

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், தனது தொடர்ச்சியான ஒன்பதாவது பட்ஜெட்டை நேற்று (ஜனவரி 1-ம்தேதி) மக்களவையில் தாக்கல் செய்தார். அதன்படி 2026-27ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் நிதி சார்ந்த புள்ளிவிவரங்களைத் தாண்டி, இந்த பட்ஜெட்டில் பிராந்திய முக்கியத்துவம் வாய்ந்த பல அறிவிப்புகளும் இடம்பெற்றிருந்தன. இந்த பட்ஜெட்டில் தேர்தல் நடைபெறவிருக்கும் தமிழ்நாட்டிற்கான முக்கிய திட்டங்கள் இடம்பெற்றுள்ளன. அதில், தமிழ்நாடு, ஒடிசா, ஆந்திரப் பிரதேசம் மற்றும் கேரளாவில் அரிய வகை கனிமப் பெருவழித்தடங்கள் அமைக்கப்பட உள்ளன. ஹைதராபாத்-சென்னை உட்பட ஏழு அதிவேக ரயில் வழித்தடங்கள் திட்டமிடப்பட்டுள்ளன.
தமிழ்நாடு மற்றும் மூன்று பிற மாநிலங்களுக்கான அரிய வகை கனிமங்கள் வழித்தடம் :
முக்கிய அறிவிப்புகளில் ஒன்றாக, தமிழ்நாடு, ஒடிசா, ஆந்திரப் பிரதேசம் மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களில் பிரத்யேக அரிய வகை கனிமங்கள் வழித்தடங்கள் அமைக்கப்படும் என்று நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.
இந்த வழித்தடங்கள், அரிய வகை தனிமங்களைச் சுரங்கத் தொழில், பதப்படுத்துதல், ஆராய்ச்சி மற்றும் உற்பத்தி செய்வதில் இந்தியாவின் திறன்களை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளன.
இந்த முயற்சி ஒரு ஒருங்கிணைந்த சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்கவும், இறக்குமதி சார்புநிலையைக் குறைக்கவும், முக்கிய கனிமங்கள் துறையில் இந்தியாவை ஒரு உலகளாவிய சக்தியாக நிலைநிறுத்தவும் உதவும் என்று நிர்மலா சீதாராமன் கூறினார்.
அதிவேக ரயில் இணைப்பு
போக்குவரத்து மற்றும் பொருளாதார ஒருங்கிணைப்பை மேம்படுத்தும் வகையில், முக்கிய நகரங்களுக்கு இடையே ஏழு அதிவேக ரயில் வழித்தடங்களை அமைப்பதற்கும் நிதியமைச்சர் முன்மொழிந்தார். அவற்றில் தெலுங்கானா மற்றும் தமிழ்நாட்டிற்கு இடையேயான இணைப்பை மேம்படுத்தும் என எதிர்பார்க்கப்படும் ஹைதராபாத்–சென்னை வழித்தடமும் ஒன்றாகும்.
முன்மொழியப்பட்ட மற்ற வழித்தடங்களில் மும்பை–புனே, புனே–ஹைதராபாத், டெல்லி–வாரணாசி மற்றும் வாரணாசி–சிலிகுரி ஆகியவை அடங்கும். இந்த வழித்தடங்கள் நகர்ப்புற வளர்ச்சிக்கு ஆதரவளிக்கும், பயண நேரத்தைக் குறைக்கும் மற்றும் பிராந்திய வளர்ச்சியைத் தூண்டும் என்று சீதாராமன் கூறினார்.
தேங்காய் ஊக்குவிப்பு திட்டம்
மற்றொரு முக்கிய அறிவிப்பில், தமிழ்நாடு உட்பட முக்கிய தேங்காய் விளையும் மாநிலங்களில் உற்பத்தியை அதிகரிக்கவும், உற்பத்தித்திறனை மேம்படுத்தவும் தேங்காய் ஊக்குவிப்பு திட்டம் கொண்டு வரப்படும். இதில் தேங்காய் உற்பத்தியை பெருக்க, மரக்கன்றுகள் நடப்படும் என்று நிதியமைச்சர் கூறினார்.
இந்தியாவை முந்திரி மற்றும் தேங்காய் உற்பத்தி மற்றும் பதப்படுத்துதலில் தன்னிறைவு அடையச் செய்யும் நோக்கில், முந்திரி மற்றும் கோகோவிற்கான பிரத்யேக திட்டங்களையும் அவர் அறிவித்தார். இந்த முயற்சிகள் ஏற்றுமதி போட்டித்தன்மையை மேம்படுத்துவதையும், 2030 ஆம் ஆண்டுக்குள் இந்தியா முந்திரி மற்றும் கோகோவை பிரீமியம் உலகளாவிய பிராண்டுகளாக மாற்றுவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளன.
* தமிழகத்தில் ஆதிச்சநல்லூர் உள்பட 15 இடங்களில் கலாச்சார செழுமையை விளக்கும் வகையில் மையம் அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் தூத்துக்குடி மாவட்டத்தில் முக்கிய தொல்லியல் இடமாக ஆதிச்சநல்லூர் விளங்கி வருகிறது.
* பொதிகை மலையில் மலையேற்ற சுற்றுலா வழித்தடம் அமைக்கப்படும் என பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
* தமிழ்நாடு ஆந்திரா எல்லையில் அமைந்துள்ள பழவேற்காடு ஏரியில் பறவைகளை பார்வையிடும் சுற்றுலாவை ஊக்குவிக்க பறவை கண்காணிப்பு மையம் அமைக்கப்படும்.
* மாநிலத்தில் உள்ள கோவில் நகரங்கள் உட்பட, 2-ம் நிலை மற்றும் 3-ம் நிலை நகரங்களில் உள்கட்டமைப்பை வலுப்படுத்த அடுத்த ஐந்து ஆண்டுகளில் 20,000 கோடி ரூபாய் ஒதுக்கப்படும் என்று பட்ஜெட் உரையில் நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.
* ஒடிசாவில் தால்சர் முதல் தமிழகத்தின் ஆம்பூர் வரை புதிய நீர்வழிப்பாதை (Inland Waterway) திட்டம் கொண்டு வரப்படும்.
* நிதி ஆணையத்தின் பரிந்துரைகளின் மாநிலங்களுக்கு படி ரூ.1.40 லட்சம் கோடி விடுவிக்கப்படுவதாகவும் அவர் அறிவித்தார்.
* மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள ஜவுளித் துறைக்கான ஒருங்கிணைந்த திட்டத்தின் மூலம் அமெரிக்காவின் 50% இறக்குமதி வரி விதிப்பால் நெருக்கடியில் இருக்கும் திருப்பூர் பின்னலாடைத் துறைக்கு, ஒரு முக்கியமான மீட்பு நடவடிக்கையாகப் பார்க்கப்படுகிறது. நவீன இயந்திரங்கள் மற்றும் உள்நாட்டு மூலப்பொருட்கள் மூலம் உற்பத்திச் செலவு குறையும் போது, வரி விதிப்பையும் மீறி இந்திய ஆடைகள் உலகச் சந்தையில் போட்டி போட முடியும்.
தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் மாதம் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அதுகுறித்து பல்வேறு முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் குறிப்பிட்டு சொல்லும்படியாக தமிழகத்திற்கு எந்த விதமான தனித்துவமான அறிவிப்புகள் வெளியாகவில்லை என்று தான் சொல்லவேண்டும்.
இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது X தளத்தில், ‘தமிழ்நாட்டின் நலன் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டுள்ளதோடு, ஏழைகள், பெண்கள், விவசாயிகள், விளிம்புநிலை மக்களுக்கு நன்மை பயக்கும் முக்கிய திட்டங்கள் இதில் இடம் பெறவில்லை. நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்குப் பெரும் பங்களிப்பைச் செலுத்தி வரும் தமிழ்நாட்டிற்கு நிதிப்பகிர்வு சதவீதம் இதர வளர்ச்சியடைந்த மாநிலங்களைக் காட்டிலும் குறைவாகவே அளிக்கப்பட்டிருப்பது மிகவும் வருத்தமளிக்கிறது.
வழக்கமாக ஒன்றிய நிதி அமைச்சர் தாக்கல் செய்யும் பட்ஜெட்டில் இடம்பெறும் திருக்குறளும் இந்த முறை இடம் பெறவில்லை. தமிழ்நாட்டிற்கு எனப் புதிய திட்டங்கள் எதுவும் இந்த பட்ஜெட் அறிக்கையில் இல்லை என்பது தமிழ்நாட்டை ஒன்றிய அரசு தொடர்ந்து மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடத்திவருகிறது என்பதை வெட்டவெளிச்சமாக்கியிருக்கிறது’ என்று விமர்சித்திருக்கிறார்.