
காதலர்கள் தினமும் நேரிலும், குறுஞ்செய்தி மற்றும் வாட்ஸ்அப் மூலம் பலமுறை தங்களுக்குள் 'ஐ லவ் யூ 'சொல்லிக் கொள்வார்கள். திருமணமான புதிதில் தம்பதிகள் அடிக்கடி ஐ லவ் யூ சொல்லிக் கொள்வார்கள். ஆனால் வருடங்கள் ஓட ஓட , அவர்கள் நினைவில் இருந்து 'ஐ லவ் யூ' என்கிற வார்த்தை அகற்றப்பட்டு, கிட்டத்தட்ட அவர்களின் அகராதியில் இருந்தே நீக்கப்பட்டு இருக்கும்.
குடும்பச் சுமை, வேலைப்பளு, தினசரி வாழ்வின் சிக்கல்கள், போராட்டங்கள் என பல காரணங்களால் தங்களுக்குள் தம்பதியர் ஒருவர் மீது ஒருவர் கொண்டிருக்கும் காதலை வெளிப்படுத்த மறந்து விடுகிறார்கள். அல்லது 'அதுதான் திருமணம் ஆகிவிட்டதே. எதற்கு இதெல்லாம்?’ என்று நினைப்பவர்களும் உண்டு.
மேலை நாடுகளில் சர்வசாதாரணமாக தம்பதியர் தமக்குள் ஐ லவ் யூ சொல்லிக் கொள்வார்கள். ஆனால் இந்தியா போன்ற பாரம்பரியம் மிகுந்த நாடுகளில் பொதுவாக தம்பதியர் தமக்குள் இப்படி எல்லாம் சொல்லிக் கொள்வதில்லை.
மனைவி அல்லது கணவன் மீது இருக்கும் பாசத்தை மனதிற்குள் புதைத்து வைத்துக்கொண்டு வலம் வருபவர்கள் ஏராளம். திருமணம் ஆகி 10 வருடங்கள் ஆன தம்பதிகள், மூன்றில் ஒரு பங்கு தம்பதிகள் மட்டுமே தினமும் ஐ லவ் யூ சொல்லிக் கொள்கிறார்களாம்.
தம்பதிகளுக்கு எத்தனை வயது ஆனால்தான் என்ன? காலையில் எழுந்ததும் குட் மார்னிங் சொல்வதுபோல தன் துணையிடம் 'ஐ லவ் யூ' என்று சொல்லிப் பாருங்கள். அந்த நாள் முழுவதும் இனிமையாக, மகிழ்ச்சியாக கழியும். அலுவக வேலையில் சிக்கலான சந்தர்ப்பங்களில் துணையின் முகம் நினைவில் வந்து அவற்றையெல்லாம் எளிதாக எதிர்கொள்ள உதவும். அதேபோல இரவு தூங்கும் முன்பு தம்பதியர் தமக்குள் ஐ லவ் யூ சொல்லிக் கொண்டு உறங்கவேண்டும். இனிய நினைவுகளுடன் இருவருக்கும் நல்ல தூக்கம் வரும்.
தம்பதியர் தினமும் இரண்டு முறை ஐ லவ் யூ சொல்வதால் என்னென்ன பலன்கள் ஏற்படும் தெரியுமா?
1. தாம் தனது துணையால் நேசிக்கப்படுவதாக உணர்வது ஒரு மனிதருக்கு எல்லையில்லாத மகிழ்ச்சி அளிக்கும். தன்னை பற்றி அக்கறை கொள்ள தன் துணை இருக்கிறார் என்ற பாதுகாப்பு உணர்ச்சியைத் தரும். மன அழுத்தம் மற்றும் பதட்டத்திற்கு தடைக்கல்லாக மாறுகிறது. இருவருக்கும் நல்ல ஆரோக்கியமான மனநிலை உருவாகிறது.
2. தாம் நேசிக்கப்படுவதாக உணரும்போது அது தம்பதியரை உயிர்ப்புடன் வைக்கிறது. உறவை வளர்க்கிறது. உணர்வுகளை வலுப்படுத்துகிறது. அன்புக்குரியவர்கள் முக்கியம் என்பதையும் நீங்கள் அவர்களுக்காக இருக்கிறீர்கள் என்பதை நினைவூட்டுகிறது.
3. அன்பை நேசத்துடன் வெளிப்படுத்தும்போது தனது துணையை மதிப்பதாக உணர வைக்கிறது. வாட்ஸ் அப் மற்றும் குறுஞ்செய்திகளில் ஐ லவ் யூ சொல்லிக் கொண்டாலும் வாய் வார்த்தையாக முகத்தைப் பார்த்து, குறிப்பாக கண்களை நேருக்கு நேர் பார்த்து சொல்லும்போது அது தம்பதியருக்குள் இருக்கும் பிணைப்பை வலுப்படுத்துகிறது. வெறும் வாய் வார்த்தையாக இல்லாமல், மனதின் ஆழத்திலிருந்து சொல்லும்போது, அதன் மதிப்பு இன்னும் கூடுகிறது.
ஐ லவ் யூ சொல்வது ஒரு விதத்தில் நன்றியை தெரிவிப்பதுபோல் ஆகும். தாம் நேசிப்பவரை பற்றி எப்படி உணர்கிறோம் என்பதை வெளிப்படுத்தும் விதம்தான் ஐ லவ் யூ சொல்வது. அவர், தம் மீது வைத்திருக்கும் அன்பைப் புரிந்து கொண்டதன் அடையாளமே ஐ லவ் யூ என்கிற பதமாக வெளிப்படுத்தப்படுகிறது.
உங்களுக்கு திருமணம் ஆகி எத்தனை வருடங்கள் ஆயிருந்தாலும் சரி. 30 ஏன் 50 வருடங்களே ஆயிருந்தாலும் ஐ லவ் யூ சொல்லுங்கள். அதை இன்றே ஆரம்பியுங்கள். பிறர் முன் சொல்ல கூச்சமாக இருந்தால் தனிமையில் சொல்லலாம். வாழ்க்கை தித்திப்பாக மாறும்.