சிரிப்பு சூப்பர் ஸ்டார்

சிரிப்பு சூப்பர் ஸ்டார்
Published on

ஒரு நிருபரின் டைரி – 18

– எஸ். சந்திரமெளலி

"நான் சிவாஜிக்கு அடுத்து நாகேஷிடமிருந்துதான் அதிகம் கற்றுக்கொண்டேன். ஒருவர் யார், எப்படிப்பட்டவர் என்பதைவிட, "அவர் விஷயம் உள்ளவர்" என்று தெரிந்தால் அவரை மதிக்கத் தெரிந்தவர் நாகேஷ். பாராட்டு, ஷீல்டு இதிலெல்லாம் அவருக்கு ஆர்வமில்லை. இவை நான் அவரிடமிருந்து கற்றுக்கொண்டவற்றில் சில. அவரது உடலைப் பார்த்துவிட்டு ஐந்து நிமிடம்தான் அழுதிருப்பேன். அப்புறம் அவரது அற்புதமான நகைச்சுவை காட்சிகள் நினைவுக்கு வர, பக்கத்தில் இருந்தவர்களுடன் அவற்றை நினைவுகூர்ந்து மனம்விட்டுச் சிரித்துக் கொண்டிருந்தேன். இதுபோல வேறு யாருக்குச் சாத்தியம்? இப்போது இருக்கிறாரே, அந்த உயிரற்ற உடல் போலக்கூட மிகவும் தத்ரூபமாக என் படத்தில் நடித்திருக்கிறார். 'நம்மவர்' படத்தில் அவருடன் நடித்தது ஒரு நெகிழ்ச்சியான அனுபவம். அவருக்காக நான் எழுதிய காட்சிகளில் மிகவும் ஈடுபாட்டுடன் நடித்ததும், அதற்காக நாகேஷுக்குச் சிறந்த குணச்சித்திர நடிகருக்கான தேசிய விருது கிடைத்ததிலும் எனக்குதான் பெருமை."

கமல்ஹாசன் என்னிடம் இப்படி நாகேஷ் பற்றி நெகிழ்ச்சியோடு பேசிக்கொண்டிருந்த இடம், சென்னை பெசன்ட் நகர்
மின் தகன மையம். நாகேஷின் வீட்டிலிருந்து புறப்பட்ட அவரது இறுதி ஊர்வலம் இன்னும் பெசன்ட் நகர் வந்தடையவில்லை. ஏற்கெனவே அங்கே வந்து காத்துக்கொண்டிருந்தார் கமல். "இது பேட்டி காண்பதற்கான இடமோ, தருணமோ இல்லை. ஆனாலும், அடுத்த இதழ் கல்கியில் "நாகேஷ்: சிரிப்பு சூப்பர் ஸ்டார் " என்று ஒரு கவர் ஸ்டோரிக்குத் திட்டமிட்டிருக்கிறோம். அவரைப் பற்றிய உங்கள் நினைவுகளைச் சொல்லுங்களேன்" என்றபோது, கமல் ரொம்ப கேஷுவலாக "நீங்கள் கேட்கவில்லையென்றாலும்கூட நான் இங்கே நாகேஷ் பற்றிதான் உங்களுடன் பேசிக்கொண்டிருந்திருப்பேன்" என்று சொல்லிவிட்டுச் சொன்ன விஷயங்கள்தான் இவை.

நாகேஷ் தன் வாழ்க்கையைப் பற்றி இந்த உலகத்திலேயே என்னிடம்தான் ரொம்ப விரிவாகப் பேசி இருக்கிறார் என்று நான் பெருமையுடன் காலரைத் தூக்கிவிட்டுக்கொள்ள முடியும். சினிமா மூலம் கோடிக்கணக்கானவர்களைச் சிரிக்கவைத்த, சிரிக்க வைத்துக் கொண்டிருக்கிற நாகேஷ், சொந்த வாழ்க்கையில் பட்ட அவமானங்கள், வேதனைகள், ரணங்கள், சந்தோஷங்கள், சவால்கள் என்று சகலமான விஷயங்களையும் அவரே என்னிடம் சொல்ல, அவற்றை எல்லாம் தொகுத்து ஒரு வருடத்துக்கு வாராவாரம் கல்கியில் தொடராக எழுதியது எனக்குக் கிடைத்த அரிய பாக்கியம்.

"கல்கியில் அவரது வாழ்க்கை அனுபவங்களை எழுதலாம்" என்ற நோக்கத்துடன் அவரைச் சந்தித்துப் பேசியபோது, சுமார் ஒரு மணிநேரம் நிறைய பேசிவிட்டு "இவற்றையெல்லாம் எதற்காகப் பத்திரிகையில் எழுதவேண்டும்? அதனால் யாருக்கு என்ன பயன்?" என்று ஒரு போடு போட்டார். நானும் உடன் வந்திருந்த புகைப்படக்காரர் யோகாவும்
அரை மணி நேரம் பேசி அவரைச் சம்மதிக்கவைத்தோம். அதன்பிறகு ஒவ்வொரு சந்திப்பின்போதும் அவர் அளித்த ஒத்துழைப்பு அபாரமானது. பழைய விஷயங்களை நகைச்சுவை கொப்பளிக்கத் தேர்ந்த ரசனையுடன் குரலில் ஏற்ற இறக்கம் கொடுத்து அவர் மீண்டும் நினைவு கூரும்போது என்னை மறந்து சிரித்துவிடுவேன்.

நாகேஷின் இயற்பெயர் நாகேஸ்வரன். அப்பா கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த 'அரிசிக்கரே' என்ற ஊரில் ரயில்வே ஸ்டேஷன் மாஸ்டர். குடும்பம் ஈரோடு மாவட்டம் தாராபுரத்தில் வசித்தது. அப்பா ரொம்பக் கண்டிப்பான மனிதர். வீட்டில் நாகேஷுக்குச் செல்லப்பெயர் குண்டு ராவ். எஸ்.எஸ்.எல்.சி. முடித்த கையோடு கோவை பி.எஸ்.ஜி. ஆர்ட்ஸ் காலேஜில் இன்டெர்மீடியட் சேர்ந்தார். இரண்டாவது வருடப் பரீட்சைக்கு சில நாட்கள் முன்பாகக் கடும் அம்மை தாக்கியது. அது குணமடையும் தருவாயில் இரண்டாவது தாக்குதல். அடுத்து மூன்றாம் தடவையும் தாக்கியது. பிழைத்ததே பெரிய விஷயம்தான். பால் வழியும் முகத்தில் அம்மை தனது ஆட்டோகிராஃபைக் கிறுக்கிவிட்டுப் போனது. மனம் வெறுத்த நாகேஸ்வரன் வீட்டை விட்டு வெளியேறினான். இலக்கில்லா வாழ்க்கைப் பயணம் தொடங்கியது. பலவிதமான வேலைகள். ஹைதராபாதில் ஒரு கூலித் தொழிலாளியாகக்கூட வேலை பார்த்திருக்கிறார்.

நாகேஷின் டான்ஸ் மூவ்மென்ட்களைத் திரையில் பார்த்து பிரமித்துச் சிரிக்கிறோமே, அதற்குப் பின்னால்கூட ஒரு கதை இருக்கிறது. ஒரு படத்தில் அவர் சரியாக நடனம் ஆடாதது கண்டு நாகேஷின் மனம் புண்படும்படியாக கமெண்ட் அடித்துவிட்டார் அந்தப் படத்தின் இயக்குனர். அன்று இரவு முழுக்க அறைக் கதவைச் சாத்திக்கொண்டு, கிராமஃபோன் ரெக்கார்டு ஒலிக்க உண்ணாமல் உறங்காமல் பயிற்சி செய்து மறுநாள் டைரக்டரை ஆச்சரியப்படுத்தி மனதுக்குள் வெட்கப்பட வைத்தார் நாகேஷ்.

மைலாப்பூர் கபாலி கோவில் தெப்பக்குளத்தின் படிகட்டுகளில் உட்கார்ந்துகொண்டு வற்றிப் போன தெப்பக் குளத்தைப் பார்த்து "அந்தப் பழைய நாட்கள் இனிமே வருமா? ஊஹூம்… வராது.. வரவே வராது… " என்று தனக்குத்தானே புலம்பிய கிருஷ்ணசாமி அய்யர் என்பவர்தான் நாகேஷின் மிகப் பிரபலமான தருமி கேரக்டருக்கு இன்ஸ்பிரேஷன். டைரக்டர் ஏ. பி. நாகராஜன் தருமி சம்பந்தப்பட்ட காட்சிக்கு ஒரு சின்னக் கோடு போட்டார். நாகேஷ் ரோடு இல்லை, ஒரு தங்க நாற்கரச் சாலையே போட்டுவிட்டார். இன்றைக்கும் டி.வி.யில் தருமி நாகேஷ் – சிவாஜி காட்சியைப் பார்த்து ரசிக்கும் உங்களுக்கெல்லாம் ஒரு விஷயம் தெரியுமா? திருவிளையாடல் படத்தின் நூறாவது நாள் விழாவுக்கு நாகேஷுக்கு அழைப்புகூட அனுப்பவில்லை.

ஒரு கட்டத்தில் நகைச்சுவையிலிருந்து குணச்சித்திர வேடங்களுக்கு மாறினாலும் அவரது நகைச்சுவை உணர்ச்சி மட்டும் என்றுமே குறையவில்லை. ஒருமுறை இன்றைய நகைச்சுவை நடிகர்கள் பற்றி அவரிடம் பேசிக்கொண்டிருந்தபோது அவர் அடித்த நச் கமெண்ட்: "சிலருக்கு டைமிங் சென்ஸ் நல்லா இருக்கு; சிலருக்கு டைம் நல்லா இருக்கு!"

வாழ்க்கையை வெகு எதார்த்தமாக எதிர்கொண்டவர் நாகேஷ். பண விஷயத்தில் அவர் வெகு கறாரான மனிதர் என்று சினிமா உலகில் சொல்வார்கள். ஆனால் தனிப்பட்டமுறையில் மிக எளிமையானவர். "எவ்வளவு பணம் இருந்தாலும் சாப்பிட ஒரு வயிறுதானே?" என்பார். சினிமா உலகத்தினரது வீட்டு வரவேற்பறையில் அவர்கள் வாங்கிய ஷீல்டுகளை ஷோ கேஸ் அமைத்துக் காட்சிக்கு வைப்பது சகஜம், ஆனால் நாகேஷ் வீட்டில் ஒரு ஷீல்டைக்கூடப் பார்க்க முடியாது. தன்னைப் பற்றிப் பெருமையாகப் பேசுவது நாகேஷுக்குப் பிடிக்காத விஷயம்.

"சிரித்து வாழ வேண்டும்" என்ற தலைப்பில் வெளியான நாகேஷின் வாழ்க்கை அனுபவத் தொடருடைய முதல் அத்தியாயத்துடன் நாகேஷ், அவரது மூன்று மகன்கள், மருமகள்கள், பேரன், பேத்திகள் என்று அனைவரும் இருக்கும் ஒரு குரூப் ஃபோட்டோ போட்டால் நன்றாக இருக்குமே என்று நினைத்தேன். அந்த ஆசையை அவரிடம் தெரிவித்தபோது "அப்படி ஒரு ஃபோட்டோ இல்லை" என்றார். "பரவாயில்லை. ஒரு நாள் அனைவரையும் உங்கள் வீட்டுக்கு வரச்சொன்னால் ஒரு ஃபேமிலி குரூப் ஃபோட்டோ எடுத்துவிடலாம்!" என்றேன். ஆனால் "அதெல்லாம் சாத்தியமில்லை!" என்று சொல்லிவிட்டார். "இது என்ன சார் பெரிய விஷயம்? ஃபோன் நெம்பர் கொடுங்க! நானே பேசி ஏற்பாடு செய்திடறேன்" என்று வற்புறுத்தியபோது 'இதை விட்டுடேன்! பிளீஸ்!" என்று சொல்லி அத்துடன் முற்றுப்புள்ளி வைத்துவிட்டார்.

நாகேஷ் தொடரை எழுதியபோது, ஒரு மரியாதைக்காக ஆரம்ப கட்டத்தில் ஒவ்வொரு வாரமும் எழுதிய அத்தியாயங்களை, அவரிடம் கொண்டு போய் படித்துக் காட்டிவிட்டு வருவேன். ஒருநாள், படித்துக் காட்டியபோது, "நான் சொல்றதையெல்லாம் சரியாத்தான் எழுதற!" என்றார்.  "அப்படீன்னா, இனிமே நீங்க சொல்றதை ரெகார்டு பண்ணிக்க மட்டும் வரேன்! வாராவாரம் படித்துக் கட்ட வரலை!" என்றேன். ஆனால், "நீ சரியா எழுதறேன்னு உன்னைப் பாராட்டினேன். அதுக்காக நீ வராம இருந்திடாதே! நீ வந்தா பொழுது போக்கா நான் நிறைய விஷயங்கள் பேசறேன். மனசுக்கு சந்தோஷமா இருக்கு! நீ வாராவாரம் வருவதை நிறுத்திடாதே!" என்றார். அதன் பின்னான சந்திப்புகளில் அத்தியாயம் படிப்பது என்பது ஒரு சம்பிரதாயமே! அவர் பல விஷயங்களை அசைபோடுவார். அவற்றில் பல சமயங்களில் சினிமா, அரசியல் பிரபல மண்டைகள் உருளும். ஆனால் அவை எதுவுமே பிரசுரத்துக்கானவை அல்ல.

2009 ஜனவரியில் அவர் மரணம் அடைவதற்குச் சில மாதங்கள் முன்பிருந்தே உடல் நலமில்லாமல் இருந்தார். அவ்வப்போது அவரது வீட்டுக்குச் சென்று பார்த்துவிட்டு வருவது என் வழக்கம். அப்படி ஒரு நாள் அவர் வீட்டுக்கு நான் சென்றிருந்த சமயம் இயக்குனர் கே. பாலசந்தரும் அங்கே வந்திருந்தார். தன் நெடுநாளைய நண்பனின் கைகளை வருடிக்கொடுத்தபடி "ராவுஜி! எப்படிடா இருக்கே?" என்று கே.பி. கேட்டார். பேச முடியாத நிலையிலும் நாகேஷின் உதட்டோரத்தில் ஒரு புன்னகை. அந்தச் சிரிப்பு இன்னும் என் மனத்தில் நிழலாடுகிறது.

அன்று நாகேஷைப் பற்றிப் பழைய நினைவுகளை அசைபோட்டார் கே.பி. "நீர்க்குமிழி படப்பிடிப்பின் முதல் நாள் நாகேஷ் என்னை 'சார்' என்று அழைத்தபோது எனக்குச் சங்கடமாக இருந்தது. இத்தனை நாளும் வாடா போடா என்று பேசுகிற நீ திடீரென்று என்னை சார் என்று கூப்பிட்டால் கிண்டல் பண்ணுவதுபோல இருக்கு" என்று நான் அவனிடம் சொன்னேன். அப்போது அவன் என்னைத் தனியாக அழைத்துக்கொண்டுபோய் "நாம ரெண்டு பேரும் நெருங்கின நண்பர்கள்தான். ஆனால் நீ இங்கே டைரக்டர்; நான் நடிகன். நான் உனக்கு மரியாதை தரவேண்டும்; அப்போதுதான் யூனிட்டில் எல்லோரும் உனக்கு உரிய மரியாதை தருவார்கள்" என்றான்."

"நாகேஷ் ஒரு கிரியேடிவ் ஜீனியஸ். காட்சியைச் சொல்லிவிட்டு ரிகர்சல் பார்க்கிறபோது சொன்னபடி செய்வான். அடுத்து டேக் போகிறபோது தானாகவே இன்னும் ஏதாவது சேர்த்துக்கொண்டு காட்சியைப் பிரமாதப்படுத்திவிடுவான். உதாரணமாக, வணக்கம் சொல்லியபடி உடம்பை வளைக்கிறதுபோல் ஒரு காட்சி. டேக்கின்போது வளைந்துகொண்டே வந்தவன் தானாகவே "இன்னும் கூடக் குனிய முடியும், ஆனா தரை இருக்கு" என்று ஒரு வசனத்தைச் சொல்லி அசத்திவிட்டான்" என்றார் கே.பி.

நாகேஷின் மறைவுக்குப்பிறகு கே. பாலசந்தரது கவிதாலயா தியேட்டர்ஸ் அரங்கேற்றிய நாடகத்தின் தொடக்கத்தில் நாகேஷின் படத்தை வைத்து அவரை உருக்கமாக நினைவு கூர்ந்து அஞ்சலி செலுத்தினார் அவர்.

நாகேஷ் இன்று நம்மிடையே இல்லை; எனது ஆழ்ந்த அனுதாபங்கள்- அவரது குடும்பத்தினருக்கு அல்ல; அந்த மகத்தான கலைஞனை உரிய முறையில் கௌரவிக்கத் தவறிய தமிழக, தென்னிந்திய, மத்திய  அரசுகளுக்குத்தான்!!

(தொடரும்)

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com