

இந்த ஆண்டிற்கான பட்ஜெட்டில் சென்னை, பெங்களூரு, ஹைதராபாத் உள்ளிட்ட முக்கிய நகரங்களை இணைக்கும் 7 அதிவிரைவு ரயில் வழித்தடங்கள் அமைக்கப்படும் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். வரவேற்கத்தக்க அம்சம்.
அவசர உலகமாக மாறி உள்ள இன்றைய சூழலில் இதுபோன்ற ரயில் வழித்தடங்கள் தேவைதான். சென்னை, பெங்களூரு இரண்டுமே மிக முக்கியமான நகரங்கள். வர்த்தகம், கல்வி, வேலைவாய்ப்பு தொடர்பாக இந்த நகரங்களுக்கு இடையே பயணிப்பவர் அதிகம். அவர்களுக்கு இது ஒரு வரப்பிரசாதம்.
குறைந்தது 5 லிருந்து 10 ஆண்டுகள் ஆகலாம் இந்த திட்டம் நிறைவேற. உத்தேச முதலீடு ரூ.16 லட்சம் கோடி என்று திட்டமிடப்பட்டுள்ளது. இந்த பாதை திறக்கப்படும் போது அதிலிருந்து கிடைக்கும் வருவாய் அபரிமிதமாக இருக்கும். அந்த திட்டம் முழுமையாக நிறைவேறி ரயில்கள் இயக்கப்படும் வரையில் அந்த முதலீட்டில் இருந்து எந்த வருவாயும் கிடைக்காது.
ஏற்கனவே அறிவிக்கப்பட்ட வேளாங்கண்ணி - திருத்துறைப்பூண்டி, திண்டிவனம் - நகரி, பழனி - ஈரோடு புதிய பாதைகளுக்கான பணிகள் முடங்கிப் போகாமல் தொடர்ந்து நடந்து விரைவில் முடிய வேண்டும். இந்த பாதைகளுக்கான நிதி ஒதுக்கீடு போதிய அளவில் இல்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. கும்பகோணம் - விருத்தாசலம், தஞ்சாவூர் - அரியலூர் இடையேயான புதிய பாதை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை சுமார் 20 ஆண்டுகளுக்கு மேலாக நிலுவையில் உள்ளது.
மதுரை - போடிநாயக்கனூர் இடையே ரயில் சேவை இருந்தாலும் மக்களின் தேவைக்கேற்ப ரயில்கள் இன்னும் விடவில்லை. போடி - சென்னை இடையே வாரத்திற்கு மூன்று நாட்கள் மட்டுமே விரைவு ரயில் இயங்கி வருகிறது. தினசரி சேவை வேண்டுமென்று அப்பகுதி மக்கள் கேட்டு வருகிறார்கள்.
பேரளம் - காரைக்கால் இடையே அகல பாதை அமைக்கப்பட்டு ஆய்வுகள் முடிந்து ஐந்து மாதங்களுக்கு மேல் ஆகிவிட்டது. இன்னும் முறைப்படி பாதை திறக்கப்படவில்லை. சரக்கு போக்குவரத்து நடந்து கொண்டு இருக்கிறது.
சமீபத்தில் திருநள்ளாறு ரயில் நிலையம் அருகே ரயில் பயணிகள் நல சங்கம் சார்பாக பயணிகள் ரயில் போக்குவரத்தை தொடங்க வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
தொலைநோக்கு பார்வையில் புதிய, புதிய திட்டங்களை கொண்டு வருவதை வரவேற்கும் நேரத்தில், பழைய திட்டங்களின் நிலைமை என்ன என்பது குறித்தும், எப்போது பொதுமக்களின் பயன்பாட்டுக்கு வரும் என்பது குறித்தும் ரயில்வே அறிக்கை வெளியிட வேண்டும்.
நமது நாட்டில் ரயில் சேவையை உபயோகிப்பாளர்கள் பெரும்பாலானோர் சாதாரண மற்றும் நடுத்தர வகுப்பினர். வந்தே பாரத் ரயில்களில் பயணிப்பவர்கள் சாதாரண மக்கள் அல்ல. நீண்ட தூரம் செல்ல பயணிகள் ரயில் வசதியாக இருக்கும்.
தமிழ்நாடு முழுவதும் தொடங்கப்பட்டுள்ள புதிய பாதைகள் அமைக்கும் பணிகள் விரைவில் முடிந்து புதிய ரயில்கள் இயக்கப்பட வேண்டும். பணிகள் முடிந்த பாதையில் ரயில்கள் இயக்க வேண்டும்.
ரயில்வேயிடம் பயணிகள் தற்போது எதிர்பார்ப்பது இந்த அதிவிரைவு சேவைகளை மட்டுமே...