

திருமணமான ஆரம்பத்தில் குடும்பப் பொறுப்புகள், நிதிப் பிரச்னைகள் மற்றும் வேலைப் பிரச்னைகள் இவை எல்லாம் சேர்ந்து தாம்பத்திய உறவுகளில் மன அழுத்தத்தை ஏற்படுத்தும். வெளிப்புற சூழ்நிலைகளால் அதிக சுமை ஏற்படும்போது நீங்கள் இந்த உறவைப் புறக்கணிக்கலாம்.
நெருக்கம் மற்றும் அர்ப்பணிப்பு என்று வரும்போது, இருவருமே வெவ்வேறு விதமான எதிர்பார்ப்புகளைக் கொண்டிருக்கலாம். இந்த எதிர்பார்ப்புகளைப் புரிந்து கொள்ளாவிட்டால் அல்லது பூர்த்தி செய்யாவிட்டால் விரக்தியும் அதிருப்தியும் ஏற்படலாம். இதை ஓரளவிற்கு சரி செய்ய கூடிய வகையில் ஒரு சில விதிகள் உங்களுக்கு உதவலாம்.
சரி வாங்க... உங்களுடைய தாம்பத்திய வாழ்க்கையில் கடைபிடிக்க வேண்டிய ஒரு சில விதிமுறைகள் இருக்கின்றன. பார்க்கலாமா அவற்றை...?
டிரிபிள் செவன் விதி (7-7-7):
ஏழு நாட்களில் ஒரு நாள் – கவனம் செலுத்துங்கள்:
புதிதாக திருமணமான தம்பதிகள் அன்பான மற்றும் சிறந்த இணைப்பைப் பேணுவதற்காக நீங்கள் ஒவ்வொரு வாரமும் ஒரு வழக்கமான டேட்டிங் இரவைத் திட்டமிட வேண்டும். அதாவது அது ஒரு திரைப்பட இரவாகவோ அல்லது வெளியே சென்று சாப்பிடும் இரவாகவோ அல்லது இருவரும் சேர்ந்து ஒன்றாக நேரத்தைச் செலவிட அனுமதிக்கும் வேறு எந்த செயலாகவோ இருக்கலாம். ஒருவருக்கொருவர் கவனம் செலுத்தும் வகையில் மற்ற கவனச்சிதறல்களைத் தவிர்க்க வேண்டும். ஒவ்வொரு வாரமும் ஏழு நாட்களில் ஒரு நாள் இரவை இதற்காக செலவழிக்க வேண்டும்.
ஏழு வாரங்களுக்கு ஒருமுறை:
ஏழு வாரங்களுக்கு (அதாவது இரண்டு மாதத்திற்கு) ஒருமுறை வேறு எங்கேயாவது தங்கி ஓய்வெடுக்கும் வகையில் ஒரு சிறிய பயணத்தை திட்டமிட வேண்டும். வழக்கமான சூழல்களிலிருந்து விலகி இருக்கும் இந்த நேரத்தில், வழக்கமான கவனச்சிதறல்கள் இல்லாமல் நிம்மதியாக ஓய்வெடுக்கவும், தாம்பத்திய உறவை மேம்படுத்தவும் உதவியாக இருக்கும். இன்னும் சொல்லப் போனால், இது உறவுக்கு ஒரு சாகச உணர்வையும் புதுமையையும் சேர்க்கிறது. மேலும் அன்றாட வாழ்க்கையின் டென்ஷனை குறைக்கவும் உதவுகிறது.
ஏழு மாதங்களுக்கு ஒரு முறை விடுமுறை பயணம்:
ஏழு மாதங்களுக்கு ஒரு முறை (வருடத்திற்கு ஒரு முறை அல்லது இரண்டு முறை) நீண்ட விடுமுறை பயணம் அல்லது சுற்றுலா செல்ல திட்டமிடுங்கள். அது ஒரு இன்பமான உறவுக்கு பெரிதும் பயனளிக்கும். இதனால் நீங்கள் உங்களுடைய உறவை வலுப்படுத்தி கொள்ளலாம், புதிய இடங்களுக்கு பயணம் செய்யும் போது, அது மறக்க முடியாத சில சிறப்பான நினைவுகளை உருவாக்கலாம். ஒன்றாக பயணம் செய்வதன் மூலம் ஒருவரையொருவர் நன்கு அறிந்தும் கொள்ளலாம்.
அடுத்தபடியாக 3 × 3 மற்றும் 3-3-3 விதிகளை பார்க்கலாம்...
3× 3 விதி :
பொதுவாக 3×3 விதி என்பது புதிதாக திருமணமான ஒவ்வொருவரும் தங்கள் துணையுடன் சேர்ந்து 3 மணிநேரம் தரமான நேரத்தையும், தனக்காக 3 மணிநேரம் தனியாகவும் செலவிட வேண்டும் என்பதைக் குறிக்கிறது.
3-3-3 விதி:
இந்த விதியின் கொள்கையை நீங்கள் மன அழுத்தத்தில் இருக்கும் போது பின்பற்றலாம். அதாவது நீங்கள் உங்கள் பார்டனரிடம் வாக்குவாதமோ சண்டையோ போட்டு விட்டீர்கள் என்று வைத்து கொள்வோம். மேலும் சண்டை நிற்காமல் தொடரும் போது நீங்கள் ஒரு இடத்தில் உட்கார்ந்து கொண்டு அமைதியாக மூன்று விஷயங்களை பற்றி சிந்திக்க வேண்டும்.
1. நீங்கள் பார்க்கும் மூன்று விஷயங்கள்,
2. கேட்கும் மூன்று விஷயங்கள் மற்றும்
3. நீங்கள் தொடக்கூடிய மூன்று விஷயங்கள்.
இவற்றை யோசிக்க சிறிது நேரம் ஒதுக்க வேண்டும். இந்த ஒரு சிறிய இடைவெளியானது உங்களை மீண்டும் நிகழ்காலத்திற்கு கொண்டு வந்து பதட்டமான அறிகுறிகளைக் குறைக்க உதவும்.
கடைசியாக உங்களுக்கு ஒன்றை கூறுகிறேன், எல்லா விதிகளும் எல்லோருக்கும் ஒத்து வருமா என்று தெரியாது, ஆனால் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டும், சகிப்பு தன்மையையும், பொறுமையையும் வளர்த்து கொண்டு அன்போடு அரவணைத்து வாழ்ந்தால் கண்டிப்பாக ஒரு இன்பமான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கையை வாழலாம்!