ஒவ்வொரு ஆண்டும் உலகளவில் 60 ஆயிரம் பேர்; இந்தியாவில் மட்டும் 20 ஆயிரம் பேர் இறப்பு - எதனால்?

Dead body
Thousands dying from stray dogs
Published on

இப்போது பலர் காலையில் வாக்கிங் செல்லவே தயங்குகின்றனர். இதற்கு காரணம் தெருநாய்கள் தான். அவை நாம் நடந்து போகும் போது, நம்மை பார்த்து குறைப்பதும், நம்மை துரத்துவதும், சில நேரங்களில் துரத்திக் கடிப்பதும் வாடிக்கையாக உள்ளது. ரத்த அழுத்தம், இதய பிரச்னை ஆகியவற்றால் பாதிக்கப்பட்டவர்கள் இதனால் மேலும் பாதிக்கப்படுகின்றனர். சில தெருநாய்கள் சாலையின் குறுக்கே திடீர், திடீரென செல்வதால் வாகன ஓட்டிகளும் இதனால் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். தெரு நாய்களில் எது வெறி நாய்? சாதாரண நாய்? என கணிக்க முடியாத நிலை இப்போது உள்ளது. நாய் கடியால் பாதிக்கப்படும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்தபடி காணப்படுகிறது.

குறிப்பாக சென்னையில் ஒரு சிறுமியை வளர்ப்பு நாய்கள் கடித்த சம்பவம், ஹைதராபாத்தில் ஐந்து வயது சிறுவனை தெரு நாய்கள் கடித்து பரிதாபமாக இறந்த சம்பவம், அதே நகரில் உணவு டெலிவரி செய்ய வந்த நபரை வாடிக்கையாளரின் வளர்ப்பு நாய் துரத்தியதில் மூன்றாவது மாடியில் இருந்து விழுந்து இறந்த சம்பவம், உத்தர பிரதேசத்தில் தெரு நாய்கள் கடித்து ஏழு வயது சிறுவன் இறந்த சம்பவம் என சொல்லிக்கொண்டே போகலாம்.

street dogs
street dogs

இது போன்ற பிரச்சனைகளை உணர்ந்து தெரு நாய் தொல்லைகளை தடுக்க மத்திய மாநில அரசுகளுக்கு சென்னை ஹை கோர்ட் நோட்டீஸ் அனுப்பியது. நாய்களை விட மனிதர்களின் உயிருக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்று கேரளா ஐகோர்ட் சமீபத்தில் கருத்து தெரிவித்துள்ளது. பஞ்சாப் மற்றும் அரியானா ஹை கோர்ட் வழங்கிய தீர்ப்பு ஒன்றில் நாய் கடித்து பாதிக்கப்படுபவர்களுக்கு மாநில அரசு குறைந்த பட்சம் பத்தாயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என தீர்ப்பு வழங்கியுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் உலகம் முழுவதும் 60 ஆயிரம் பேர் வெறிநாய்க்கடியால் இறந்து போகிறார்கள். அதில் இந்தியாவில் மட்டும் 20 ஆயிரம் பேர் இருக்கின்றனர். இதில் 50 சதவீதத்தினர் 15 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகள். இந்தியாவில் நாய்க்கடியால் கடிபடுபவர்களும் இறப்பவர்களும் பெரும்பாலும் ஏழைகளே.

உலக அளவில் ஏற்படும் ரேபிஸ் இறப்பில் 36 சதவீதம் நம் நாட்டில் நடப்பதாக உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது. வெளிநாடுகளில் யாரையாவது நாய்கள் கடித்து விட்டால் அதைப் பிடித்து கொலை செய்து விடுவார்கள். நெதர்லாந்தில் நோய்வாய்ப்பட்ட அல்லது ஆக்ரோஷமாக இருக்கும் உரிமை கேட்பாரற்ற நாய்கள் கருணை கொலை செய்யப்படுகின்றன. வேறு சில நாடுகளில் நாய் உரிமையாளர்கள் பெரும் தொகையை அபராதமாக செலுத்த வேண்டும். நம் நாட்டில் 1919 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் அரசு இயற்றிய சட்டத்தின்படி இது போன்ற நாய்கள் கொலை செய்யப்பட்டன. இந்த சட்டம் நடைமுறையில் இருந்த வரை பெரிய அளவு பிரச்சினைகள் இல்லாமல் இருந்தது.

2001 இல் இந்த சட்டம் மாற்றப்பட்டு தெரு நாய்களுக்கு கருத்தடை செய்யும் முறை நடைமுறைக்கு வந்தது அதன் பிறகு தெருநாய்கள் பல்கி பெருகிக்கொண்டே செல்கின்றன. சட்ட சிக்கல் காரணமாக தெரு நாய்களை கட்டுப்படுத்துவது பெரும் சவாலாக இருக்கிறது. நாய்களைக் கொன்றால் சிறை தண்டனை, அதே போல் பிறந்து ஏழு மாதம் முதல் ஒரு வயது வரை உள்ள நாயை கருத்தடை செய்யக்கூடாது என்றும் சட்ட விதிகள் உள்ளன. ரேபிஸ் என சந்தேகிக்கப்படும் நாய்களை கொல்ல அனுமதிக்க கூறி கேரளா அரசு, சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடுத்தது. ஆனால் அது தோல்வியுற்றது.  மாநகராட்சி பகுதியில் நாய்களை பிடித்து சென்று அறுவை சிகிச்சை பிறகு மீண்டும் அதே இடத்தில் விடுவது வழக்கமாக உள்ளது.

இதையும் படியுங்கள்:
உணவிட்டவரே நாய் கடிக்கு பொறுப்பா?
Dead body

நம் நாட்டில் மூர்க்கமான நாய் இனங்களை  இறக்குமதி செய்வதை 2016ல் மத்திய அரசு தடை செய்தது. அவற்றை இனப்பெருக்கம் செய்வதும், விற்பனை செய்வதும் தடை செய்யப்பட்டுள்ளது. மேலும் வீட்டில் வளர்க்கப்படும் நாய் இனங்களில் பீட் புல், ராட்வீலர் உள்ளிட்ட 23 வகை வெளிநாட்டு இனங்கள் தமிழகத்தில் வளர்க்க தடை செய்யப்பட்டுள்ளன. ஆனாலும் தடை செய்யப்பட்ட நாய் இனங்களை நாம் இன்றளவும் இங்கே பார்க்க முடிகிறது.

பொதுவாக நாம் கவனிக்க வேண்டிய விஷயம் நாய் நம்மை கடித்து விட்டால், அது வீட்டு நாயோ, தெரு நாயோ அதில் எந்த வேறுபாடும் கிடையாது. தடுப்பூசி போடப்பட்ட நாயின் வாயிலும் ரேபிஸ் வைரஸ் இருப்பதற்கான சாத்திய கூறுகள் உள்ளன. அதனால் எந்த நாய் கடித்தாலும் தடுப்பூசி போட்டுக் கொள்வது அவசியம். முதலில் நாய் கடித்த இடத்தை ஓடும் தண்ணீரில் நன்றாக சோப்பு போட்டு கழுவ வேண்டும். உடனே மருத்துவமனை செல்ல வேண்டும். நாய் கடித்த பின் கண்டிப்பாக ஐந்து ஊசிகள் போட வேண்டும். முகத்துக்கு அருகில் கடித்துள்ளது என்றால், குறிப்பிட்ட தடுப்பூசியை காயத்தை சுற்றிலும் போடுவது அவசியம்.  பொதுவாக நாய்க்கு தடுப்பூசி போட்டிருந்தால் கடிபட்டவருக்கு தடுப்பூசி வேண்டாம் என்பது தவறு. கடிபட்டவரும் தடுப்பூசி போட்ட கொள்ள வேண்டும்.

இதையும் படியுங்கள்:
தெருநாய்கள் தொல்லைத் தீருமா? நாய்களின் இனப்பெருக்கம் அடங்குமா?
Dead body

ஒரு ஜோடி நாய் மூன்று ஆண்டுகளில் 400 ஆக பெருகுகிறது என்கிறது ஒரு சர்வே . எனவே நாம் தான் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். ஒருவேளை நாய் கடித்து விட்டால் அதற்கான முதலுதவி, போடவேண்டிய தடுப்பூசிகள் குறித்து விழிப்புணர்வு அவசியம். அரசும் மக்களும் இணைந்து நடவடிக்கை எடுத்தால் தெரு நாய் கடிக்கு மனித உயிர்கள் பலியாவதை தடுக்க முடியும். மேலும் விபத்து இல்லாத பயணங்களையும் மேற்கொள்ள முடியும்.       

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com