வாழும் சூழலுக்கு ஏற்ப தகவமைத்துக் கொள்ளும் திறன் அனைத்து உயிரினங்களுக்கும் உண்டு. ஒரு முறை தகவமைத்துக் கொண்டுவிட்டால் அது மரபணுவில் பதிந்துவிடும். அடுத்த சந்ததிக்கு அந்தத் தகவமைப்பு இயற்கையாகவே மரபணுக்களால் கடத்தப்பட்டுவிடும். அப்படி ஏதோ ஒரு காலத்தில் ஏதோ ஒரு சூழலுக்காகத் தகவமைத்துக் கொண்ட பண்போடு இன்றும் மனிதர்கள் பிறந்து வாழும் ஏழு வித்தியாசமான இடங்கள் பற்றித் தெரிந்து கொள்ளலாமா..
சீனத்தின் சிச்சுவான் மாகாணத்தில் உள்ள ஒரு குக்கிராமமான யாங்ஸி, உலகின் மிக வித்தியாசமான இடங்களில் ஒன்றாகும். குள்ள மனிதர்களைப் பார்த்திருப்பீர்கள். ஒரு கிராமத்தில் பாதிக்குப் பாதி பேர் குள்ளர்களாக இருந்து பார்த்திருக்கிறீர்களா? அப்படிப்பட்ட ஒரு கிராமம் தான் இந்த யாங்ஸி. இது சாதாரணமாக இருந்த கிராமம் தான். 1951ல் மர்ம நோய் இக்கிராம மக்களைக் குறிப்பாகக் குழந்தைகளைத் தாக்கியுள்ளது. அதன் காரணமாக வளர்ச்சி பாதித்து, அடுத்தடுத்த தலைமுறைக்கும் இந்த பாதிப்பு தொடர்ந்து வருகிறது. இங்குள்ள நீர், நிலம், சூழலைப் பல்லாண்டுகளாய் ஆய்வு செய்துவந்த போதிலும் குள்ளர்கள் அதிகம் பிறப்பதன் சரியான காரணத்தைக் கண்டறிந்தபாடில்லை.
யாங்ஸிக்கு நேர் எதிரான கிராமம் இது. அங்கே குள்ளர்கள் என்றால் இங்கே நெட்டையர்கள். இக்கிராமத்தினரின் சராசரி உயரமே ஆறடிக்கு மேலேயாம். இந்த மலைக்கிராமத்தில் வாழ்பவர்கள் இங்கு நிலவும் கடுமையான காலநிலைக்கு ஈடுகொடுக்க பரிணாம வளர்ச்சியில் அடைந்த தகவமைப்பே இவர்களின் இந்த உயரம் என்கிறார்கள் அறிவியல் அறிஞர்கள். இவர்களின் சத்தான உணவுப் பழக்கமும் இத்தகைய வளர்ச்சிக்குக் காரணமாக இருக்கலாம் என்றும் கூறுகிறார்கள்.
கடல் நாடோடிகள் என்று அழைக்கப்படும் இந்த பாஜாவ் இன மக்கள், பிலிப்பின்ஸ், மலேசியா, இந்தோனேஷியா ஆகிய தீவுகளில் கணிசமான அளவில் வசிக்கிறார்கள். இந்த இன மக்களிடம் காணப்படும் ஒரு வித்தியாசமான அமைப்பு யாதெனில் இவர்களால் 13 நிமிடங்களுக்கு மேலாக மூச்சடக்கி 200 மீட்டர் ஆழத்திற்கு கடலுக்குள் டைவ் அடித்துச் செல்ல முடிகிறது. இந்த ஆச்சரியமான திறமை இவர்களுக்கு மரபணுவிலேயே இருப்பதாக விஞ்ஞானிகள் கருதுகிறார்கள்.
வட பாகிஸ்தானில் உள்ள இந்தக் கிராமம் எழில் கொஞ்சும் இயற்கை அழகுக்காக மட்டும் பிரசிதம் அல்ல. இங்கு வாழும் மக்கள் பெரும்பாலானோர் நூறு வயதை கடந்து ஆரோக்கியமாக வாழ்ந்து வருகிறார்கள். குறிப்பாக இந்த ஹன்சா பள்ளத்தாக்கில் வாழும் பெண்கள் பல்லாண்டுகளுக்கு இளமையாக வாழ்கிறார்கள். 60 முதல் 70 வயது வரை உள்ள பெண்கள் கூட குழந்தையைச் சுமந்து பெற்றெடுக்கிறார்கள். இங்குள்ள இயற்கையான உணவும், சூழலும், சுறுசுறுப்பான வாழ்க்கை முறையும் தான் இவர்களின் இந்த வலிமைக்கும் இளமைக்கும் காரணம் என்கிறார்கள் அறிவியலாளர்கள்.
‘நீட்டு முடி கிராமம்’ என்று இதற்கு அடைமொழி கொடுக்கப்பட்டுள்ளது. இங்குள்ள பெண்கள் தங்களின் வாழ்நாளிலேயே ஒரே ஒரு முறை தான் கூந்தலைக் கத்தரிப்பார்களாம். அதுவும் சரியாக அவர்களின் 17ஆம் வயதில் தானாம். இவர்களின் கூந்தல் சராசரியாக ஆறு அடிக்கும் நீளமாக வளர்கிறது. இந்த நீளமான கூந்தலை அதிர்ஷ்டம், அழகு ஆகியவற்றின் குறியீடாக இங்குள்ள பெண்கள் கருதுகிறார்கள். புளித்த அரிசி களைந்த நீரைக் கொண்டு கேசத்தை அலசும் பாரம்பரியம் இங்கே நடைமுறையில் உள்ளது.
உலகத்தின் மிகச் சிறிய சுதந்திரமான மாகாணமாகத் திகழும் நாறு பசிபிக் பெருங்கடலில் உள்ள ஒரு தீவாகும். இங்குள்ளவர்களில் சராசரியாக 61% பேர் ஒபிசிட்டி எனப்படும் உடல் பருமன் பிரச்சினையால் அவதிப்பட்டு வருகிறார்கள். இறக்குமதி செய்யப்படும் பதப்படுத்தப்பட்ட உணவுகளை அதிகமாக உண்பதனால் இந்நிலை ஏற்பட்டுள்ளதாக கூறுகிறார்கள். இருப்பினும் இப்பகுதி மக்கள் வண்ணமயமான கலாச்சாரத்தைக் கொண்டுள்ளார்கள்.
இரட்டையர்களின் பூமி என்று அழைக்கப்படும் இந்தச் சிறிய கிராமத்தில் நான்காயிரம் மக்கள் வாழ்கிறார்களாம். அவர்களுள் 61 ஜோடி இரட்டையர்கள் இருக்கிறார்களாம். உலகத்திலேயே அதிகமான எண்ணிக்கையில் இரட்டையர்களைக் கொண்ட கிராமமாக இந்த கிராமம் திகழ்கிறது. இது தலைமுறை தலைமுறையாக நடந்து வருகிறது. கிட்டத்தட்ட அனைத்து குடும்பங்களிலும் குறைந்தபட்சம் ஒரு ஜோடி இரட்டையர்களாவது இருக்கிறார்கள். அந்தப் பகுதியில் உள்ள ஒரு அருவியின் நீரை உபயோகிப்பதால் தான் இரட்டையர்கள் பிறக்கிறார்கள் என்று அங்குள்ள மக்கள் நம்புகிறார்கள்.
என்ன வாசகர்களே.. இந்த ஏழு இடங்களும் உண்மையிலேயே தனித்துவம் வாய்ந்தவை தானே..