அமானுஷ்ய விஷயங்களில் நம்பிக்கை உண்டா? பேயை பார்த்ததுண்டா?

Ghost
Ghost
Published on

ந்த உலகில் எந்த விஷயத்தை எடுத்துக் கொண்டாலும் அதில் இரு துருவங்கள் இருப்பதை பார்க்க முடியும். அதாவது நல்லது கெட்டது, மேடு பள்ளம், இரவு பகல் என சொல்லிக் கொண்டே போகலாம்.

இதே போல தான் கடவுள் இருக்கிறார் என நாம் நம்புகிறோம். அப்படி என்றால் கடவுளுக்கு எதிரான ஒரு சக்தி இருக்கிறது என்பதையும் நாம் ஒத்துக் கொள்ளத்தான் வேண்டும். இதில் கடவுளுக்கு எதிரான சக்தி என்பதை அதை எதிர்கொண்டவர்களால் மட்டுமே புரிந்து கொள்ள முடியும்.

24 ஆண்டுகளுக்கு முன்னர் என் வாழ்வில் நடந்த ஒரு சம்பவத்தை இங்கு பகிர விரும்புகிறேன். கல்லூரி பருவம் முடிந்த தருணம். அப்போது திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் என்ற ஊரில் நாங்கள் இருந்தோம். 2000 ஆண்டு பிறக்க போகும் நிலையில், அங்கிருந்து பாச்சலூர் என்ற மலை கிராமத்திற்கு செல்லும் வழியில் மலைச் சரிவில் நானும் நண்பர் ஒருவரும் அமர்ந்திருந்தோம். அப்போது இரவு 11 மணி தாண்டி இருக்கும். நண்பருக்கு சிகரெட் பிடிக்கும் பழக்கம் உண்டு.

நாங்கள் இருவரும் அங்கு அமர்ந்து பேசிக் கொண்டிருக்கும் போது, எங்களிடமிருந்து ஒரு 100 மீட்டர் தொலைவில் அங்குள்ள ரயில் பாதையை தாண்டி இரண்டு பேர் கைகோர்த்தபடி எங்களை நோக்கி வருவது போல் இருந்தது. அவர்களின் உயரம் அசாதாரணமாக இருந்தது. இதை பார்த்த நான் நண்பரிடம், "அங்கு பாருங்கள்... யாரோ வித்தியாசமாக நம்மை நோக்கி வருகிறார்கள்" என்றேன்.

அவர் அதை பார்த்துவிட்டு, தன் மனதுக்குள் உணர்ந்து கொண்டவராக, ஆனால் நான் பயந்து விடக்கூடாது என்பதற்காக, "அதெல்லாம் ஒன்றும் இல்லை தம்பி" என்று என்னை சமாதானப்படுத்தினார். இருந்தாலும் நான் அந்த உருவங்களை உற்று நோக்கியப்படியே இருந்தேன்.

அந்த இருவரும் எங்களுக்கு மிக அருகாமையில் வர, அதை பார்த்த நான், நண்பரிடம்,"அவர்கள் பக்கத்தில் வருவது போல் இருக்கிறது" என்றேன்.

அதன் பின்னர் அந்த இரண்டு உருவங்களும் என்ன நினைத்ததோ தெரியவில்லை எங்களுக்கு அருகாமையில் வந்து விட்டு, வழியே இல்லாத பகுதியில் நடந்து சென்று மலை உச்சியை நோக்கி பயணிக்க தொடங்கியது. இதன் பின்னர் நாங்கள் இருவரும் அங்கிருந்து உடனடியாக கிளம்ப தொடங்கினோம்.

இதையும் படியுங்கள்:
நம்பினால் நம்புங்கள் ....நம்பாவிட்டால் விடுங்கள்! புள்ளி விவரங்களும் புரியாத மர்மங்களும்!
Ghost

அப்போது மலையிலிருந்து ஒரு நபர் விரைந்து  டூவீலரில் வந்தார். அவரை நிறுத்தி, "யாராவது இரண்டு பேர் மேலே செல்வதை பார்த்தீர்களா?" என கேட்டபோது, அப்படி யாரும் இல்லை என்றார்.

தொடர்ந்து என்னிடம், "ஏன் இப்படி கேட்கிறீர்கள்?" என கேட்க, நாங்களும் நடந்தவற்றை அவரிடம் கூறினோம். அவரும் சிரித்துக் கொண்டே,"பத்து நாட்களுக்கு முன்னர் ஒரு காதல் ஜோடி இப்பகுதியில் தற்கொலை செய்து கொண்டது. அவர்கள் தான் இரவு நேரங்களில் இது போல உலாவுவதாக பலரும் பார்த்துள்ளனர். அதனால் இனிமேல் இந்த பக்கத்தில் இரவு நேரங்களில் தனியாக வராதீர்கள்" என அன்பாக எச்சரித்து விட்டு கிளம்பினார்.

இது குறித்து எனது மற்ற நண்பர்களிடம் கூறும் போது, அவர்கள் இதை நம்பவில்லை. எங்களுக்கும் அவர்கள் நம்பாததால் ஒன்றும் இல்லை. ஆனாலும் மலை கிராமத்தைச் சேர்ந்த நபரின் எச்சரிக்கையை நண்பர்களிடம் பகிர்ந்தேன். நாங்கள் பார்த்தவற்றை நம்பாத நண்பர்கள், மலை கிராமத்தைச் சேர்ந்த நபரின் எச்சரிக்கையை மட்டும் நம்பி, அந்த பக்கம் போவதையே குறைத்துக் கொண்டனர்.

இதில் விவாதம் செய்வதற்கு ஒன்றுமில்லைதான். இது போன்ற அமானுஷ்ய விஷயங்கள் அனுபவித்தவர்களுக்கு மட்டும் தான் தெரிய வரும். மற்றவர்கள் எல்லாம் அனுபவிக்கும் வரை வேடிக்கையாகவும், கிண்டலாகவும் தான் பார்ப்பார்கள், பேசுவார்கள். அதனால் இது போன்று நடந்தவற்றை அவரவர் நம்பிக்கை படியே வைத்துக் கொள்ளலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com