
இந்த உலகத்தில் பல வகையான இசை உள்ளது. இசையை விரும்பாதார் இல்லை எனலாம். சந்தோசம், அமைதி, கோபம், பாசம் என ஒவ்வொரு பாடலும் ஒவ்வொரு உணர்வை ஏற்படுத்துகின்றன. அந்த வகையில் தற்கொலை உணர்வை ஏற்படுத்தும் ஒரு பாடல் குறித்து இப்பதிவில் காண்போம் .
1933-ல் ஐரோப்பாவின் ஹங்கேரியைச் சேர்ந்த பியானோ கலைஞரும் இசையமைப்பாளருமான ரெஸ்ஸோ செரெஸ் (Rezső Seress) தற்கொலை உணர்வை தூண்டும் அளவுக்கு துக்கமான பாடலை இசையமைத்து வெளியிட்டார்.
ரெஸ்ஸோ செரெஸ், பல வருடங்கள் கடினமாக உழைத்தாலும், இசை வாழ்வில் பெரிய பெயரை பெற முடியவில்லை. அந்த நேரத்தில், காதலித்த பெண்ணும் தன்னை விட்டுச் செல்ல, சோகத்தின் உச்சிக்கே சென்ற ரெஸ்ஸோ செரெஸ், தனது பியானோ இசையைக் கொண்டு 'Gloomy Sunday' என்ற பாடலை உருவாக்கினார்.
'Gloomy Sunday' என்றால் 'இருண்ட ஞாயிறு' என்று அர்த்தம். இந்தப் பாடல் வரிகளில், தான் சாவுக்கு ஏங்குவது போலவும், உயிரிழந்த பின் சொர்க்கத்தில் தனது காதலியுடன் சேர்வது போலவும் அமைத்திருந்தார் பாடல் வரிகளை எழுதிய லாஸ்லோ ஜாவோர் (László Jávor) என்பவர். அதன்படி, 1933-ல் வெளியான 'Gloomy Sunday' பாடல் வெளியான சில காலங்களிலேயே நல்ல வரவேற்பை பெற்று , பல இசையமைப்பாளர்களால் இந்த பாடல் பலமுறை ரீ கிரியேட் செய்யப்பட்டது.
எனினும், ஆரம்பத்தில் பாடல் உருவாக்கப்பட்ட சமயத்தில், ஹங்கேரி மற்றும் ஐரோப்பாவை தாண்டி சர்வதேச அளவில் பாடல் ஹிட் அடித்தது. பாடல் வெற்றியுடன், ரெஸ்ஸோ எதிர்பார்த்த பெயர், புகழ் என அனைத்தும் தேடி வந்தது. ஆனால், அந்த சந்தோஷம் நீண்ட நாள் நிலைக்கவில்லை.
ரெஸ்ஸோவுக்கு பெயரையும் புகழையும் பெற்றுக்கொடுத்த அந்தப் பாடலை கேட்ட ஹங்கேரி நாட்டைச் சேர்ந்த 17 பேர் தற்கொலை செய்ததாக சொல்லப்பட்டது. உலக அளவில் கணக்கில் எடுத்துக் கொண்டால் 100-க்கும் மேற்பட்டோர் இந்தப் பாடலை கேட்டு தற்கொலை செய்துக் கொண்டனர். ஒரு கட்டத்தில் ஹங்கேரியின் தற்கொலை பாடல் என்றே இந்தப் பாடல் அழைக்கப்பட்டது.
பல நாடுகள் 'Gloomy Sunday' பாடலை தடை செய்ததோடு ரேடியோவிலும் ஒளிபரப்பவில்லை. தற்கொலை செய்திகளும், தடை செய்திகளும் அடுத்தடுத்து வர, விரக்தி அடைந்த இசையமைப்பாளர் ரெஸ்ஸோ செரெஸ் மனம் நொந்து இறுதியில் அவரே தற்கொலை செய்துகொண்டார். இதே பாடலை ரீ கிரியேட் செய்த 3 இசையமைப்பாளர்களும் தற்கொலை செய்து இறந்த சோகமும் நிகழ்ந்துள்ளது. பிபிசி ரேடியோ 66 வருடங்கள் இந்தப் பாடலை தடை செய்திருந்தது.
இறுதியாக 2002-ம் ஆண்டு தான் இந்தப் பாடலுக்கான தடைகள் நீக்கப்பட்டன.
(மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதனை மாற்ற, கீழ்காணும் எண்களுக்கு அழைக்கவும். மாநில உதவிமையம்: 104 ; சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050.)