
‘மாலை முழுதும் விளையாட்டு - என்று
வழக்கப்படுத்திக்கொள்ளு பாப்பா!’
- விடுதலைக் கவிஞரின் வார்த்தைகளை விவேகமுடன் கடைப் பிடித்தவர்கள் நாங்கள்!
தரும கோயிலடிதான் எங்கள் விளையாட்டுத் திடல்! மாலை ஐந்து, ஐந்தரைக்கெல்லாம் அட்டன்டென்ஸ் ஃபுல்லாகி விடும்!
-பளிங்கு
-பம்பரம்
-சோடா மூடி
-கிச்சு கிச்சு தாமரை
-சடுகுடு/கபடி
-ஒளிந்து பிடித்தல் (Hide & Seek)
-சிவன் கோயிலைச் சுற்றி ஓடி வருதல்
-குச்சிப் பந்து
-கிரிக்கட்
-பூப் பந்து
-கைப்பந்து
என்று ஏகப்பட்டவை அரங்கேறும். வயதுக்கேற்றபடி விளையாடல்களைத் தேர்ந்தெடுப்பர்! பெரும்பாலும் பூப்பந்தும், கைப்பந்தும் பெரியவர்களால் விளையாடப்படும்.
பளிங்கில் ஆரம்பித்து குச்சிப்பந்து, கிரிக்கட் வரையான விளையாடல்களைச் சிறுவர்கள் மேற்கொள்வர்.
பளிங்கு: பளிங்கியில், உள்ளே பல வண்ணப் பூக்கள் மிளிர கலர் கலரானவையும் உண்டு. பெரும்பாலும் அவை ஒரே அளவில்தான் இருக்கும். பெரிதாக ஒரு ரகம் உண்டு. அதனை மோத்தி என்று அழைப்போம். முட்டி, கசி என்று இரு மாதிரியான விளையாட்டுக்கள் இன்னும் ஞாபகத்தில் உள்ளன.
தரையில் ஒரு சிறு குழியை (சுமார் 10 பளிங்குகள் உட்புகும் அளவிற்கு), சிறு குச்சிகளைக் கொண்டு ஏற்படுத்தி விட்டு, குழியிலிருந்து 10,15 அடி தள்ளி, விளையாடுபவர்கள் அனைவரும் ஒரே நேர் கோட்டில் நின்று, குழியை மையமாகக்கொண்டு, தங்கள் பளிங்குகளை உருட்டி விட வேண்டும். நான்கைந்து பேர் விளையாட ஏற்ற ஆட்டம் இது! குழிக்கு அருகில் யார் பளிங்கு நிற்கிறதோ அவரே முதலில் ஆடத் தகுதியானவர். சிலர் உருட்டும்போதே பளிங்கு, குழியில் விழுந்து விடும்.
குழியில் போட்டவர்கள், மற்றவர்களைக் குழிப்பக்கமே வர விடாமல் தங்கள் பளிங்குகளால் மற்றவர் பளிங்குகளின் மீது குறி வைத்து அடித்து விரட்ட வேண்டும். அனைவரும் குழியில் போடும் வரை ஆட்டம் தொடரும். முதலில் குழியில் போட்டவரே வெற்றியாளர். கடைசியில் போடுபவர் தோற்றவர். அத்தோடு அந்த ஆட்டத்தை முடித்துக்கொண்டு, மீண்டும் புது ஆட்டத்தைத் தொடங்குவதற்குப் பெயரே கசி!
முட்டி என்பதில் சிறு தண்டனை உண்டு. அதிக நேரம் குழியில் போட முடியாதவரின் பளிங்கியைக் குழிக்கு அருகில் வைத்து வெற்றி பெற்றவர் தன் பளிங்கியால் அடிப்பார். அது எவ்வளவு தூரம் போகிறதே அங்கிருந்து மீண்டும் அடிப்பார். இப்படி மூன்று முறை அடிக்கலாம்.
குழியிலிருந்து தோல்வி பெற்றவரின் பளிங்கு பல மீட்டர் தூரம் சென்று விடும். தோல்வி பெற்றவர் தன் கை விரல்களை மடக்கி, முட்டியால் தள்ளி வந்து குழியில் போட வேண்டும். முட்டியால் தள்ளுவதற்கான சந்தர்ப்பங்கள், 3,5 என்று முன்பே நிர்ணயம் செய்யப்பட்டு விடும். அதற்குள் குழிக்குள் போடாவிட்டால் தண்டனை மீண்டும் தொடரும்! முட்டிதேய்ந்து விடும்! எனவேதான் இதற்குப் பெயர் முட்டி.
எம் காலத்தில் நண்பர் உத்திராபதி பளிங்கு ஆட்டத்தில் கில்லாடி. பல அடி தூரத்திலிருந்தும் சரியாக எதிரிப் பளிங்கியைத் தாக்குவார். பக்கத்திலிருந்து அடித்தால் எதிரியின் பளிங்கியை உடைத்திடவும் செய்வார்! ஆட் காட்டி மற்றும் நடுவிரல்களின் சாதுரியமே பளிங்கு ஆட்டத்தின் அடிப்படைத் தேவை.
பம்பரம்: ஆளுக்கொரு பம்பரத்தையும், அதை இயக்குவதற்கான நூல் கயிறையும் கால் சட்டை பாக்கட்டில் வைத்திருப்போம். சிலர் பம்பரத்தின் மேல், கயிற்றைச் சுற்றித் தயாராகவும் வைத்திருப்பார்கள். நான்கைந்து பேர் சேர்ந்து விட்டால் ஆட்டம் ஆரம்பமாகி விடும். தரையில் ஒரு வட்டத்தைப் போட்டு அதில் எல்லாப் பம்பரங்களையும் வைத்து விடுவோம். யார் முதலில் என்பதைப் பூவா? தலையா? போட்டு தேர்வு செய்வோம். அவர் பம்பரத்தை எடுத்து, மற்ற பம்பரங்களின் மேல் வேகமாக விடுவார். பம்பர ஆணி கூர்மையாக இருந்து, பம்பரத்தைக் குத்துபவர் திறமைசாலியாகவும் இருந்து விட்டால், மற்ற பம்பரங்கள் உடைபடும். ஆணியைக் கூர்மையாக்கவென்றே சிலர் பாக்கட்டுகளில் சிறிய அரத்தை வைத்திருப்பதும் உண்டு!
சோடா மூடி: சமமான பூமியில் ஒரு வட்டத்தைப்போட்டு அதனுள் விளையாடும் அனைவரும் 5,10,15,20 என்ற எண்ணிக்கையில் தங்கள் வசமுள்ள சோடா மூடிகளை வரிசையாக அடுக்கி விட வேண்டும். வட்டத்தை ஒட்டி ஒரு நேர்கோடு போட்டு விட்டு, 10,15 மீட்டர் தள்ளிச் சென்று நின்று, கோட்டை நோக்கித் தாங்கள் வைத்திருக்கும் சோடா மூடியை அடிப்பதற்கான கற்களை வீச வேண்டும். அந்தக் கற்களாகச் சிலர் பழைய படிக்கல்லை (இரும்பு) உபயோகிப்பார்கள். யார் வீசிய கல் கோட்டிற்கு அருகில் இருக்கிறதோ, அவரே முதலில் விளையாடுவார். நிறையச் சோடா மூடிகளைத் தனதாக்கிக் கொள்ளும் சந்தர்ப்பம் அவருக்கு வாய்க்கும். எங்கள் பக்கத்து வீட்டு மைனர் (சிறு வயதிலேயே தந்தையை இழந்தவர்) இவ்விளையாட்டில் புலி! படிக்கல்லை வைத்து லாவகமாக ஆடி வெற்றி பெறுவார்!
கிச்சு-கிச்சு தாம்பூலம்: இதை அதிகமாகப் பெண்கள் விளையாடுவார்கள் என்றாலும், மேற்கண்ட விளையாட்டுக்களில் சான்ஸ் கிடைக்காத ஆண்கள் ஓரிருவர் இதனை ஆடுவதுண்டு! எதிரெதிராக இருவர் உட்கார்ந்து கொண்டு, நடுவில் மண்ணை இரு கைகளாலும் நீளமாகச் சேமிக்க வேண்டும். பிறகு தன் கையிலுள்ள சிறிய குச்சியை அந்த மண்ணுக்குள் வெளியே தெரியாமல் வைத்து விட வேண்டும். எதிரிலிருப்பவர் தன் இரு கைகளையும் கோர்த்து, அவர் குச்சி வைத்த இடத்தில் வைத்து, கண்டுபிடிக்க வேண்டும்.
சடுகுடு/கபடி: இதற்குக் கொஞ்சம் வலிமையும் நுணுக்கமும் தேவை! இக்காலச் சிறியவர்கள் இதனைச் சினிமாக்களிலும், சீரியல்களிலும் பார்க்கலாம். இரு பக்கமும் சமமான எண்ணிக்கையில் வீரர்களை நிறுத்தி, ரைட் செல்வதன் மூலமும், ரைட் வருபவரைப் பிடித்து அவுட் செய்வதன் மூலமும் பாயிண்டுகளை உயர்த்தி, வெற்றி பெறலாம். தோத்த கச்சிப் பெருமுட்டு வரேன்… என்று பாடியபடி ரைட் செல்வது எங்கள் கால வழக்கம். ராஜமாணிக்கந்தான் இவ்விளையாட்டில் கிங்!
நான் விரைவாகச் சென்று விரைவாகவே திரும்பும்போது, சேஸில் அடிக்க வேகமாக ஓடி வருவார்கள். நான் திடீரென்று எல்லையைக் கடக்காமல் நின்று, வேகமாக வரும் அவர்களைத் தொட்டு அவுட்டாக்கி விடுவேன். எந்த விளையாட்டாக இருந்தாலும் தனிபாணி கை கொடுக்கும்!
ஒளிந்து பிடித்தல்: சில சந்தர்ப்பங்களில் ஒரு தெருவையே இவ்விளையாட்டின் எல்லையாகக் கொண்டு, மாட்டுக் கொட்டகை, வைக்கோல் போர் போன்ற இடங்களில் ஒளிந்து, கண்டு பிடிப்பவரின் பொறுமையைச் சோதிப்பதுண்டு!
சிவன் கோயிலைச் சுற்றி ஓடுதல்: ஓட்டப் பந்தயங்களில் கலந்து கொள்ள ஏதுவாக, கோயில் மதில் சுவரைச் சுற்றி 5,10 என்று கணக்கு வைத்துக்கொண்டு ஓடுவது உண்டு.
குச்சிப் பந்து: மணலைக் குவித்து ஒரு குச்சியை ஊன்றி விட்டு,10,15 அடி தள்ளி ஒரு கோட்டையும் போட்டு விட்டு, குச்சிக்கு அருகில் இருந்து முதலில் ஒரே கையாலும், அப்புறம் இரண்டு கைகளாலும், அப்புறம் கால்களுக்கு உள்ளே விட்டு என்று, பல விதங்களாகப் பந்தைக் கோட்டைத் தாண்டி ஒருவர் அடிக்க, கோட்டுக்கு வெளியில் நிற்கும் எதிரணியினர், அதனைத் தடுப்பர். தரையில் படாமல் பிடித்து விட்டாலோ, குச்சியைப் பந்தால் அடித்துச் சாய்த்து விட்டாலோ, அடித்தவர் அவுட்!ஒவ்வொரு நிலையிலும் மூன்று முறை அடிக்க வேண்டும். ’ஒத்தைக்கை ஃபர்ஸ்ட்’இன்னும் காதுகளில் ஒலிக்கிறது.
கிரிக்கட்: கவர் பால் கிரிக்கட் பந்து என்றால்,செதுக்கப்பட்ட தென்னம் மட்டையே பேட்! ஒரே அளவான மூன்று நொச்சிக் குச்சிகள்தான் ஸ்டம்ப்!
இவையெல்லாம் அவுட் டோர் என்றால் பல்லாங்குழியும், ஆடு-புலியும், பரம பதமும் இன் டோர் விளையாட்டுக்கள்!
இப்படியெல்லாந்தான் விளையாடி மாலைப் பொழுதை மகிழ்ச்சியாகக் களிப்போம்.
வியர்வை காய மெல்ல நடந்து சென்று, பிடாரி குளத்திலோ, தாமரைக் குளத்திலோ இறங்கி கழுத்தளவு தண்ணீரில் அமரும்போது கிடைக்குமே ஒரு சுகம்! அப்பப்பா!
ம்!அதெல்லாம் இனிமையான இளமைக் காலம்! அவற்றை அசை போடுவது கூட இன்று ஆனந்தம்