்த நாராகக் கண்மூடிக் கிடந்தார் வெங்கு மாமா..அழுது சிவந்த கண்களுடன் லெஷ்மி மாமி..அருகில் அமர்ந்து விசாரித்தார் மாணிக்கம்..அந்த சம்பவம் நடந்த தினத்தன்று படுத்தவர் தானாம்.. டேப்-ரெகார்டர் இருந்த இடத்தையே வெரித்துக் கொண்டிருந்தாராம். சாப்பாட்டை மறுத்து விட்டாராம்.. வழக்கமாக அவர் கேட்கும் அவுன்ஸ் காப்பியைக் கூடக் கேட்கவில்லையாம்.. இப்போது இரண்டு நாட்களாக கண் திறக்காமல் கிடக்கிறாராம்.. உணர்வே இல்லையாம்.. முந்தைய தினமே அவர் கதை முடிந்திருக்க வேண்டுமாம். டாக்டர் ட்ரிப்ஸ் ஏற்றியதில் இது வரை நீட்டித்தாகி விட்டது. மனதில் இருக்கும் குறை நீங்கினால் தான் இவருக்கு புனர்ஜென்மம் என்று டாக்டர் மருத்துவத்தை விட்டு யதார்தத்தை உணர்த்தி விட்டுக் கிளம்பி விட்டாராம்..மாணிக்கத்துக்குக் குற்ற உணர்வு...வெங்கு மாமாவை ஹெரிடேஜ் நிகழ்ச்சிக்கு அழைத்துச் செல்லாமல் இருந்திருந்தால்.. அந்தப் பை தொலைந்து போகாமல் இருந்திருந்தால்.. வெங்கு மாமாவை இப்படி ஒரு நிலமையில் பார்த்திருக்க வேண்டிய அவசியம் இருந்திருக்காதோ?.டூ-இன்-ஒன் இருந்த இடம் வெறுமையாக இருக்க அது அவருக்கு அமங்கலமாகப் பட்டது..வெங்கு மாமா இனி எழுந்திருக்க மாட்டார் என்ற ரீதியில் அங்கு இருந்தவர்கள் பேசிக் கொண்டிருந்ததைக் கேட்க மாணிக்கத்துக்குத் தாங்க வில்லை.. மனித உயிருக்கு இவ்வளவு தான் மதிப்பா?.மறுபடியும் வெங்கு மாமாவைப் பார்த்த மாணிக்கத்துக்கு ஏதோ ஒன்று உரைத்தது. யாரிடமும் எதுவும் சொல்லாமல் அவசரமாக வெளியே வந்து தனது வாகனத்தை உசுப்பேத்தி விரட்டினார்..வெங்கு மாமாவுக்கு மேலும் கீழும் மூச்சு இழுத்தது. அந்திம காலத்திற்கான அறிவிப்பு.. லெஷ்மி மாமி தாங்க முடியாமல் விம்மினாள்.. மற்றவர்கள் அவரையேப் பார்த்துக் கொண்டிருந்தனர்.. சிலர் மொபைலில் வீடியோ எடுத்தனர்..."காற்றினிலே வரும் கீதம்".திடீரென்று எம்.எஸ்ஸின் குரல் கேட்டு எல்லோரும் திடுக்கிட்டுத் திரும்பினார்கள்..வழக்கமான இடத்தில் வெங்கு மாமாவின் டூ-இன்-ஒன் உட்கார்ந்திருந்தது..வெங்கு மாமாவின் மூச்சிறைப்பு கொஞ்சம் கொஞ்சமாக நின்றது. எல்லோரும் எதிர்பார்ப்புடன் அவரைப் பார்த்தார்கள்..மெதுவாகக் கண் திறந்தார் வெங்கு மாமா.. டூ-இன்-ஒன்னைப் பார்த்து அவர் கண்களில் பிரகாசம்...மாணிக்கம் அவர் அருகில் அமர்ந்து அவர் கைகளை ஆதரவோடு பற்றிக் கொண்டார்...நடந்தது இதுதான்..வெங்கு மாமா ஜமுக்காளத்தில் படுத்திருந்ததைப் பார்த்தவுடன் மாணிக்கத்துக்கு ஒரு விஷயம் உரைத்தது. நிகழ்ச்சி நடந்த அன்று மேடையில் ஜமுக்காளம் விரித்திருந்தார்கள். நிகழ்ச்சி முடிந்ததும் அதை ஒரு சின்னப் பையன் மடித்துக் கொண்டிருந்ததை மாணிக்கம் கவனித்திருந்தார். அந்தப் பையன் ஒரு வாரமாக வேலைக்கு வர வில்லை என்று மேனெஜர் புலம்பியதும் அவர் நினைவுக்கு வந்தது. உடனே நிகழ்ச்சி நடந்த இடத்துக்கு விரைந்து சென்று ஜமுக்காளமெல்லாம் எங்கே மடித்து வைப்பார்கள் என்று விசாரித்தார். உடனே மேனேஜர் மேடைக்கு பின் பக்கத்தில் கீழே ஒரு பூட்டிய அறையை திறந்து காட்டினார்.. மாணிக்கம் நினைத்த மாதிரியே ஜமுக்காளத்தோடு வெங்கு மாமாவின் பையையும் தெரியாமல் எடுத்து வைத்திருந்தான் பையன்.. இது யாருக்குமே தோன்றாமல் போகவே. அந்தப் பையனும் இல்லாமல் போகவே இவ்வளவும் நடந்து விட்டது..இதை மாணிக்கம் சொல்லி முடித்தவுடன் வெங்கு மாமாவின் கண்களிலிருந்து ஆனந்தக் கண்ணீர். லேசாக சிரிக்க முயன்றார். முகத்தில் ஒரு தெளிவு. டாக்டர் சொன்ன யதார்த்தம் நடந்தே விட்டது. அதைப் பார்த்து எதையோ எதிர்பார்த்து வந்த மற்றவர்களுக்கு ஏமாற்றம்..ஈனஸ் சுவரத்தில் வெங்கு மாமா காப்பி கேட்க சந்தோஷமாக சமையலறைக்கு விரைந்தாள் லெஷ்மி மாமி..எம்.எஸ். காற்றினில் இசைத்த கீதத்தை ரசிக்க வெங்கு மாமாவின் தலை லேசாக ஆட முயற்சி செய்தது.