US Election 2024: Part 3 - அமெரிக்க அதிபர், மக்களால் 'கிட்டத்தட்ட' நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்படுகிறார்! அதென்ன கிட்டத்தட்ட…?

US Election 2024
US Election 2024BG Img Credit: New jersey monitor
Published on

சுடச்சுடச் செய்திகள்:

  • துணை அதிபர் வேட்பாளர்களாகப் பரிசீலனை செய்யப்பட்டவர் ஆறுபேர்; அதில் இறுதி மூவரான - அரிசோனா செனட்டர் மார்க் கெல்லி, ஃபிலடெல்ஃபியா ஆளுனர் ஜாஷ் ஷப்பீரோ, மின்னசோட்டா ஆளுனர் டிம் வால்ஸ் ஆகியோரைக் நேரில் சந்தித்துப் பேசிய கமலா ஹாரிஸ், டிம் வால்ஸை வேட்பாளராகக் அறிவித்தார். 

  • வாக்கு சேகரிப்புக்காகப் ஃபிலடெல்ஃபியா, மிஷிகன், அரிசோனா மாநிலங்களுக்கு இருவரும் சென்றனர். அவர்களைப் பின்பற்றி அதே இடங்களுக்கு ரிபப்லிகன் துணை அதிபர் வேட்பாளர் ஜே.டி. வான்ஸ் சென்றார்.

  • ஜார்ஜியா மாநிலத்துத் தேர்தல் கூட்டத்தில், தன் கட்சி ஆளுனர் ப்ரையன் கெம்ப்பை (Brian Kemp), “மிகவும் மேசமானவர், (கட்சி) விசுவாசம் இல்லாதவர், சராசரி ஆளுனர், நாம் தோற்கவேண்டும் என விரும்புகிறார்,”  என்று தாக்கிப் பேசியது, அந்த மாநிலத்து நடுநிலைமை வகிக்கும் ரிபப்லிகன் கட்சி வாக்காளரிடம் டானால்ட் ட்ரம்ப்பின் செல்வாக்கை குறைக்கும் என்று உணரப்படுகிறது.  

  • ஃபுலோரிடாவிலுள்ள தன் மாளிகையில் கிட்டத்தட்ட ஒருமணி நேரம் பத்திரிகையாளருக்குப் பேட்டி அளித்த ட்ரம்ப், கமலா ஹாரிஸுக்கு புத்திசாலித்தனம் குறைவு (I.Q) என்று பேசியுள்ளார்.

  • நடுநிலைமை வகிக்கும் ஏ.பீ.சி. ஊடகத்தில் குறிப்பிட்ட தேதியில் விவாதத்துக்கு வரமுடியாது, தனக்கு ஆதரவான ஃபாக்ஸ் ஊடகத்துக்குத்தான் விவாதத்துக்கு வருவேன் என்ற டானால்ட் ட்ரம்ப், இப்பொழுது விவாதத்துக்கு வரச் சம்மதித்துள்ளார்.

  • கணிப்பு தேர்தலில் எவர் வெற்றி பெறுவர் என்று அறிவிக்க இயலாதபடி மிகவும் நெருக்கமாக உள்ளது.

அமெரிக்க அதிபர்:

இந்தியாவுக்கும், அமெரிக்க அதிபரை தேர்ந்தெடுக்கும் முறைக்கும் என்ன வேறுபாடு என்று அறிந்துகொள்வோம்.

இந்திய ஜனாதிபதியும், அமெரிக்க அதிபரும் முப்படைத் தலைவர்கள். 

மத்திய அரசு உள்பட மற்ற மாநில அரசுகளைக் கலைக்கும் அதிகாரம் உள்ளவராக இருப்பினும், இந்திய ஜனாதிபதி தானாக அப்படிச் செய்வதில்லை. பிரதமரின் பரிந்துரைப்படிதான் செய்கிறார். 

அமெரிக்க அதிபர் தானாக முப்படைகளுக்குத் தலைமைதாங்கிச் செயல்படுகிறார்.  ஆனால், பிரதிநிதி சபையின் அனுமதி இல்லாமல், மற்ற நாடுகளின் மீது தான் விரும்பியபடி போர்தொடுக்கவோ, உதவி வழங்கவோ அவருக்கு உரிமை கிடையாது.

மாநில அரசுகளைக் கலைக்கும் உரிமை அமெரிக்க அதிபருக்குக் ஏன் வழங்கப்படவில்லை என்பதைச் சென்ற பகுதியில் கண்டோம்.  

உச்ச நீதிமன்ற நீதிபதிகளை அமெரிக்க அதிபர் தேர்வு செய்து பரிந்துரைக்கிறார்.  அத்துடன், தனது நிர்வாகத்துறைக்கு செயலர்களைத் (Cabinet Secretaries) தேர்ந்தெடுக்கிறார். அச்செயலர்கள் இந்தியா, பிரிட்டன், ஆஸ்திரேலியா போன்ற நாடுகளின் அமைச்சர்கள்போலப் பணியாற்றுகிறார்கள். அவர்கள் இந்தியாவைப் போல எம்.பிகளோ, ராஜ்ய சபாவிலிருந்து வருபவர்களோ அல்லர். அதிபர் நியமிக்கும் தனிப்பட்ட நபர்களே! மத்திய வங்கித்துறையின் (Federal Reserve) மேலதிகாரியையும் அவரே நியமிக்கிறார். இவர்கள் எந்தக் கட்சிக்காரர்களாகவோ, கட்சிசார்பு இல்லாதவர்களாகவோ இருக்கலாம். அவர்களை ஏற்பதற்கோ, மறுப்பதற்கோ செனட்டுக்கு உரிமை உண்டு.  

இராணுவம், உளவுத்துறை போன்ற பல துறைகள் இவரின் அதிகாரத்திற்கு உட்படுகின்றன.

இந்தியா, பிரிட்டன், ஆஸ்திரேலியாவில் பிரதம மந்திரி ஆளும்கட்சித் தலைவர்.  எந்தக் கட்சி நடுவன் அரசமைக்க அதிகப் பிரதிநிதிகளைப் பெறுகிறதோ, அக்கட்சியின் தலைவரே பிரதமர் ஆகிறார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் அவரை தேர்ந்தெடுக்கிறார்கள். அக்கட்சியோ, அதன் கூட்டணியோ மந்திரிசபை அமைக்கிறது.  

ஆனால், அமெரிக்க அதிபர் ஒரு கட்சியைச் சேர்ந்தவராக இருக்கலாம்.  சட்டப்பேரவையின் (Congress) இரு கிளைகளுமோ, அல்லது ஒரு கிளையோ இன்னொரு கட்சியின் பெரும்பான்மை பலம் பெற்றதாகவோ இருக்கலாம்.

அமெரிக்க அதிபர்கள் பைடன், ஒபாமா இவர்களின் ஆட்சியில் மட்டுமல்ல, புகழ்பெற்ற அமெரிக்க அதிபர் ரொனால்ட் ரீகன், பில் க்லிட்டன் காலத்திலும் அப்படி நடந்திருக்கிறது!

இதையும் படியுங்கள்:
US Election 2024: Part 1 - அமெரிக்க அதிபர் தேர்தல் குழப்பங்கள்!
US Election 2024

அமெரிக்க அதிபர், மக்களால் கிட்டத்தட்ட நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்படுகிறார்!  அதென்ன கிட்டத்தட்ட…?

சில மாநிலங்களில் அதிக மக்கள்தொகை இருக்கும். ஒவ்வொரு மாநிலங்களிலும் வெவ்வேறு கட்சிகள் பலம்பெற்று விளங்கலாம். அதற்கு ஏற்ப மக்கள் அந்தக் கட்சி வேட்பாளருக்கு வாக்களிக்கலாம். அப்படியானால் எவரை அமெரிக்க அதிபர் என்று ஒப்புக்கொள்வது என்ற கேள்வி எழுகிறது.

ஏன் இந்த வேண்டாத குழப்பம்? அதிபர் நாட்டு மக்களால்தானே தேர்ந்தெடுக்கப்படுகிறார்? ஆகவே, அதிக ஓட்டுகள் பெற்றவரை அதிபராக அறிவித்துவிடவேண்டியதுதானே நியாயம் என்று நாம் எண்ணுவோம்.

ஆயினும் அமெரிக்கத் தந்தையர் வேறுவிதமாக எண்ணினார்கள். 

அதன் விளைவால்தான் அதிக வாக்குகள் பெற்ற சாமுவேல் டில்டன் (1876), க்ரோவர் க்லீவ்லான்ட் (1888), ஆன்ட்ரூ ஜாக்ஸன்  (1924), அல் கோர் (2000), ஹிலரி க்லின்ட்டன் (2016) ஆகியோர் அமெரிக்க அதிபர் பதவிக்கு வரமுடியவில்லை. அவர்கள்  முறையே 264,292, 95713, 44,804, 543,816, 2,864,974 வாக்குகள் அதிகம் பெற்றும், அவர்களைவிடக் குறைந்த வாக்குகள் பெற்ற ருதர்ஃபோர்ட் ஹேஸ், பெஞ்சமின் ஃபிராங்க்லின், ஜான் க்வின்சி ஆடம்ஸ், ஜார்ஜ் புஷ், டானால்ட் ட்ரம்ப் ஆகியோர் அதிபர் ஆனார்கள்.

எலெக்டோரல் காலேஜ் (Electoral College) என்றழைக்கப்படும் தேர்தல் குழு என்று ஒன்று இருப்பதும், அமெரிக்க அதிபர் அதன்மூலம் தேர்ந்தெடுக்கப்படுவதும்தான் அதற்குக் காரணம்.

இதையும் படியுங்கள்:
US Election 2024: Part 2 - அமெரிக்க ஜனாதிபதி தேர்ந்தெடுக்கப்படுவது எப்படி? குழப்பங்களும் கட்டுப்பாடுகளும்!
US Election 2024

தேர்தல் குழு (Electoral College):

தேர்தல் குழுவின் வாக்குகள் இரண்டாகப் பிரிக்கப்பட்டுள்ளன. 

முதலாவது, ஒவ்வொரு மாநிலத்தின் மக்கள் தொகையைப் பொருத்தது; 

இரண்டாவது, ஒவ்வொரு மாநிலத்திற்கும் அதிகப்படியாக இரண்டு வாக்குகள் அளிக்கப்படுகின்றன. அது மக்கள் தொகையைப் பொருத்ததல்ல, நிலையானது.

எனவே, அமெரிக்காவின் ஐம்பது மாகாணங்களுக்கும், தலா இரண்டு வாக்குகள் கொடுக்கப்பட்டு, நூறு வாக்குகள் உள்ளன. ஆகவே, செனட்டில் 100 செனட்டர்கள் உள்ளனர். அமெரிக்காவிலேயே மிக அதிக மக்கள்தொகையுள்ள கலிஃபோர்னியாவுக்கும் (38,889,770), மிகக்குறைந்த மக்கள்தொகையுள்ள வையோமிங்குக்கும் (586,485) தலா இரண்டு செனட்டர்கள்தான்.

மக்கள்தொகை அதிகமுள்ள மாநிலம் கலிஃபோர்னியா (இந்தியாவின் உத்திரப் பிரதேசத்தைப் போல) போன்று எந்த மாநிலமும் தனது செல்வாக்கைப் பயன்படுத்தி தான் விரும்பியவண்ணம் தங்கள் மாநில உறுப்பினர் மூலம் சட்டம் இயற்றலாம் அல்லவா? அது கூடாது என்றுதான் மக்கள்தொகை குறைவான மாநிலங்களின் உரிமையும் செனட் மூலம் அமெரிக்கத் தந்தையரால் பாதுகாக்கப்பட்டது.

பிரதிநிதிசபையில் 435, அமெரிக்காவின் தலைநகரான வாஷிங்டன் டி.சி.க்கு (Dirstric of Columbia) மூன்று, செனட்டில் 100 உறுப்பினர்கள். ஆக மொத்தம் 538 வாக்குகள். 

இந்தியாவைப்போல, பிரதிநிதிசபை உறுப்பினர்களின் எண்ணிக்கை மாறாது.  மக்கள்தொகை மாற்றத்தை அனுசரித்து, ஒவ்வொரு மாநிலப் பிரதிநிதிகளின் எண்ணிக்கைகளும் ஒவ்வொரு தேர்தலுக்கும் முன்னால் மாற்றப்படும். 

ஒரொரு மாநிலத்தின் தேர்தல் குழுவிலும் எத்தனை உறுப்பினர் இருக்கவேண்டும் என்பதை அரசியல் அமைப்பு தீர்மானித்துவிட்டது. அந்தத் தேர்தல் குழுவின் வாக்குகள் அதிபராகத் தேர்தலுக்கு நிற்கும் எவருக்குச் செல்லவேண்டும் என்பதை அம்மாநிலத்தின் வாக்காளர்கள் (வாக்களிக்கும் மக்கள்) தங்கள் வாக்குகள் மூலம் தீர்மானிக்கிறார்கள். ஒரு மாநிலத்தில் டெமொகிராடிக் கட்சி அதிக வாக்குகள் பெற்றால், அந்த மாநிலத்தின் தேர்தல் குழு அந்தக் கட்சியின் தேர்தல் குழுவாக இருக்கும்.

செனட்டர்களையும் சேர்த்து, மொத்தம் 538 அரசியல்குழாம் வாக்குகளில் குறைந்தபட்சம் 270 வாக்குகள்பெற்றால்தான் அமெரிக்க அதிபர் ஆகமுடியும். இதிலிருந்து அமெரிக்க அதிபர் மக்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்படாமல், மாநிலங்களால் நியமிக்கப்பட்ட தேர்தல் குழுக்கள் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவதால்.  அதிபர் தேர்தலில் குழப்பம் ஏற்பட வாய்ப்புள்ளது.

அது எப்படி?

அமெரிக்காவில் எத்தனை கட்சிகள் உள்ளன, அவற்றின் அதிபர் வேட்பாளர்கள் எப்படித் தேர்ந்தெடுக்கப் படுகிறார்கள், தேர்தல் எவ்வாறு நடத்தப்படுகிறது என்பதை அடுத்த பதிவில் காண்போம்.

(தொடரும்)

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com