
சில அபூர்வ ஒற்றுமைகள்!
‘ஒற்றுமையே உயர்வு தரும்!’
‘ஒற்றுமையே மகிழ்வு தரும்!’
‘ஒற்றுமையே அமைதி தரும்!’
என்றெல்லாம் ஒற்றுமையின் சிறப்பை உணர்த்தியவர்கள் நம் பெரியோர்கள்!
‘ஒன்று பட்டால் உண்டு வாழ்வே! நம்மில் ஒற்றுமை நீங்கில் அனைவர்க்கும் தாழ்வே!’ என்பார் கவிஞர்!
ஒற்றுமையை உணர்த்தக் கவிதைகள், கதைகள், நாடகங்கள் என்று முத்தமிழும் ஒற்றுமையின் சிறப்பைப் போற்றி, நம்மை அதன் வழி நடக்க அறிவுறுத்துகின்றன.
பிரபலமான சிறுகதைகளும் உண்டு. மரணப்படுக்கையில் கிடக்கும் நான்கு மகன்களின் தந்தை, சுல்லிக் கட்டு ஒன்றைக் கொண்டு வரச்செய்து, ஒவ்வொரு மகனிடமும் ஒரு சுல்லியைக் கொடுத்து ஒடிக்கச் சொல்ல, அவர்கள் எளிதாக ஒடித்து விடுவார்கள். இரண்டாகக் கொடுக்கையில், திணறி, சிரமப்பட்டு ஒடிப்பார்கள். மூன்று, நான்கு என்றாகியதும் ஒடிக்கவே முடியாது.
”நீங்கள் நால்வரும் ஒற்றுமையுடனிருந்தால் எவராலும் உங்களை வெல்ல முடியாது! பார்த்துக் கொள்ளுங்கள்!” என்று சொல்லிக் கண்ணை மூடுவார் அந்தப் பாசத் தந்தை. நன்றியுடன் அவர்கள் கண்ணீர் சிந்துவார்கள்.
உலகில் ஏழு பேர் ஒரே மாதிரியாக இருப்பார்கள் என்று சொல்கிறார்கள். அவ்வாறு இருந்தாலும், பார்ப்பதற்கு மட்டுமே அவ்வாறு இருக்க முடியும். பழகும் குணத்திலும், பழக்க வழக்கங்களிலும் வேறுபட்டே இருப்பார்கள். இரட்டையாகப் பிறந்தவர்கள் உருவ ஒற்றுமை கொண்டிருந்தாலும், பிறவற்றில் வேறுபட்டே இருப்பார்கள்.
சில அபூர்வ ஒற்றுமைகள் நம் கண்களில் படுவதுண்டு. நம் கவனத்திற்கு வராத பலவும் இருக்கக் கூடும். அவ்வாறு சமீபத்தில் கவனம் பெற்ற ஒன்றுதான் இது. அதாவது நமது நாடு சுதந்திரம் பெற்ற ஆண்டான 1947 ஆம் ஆண்டின் ஆகஸ்ட் மாதமும், நடப்பு 2025 ஆம் ஆண்டின் ஆகஸ்ட் மாதமும் ஒற்றுமை பெற்ற மாதங்களாக உள்ளன. இரண்டுமே வெள்ளிக்கிழமை பிறந்து ஞாயிறன்று முடிவடைகின்றன. 78 ஆண்டுகளுக்குப் பிறகான இந்த முக்கிய மாதத்தில் நிகழ்ந்துள்ள அபூர்வ ஒற்றுமை வியப்பளிப்பதாக உள்ளது.