சமுதாயத்தில் அனைத்து பிரிவு மக்களும் பல்வேறு பணிகள் சார்ந்து அன்றாடம் பயணங்களை மேற்கொள்வது வாடிக்கையாகிவிட்டது. குறிப்பாக சாலைவழி போக்குவரத்து அனைத்து நேரங்களிலும் கிடைப்பதால், பொதுமக்கள் அதை பயன்படுத்தி வருவது அதிகமாகிக் கொண்டே வருகிறது.
ஹிட்லர் ஆட்சிக்கு வந்தபோது முதல் உலகப் போரின் காரணமாக ஜெர்மனி மோசமான பொருளாதார சீரழிவில் இருந்தது. ஆனால், அடுத்த ஐந்தே ஆண்டுகளில் உலகையே அசைக்கும் சக்தியாக வளர்ந்து நின்றது ஜெர்மனி. அந்த அளவிற்கு வேகமான வளர்ச்சியை ஜெர்மனி அடைந்ததற்கு காரணம், ஹிட்லர் கிராமங்களை தேசீய நெடுஞ்சாலைகளுடன் இணைத்ததே காரணம் எனக்கூறப்படுகிறது. எனவே, ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் தரமான சாலைகளின் பங்கு மிகப் பெரியது.
உற்பத்தியாகும் பொருட்கள் குறைந்த செலவில், விரைவாக சந்தைக்கு சென்றடைவதற்கு தரமான சாலைகள் உதவுகின்றன. இந்தியாவில் பல்வேறு நிறுவனங்களுக்குத் தேவையான உபகரணங்கள், துணிகள், நூல்கள், உணவுப் பொருட்கள், விவசாய பொருட்கள், உலோகங்கள், இரசாயனப் பொருட்கள் போன்ற பெரும்பாலான உள்நாட்டு சரக்குகளை கையாளும் மொத்த கொள்ளளவில் சாலைகள், இருப்புப்பாதைகள் இரண்டும் 72% மேல் பயன்படுத்தப்படுகின்றன. இதில் 30% மேலான சரக்குகளை கையாளுவது முழுக்க முழுக்க நமது சாலைகள் மூலம்தான்.
நாட்டில் 1951ல் 0.4 மில்லியன் கிலோமீட்டராக இருந்த சாலைகள், இன்று 56,03,293 கிலோமீட்டராக ஏற்றம் பெற்றுள்ளன. இவற்றை மேம்படுத்துவதுவதால் பயண தூரத்தையும், நேரத்தையும் நம்மால் குறைக்க முடியும். பயண தூரம் குறையும்போது எரிபொருள் பயன்பாட்டையும் குறைக்க முடியும். எரிபொருள் எரிந்து வெளியாகும் கார்பன் மோனாக்சைடின் அளவும் கனிசமாக குறையும். அதனால் சுற்றுச்சூழ்நிலையின் சீர்கேடும் பாதிப்புக்கு உள்ளாகாமல் பாதுகாக்கப்படுகிறது.
தொடர்ந்து பயன்படுத்தப்பட்டு வருவதால், தமிழ்நாட்டின் பல்வேறு சாலைகளில் அவ்வப்போது தேவைப்படும் இடங்களில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுவருவது பாராட்டுக்குரியது. எனினும் போதுமான முன்னெச்சரிகை நடவடிக்கைகள் தற்காலிக மாற்றுவழிப் பாதையில் எடுத்துக் கொள்ளப்படுவதில்லை. எனவே, இவ்வாறான பணிகள் நடைபெறும் இடங்களில் விபத்துகள் அடிக்கடி ஏற்படுகின்றன. சாலைகளை செப்பனிடும் பணிகளை மேற்கொள்ளும் ஒப்பந்ததாரர்களின் அலட்சியபோக்கே இவைகளுக்கான காரணங்களாக கூறப்படுகின்றன.
மிதமிஞ்சிய எடையை சுமந்து கொண்டு செல்லும் சரக்கு வாகனங்களின் போக்குவரத்தால் தரமற்ற சாலைகள் மிகவும் சேதமாகின்றன. ஒப்பந்த புள்ளியின்படி தரமான சாலைகளை, ஒப்பந்ததாரர்கள் அமைக்கின்றார்களா என்பதை பாரபட்சமற்ற முறையில் கண்காணித்து அரசு நடவடிக்கைகள் எடுக்கவேண்டும்.
ஒப்பந்ததாரர்கள் பொறியாளர்களாக இருத்தல் தரமான சாலைகளை அமைக்க உதவிகரமாக இருக்கும். இவ்வாறான பணிகள் நடைபெறும் போது, சாலை பராமரிப்புக்குழுவில் உள்ளுரைச் சேர்ந்த ஒருவர் சேர்க்கப்படுவது பணியின் உயர்தரத்தை உறுதிசெய்ய வாய்ப்புள்ளது.
தேவைப்படும் இடங்களில் வைக்கப்படும் முன்னெச்சரிக்கை அறிவிப்பு பலகைகளால் பலவிபத்துகளை தவிர்க்க முடியும். பாலங்களின் மேல் பராமரிப்பு பணிகள் நடைபெறும் போது அமைக்கப்படும் மாற்று வழிச்சாலைகளை போதுமான அகலத்தில் அமைக்க வேண்டும்.
நெடுஞ்சாலை பராமரிப்பு பணிகள் செய்ய மேலைநாடுகளில் குறிப்பிட்ட தூரங்களை பொது மக்கள் தத்தெடுக்கும் முறையை நம் நாட்டிலும் முயன்று பார்க்கலாம். நாட்டின் ஒவ்வொரு நகரமும் கிராமமும் தேசிய நெடுஞ்சாலையுடன் இணைப்பது நாட்டின் அடிப்படை கட்டமைப்பில் மிக முக்கியமான பணியாக மாற வேண்டும். இது சார்ந்து மத்திய, மாநில அரசுகள் சிறப்பு கவனம் காட்ட வேண்டும்.
நாட்டின் மேனாள் பிரதமர் வாஜ்பாயின் தங்க நாற்கர சாலைத்திட்டத்தின் பலன்களைத்தான் இன்று நாம் அனுபவித்து வருகிறோம்.
இந்தச் சாலைகள் தான் ஒவ்வொரு நாட்டின் பொருளாதாரத்திற்கு முதுகெலும்பு என்று கூறினால் மிகையாகாது.