15-08-1947 - அன்று டில்லி செங்கோட்டையில் பறந்தது எந்த கொடி?
இந்தியா சுதந்திரம் அடைந்த அன்று டில்லி செங்கோட்டையில் பட்டொளி வீசிப்பறந்த தேசியக்கொடி வேலுார் மாவட்டம், குடியாத்தத்தில் தயாரிக்கப்பட்டது என்பது பலரும் அறியாத ஒன்று. அது உங்களுக்குத் தெரியுமா?
1932 முதல் 10 ஆண்டுகள் குடியாத்தம் நகர சபைத்தலைவராக இருந்தவர் காங்கிரஸ் பிரமுகர் பிச்சனுார் கோட்டா ஆர்.வெங்கடாசல செட்டியார். இவர் ஸ்கிரீன் பிரிண்டிங் மூலம் பட்டுத்துணியில் வெளிநாட்டு தொழில்நுட்பங்களுடன் டிசைன் செய்யும் தொழிலை தொடங்கினார். இக்கால கட்டத்தில் இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்தது.
சுதந்திர நாளில் நாடு முழுவதும் தேசியக்கொடியை பறக்கவிட வேண்டும் என்பதால் அதிக எண்ணிக்கையில் கொடிகள் தேவைப்பட்டன. தேசியக்கொடியை உற்பத்தி செய்ய மனமகிழ்ச்சியுடன் முன்வந்தார் வெங்கடாசலம்.
சுதந்திர தினத்தன்று நாடு முழுவதும் ஏற்ற ஒரு மில்லியன் கொடி தயாரிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டது. இதில் வெங்கடாசலம் தயாரித்து அனுப்பிய கொடி டில்லி செங்கோட்டையில் ஏற்றுவதற்கு தேர்வு செய்யப்பட்டது.
குடியாத்தம் நகர மக்களும், நண்பர்களும், ஊழியர்களைப்போல் இரவு, பகல் பாராமல் அங்கேயே உண்டு, உறங்கி, கொடிகளை தயாரித்து அஞ்சல்துறை மூலம் நாட்டின் பல்வேறு இடங்களுக்கு அனுப்பினர்.
இவர் தயாரித்து அனுப்பிய கொடிகளை பாராட்டி 12.08.1947 அன்று ஜவஹர்லால் நேரு, வெங்கடாசலத்திற்கு பாராட்டு கடிதம் ஒன்றையும் அனுப்பியுள்ளார்.