
பொதுவாக எந்த உணவுப்பொருளாக இருந்தாலும் அது ஒருசில தினங்களில் கெட்டுப்போய்விடும். ஆனால், உலகில் கெட்டுப்போகாமல் இருக்கும் ஒரே உணவுப் பொருள் தேன்தான். மருத்துவ நோக்கங்களுக்காகவும் உணவிற்காகவும் உலகில் 136 நாடுகள் தேன் உற்பத்தி செய்கின்றன.
உலகளவில் இயற்கையான முறையில் தேன் உற்பத்தியில் முன்னனியில் இருக்கும் நாடு சீனா. இது வருடத்திற்கு 5 லட்சம் டன்கள் இயற்கை தேனை தயாரிக்கிறது என்கிறார்கள் அமெரிக்கன் புட் அன்டு அக்ரிகல்சர் ஆர்கனைசேஷன். உலகில் உற்பத்தி ஆகும் கால்பகுதி தேன் சீனாவில்தான் உற்பத்தி செய்யப்படுகிறது. உற்பத்தியாகும் தேனில் 4 லட்சம் டன்கள் அந்நாட்டிலேயே பயன்படுத்தப்படுகிறது. மீதி ஒரு லட்சம் டன் தேனை சீனா ஐரோப்பிய மற்றும் அமெரிக்க நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறது. சீனாவின் கிழக்கு கடற்கரை பகுதியான செஜியாங் மாகாணத்தில்தான் அதிக தேன் இயற்கையாக உற்பத்திச் செய்யப்படுகிறது.
இதனையடுத்து துருக்கி ஒரு லட்சம் டன் இயற்கை தேனை உற்பத்தி செய்கிறது. துருக்கி இயற்கை தேனை உற்பத்தி செய்வதில் 1000 ஆண்டுகளுக்கு மேலாக ஈடுபட்டு வருகிறது. உலகின் பெரும்பாலான தேனீ வகைகள் இங்கேதான் இருக்கின்றன.
இயற்கை தேன் உற்பத்தியில் மூன்றாம் இடத்தில் இருக்கும் நாடு ஈரான். இந்த நாட்டில் 78,000 டன்கள் தேன் உற்பத்தி செய்யப்படுகிறது. இங்கே செர்ரி, திராட்சை, பேரீச்சம் அதிகம் விளைகிறது. இதற்கு காரணம் இங்கே தேனீக்களால் நடக்கும் மகரந்தச் சேர்க்கைதான் என்கிறார்கள்.
உலகளவில் தேன் உற்பத்தியில் 4வது இடத்தில் இருக்கும் நாடு அர்ஜென்டினா. இது 70,000 டன்களையும், 5வது இடத்தில் இருக்கும் உக்ரைன் நாடு 68,000 டன்களும் இயற்கை தேன் உற்பத்தி செய்கின்றன. இங்கே இருக்கும் மக்களின் எண்ணிக்கையில் ஒரு சதவீதம் பேர் தேன் உற்பத்தியில்தான் ஈடுபடுகிறார்களாம். உலகின் மிக சிறந்த வகை இயற்கை தேனை உற்பத்தி செய்வது இந்த நாடுதான்.
இயற்கை தேன் உற்பத்தியில் உலகளவில் 6 வது இடத்தில் இருக்கிறது இந்தியா. இந்தியாவில் 66,000 டன்கள் தேனை உற்பத்தி செய்கிறார்கள். இந்தியாவில் கிட்டத்தட்ட 200 மில்லியன் தேன்கூடுகளின் மூலம் இந்த தேன் பெறப்படுகிறது. இந்தியாவின்அமோக காய்கறிகள் மற்றும் பழங்கள் விளைச்சலுக்கு தேனீக்கள் மூலம் நடக்கும் மகரந்தச் சேர்க்கைதான் காரணம் என்கிறார்கள்.
தேன் உற்பத்தியில் 7வது இடத்தில் இருக்கும் ரஷ்யா 64,000 டன்களையும், 8வது இடத்தில் இருக்கும் மெக்ஸிகோ 62,000 டன்களை உற்பத்தி செய்கிறது. உலகில் இன்றும் பண்டைய கால முறைப்படி தேனை உற்பத்தி செய்யும் நாடு மெக்சிகோதான்.
உலகளவில் தேன் உற்பத்தியில் 9வது இடத்தில் இருக்கும் அமெரிக்க 57,000 டன்கள் இயற்கை தேனை உற்பத்தி செய்கிறது. உலகளவில் தேன் உற்பத்தியில் 10வது இடத்தில் இருக்கும் நாடு பிரேசில். இந்த நாட்டில் ஆண்டுக்கு 55,000 டன்கள் இயற்கை தேன் உற்பத்தியாகிறது.
உலகின் மிக விலை உயர்ந்த தேன்:
தேனின் வகை, தேன் எந்த இடத்தில் இருந்து பெறப்பட்டது மற்றும் அதன் தரம் போன்ற பல்வேறு விஷயங்களை அடிப்படையாகக்கொண்டு தேனின் விலை நிர்ணயிக்கப் படுகிறது. இப்படி இருக்க உலகின் மிக விலை உயர்ந்த தேன் ஒரு கிலோவிற்கு ரூபாய் 9 லட்சம் விலையை கொண்டுள்ளது என்ற செய்தி தற்போது வெளியாகி உள்ளது.
இந்த தனித்துவமான தேனானது துருக்கியில் உள்ள பிளாக்சி பகுதியில் இருந்து எடுக்கப்பட்ட 'எல்விஷ் தேன்' ஆகும். தனித்துவமான சுவை மற்றும் தூய்மைக்கு பெயர் போன இந்த தேன் உலக அளவில் மிகவும் தூய்மையான தேன் என்ற புகழையும் பெற்றுள்ளது. ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே எடுக்கப்படும் இந்த தேன் துருக்கியின் ஆர்ட்வின் நகரத்தில் 1800 மீட்டர்கள் ஆழத்தில் அமைந்துள்ள ஒரு குகையில் இருந்து கிடைக்கிறது.
இந்த தேனானது நகரத்திலிருந்து பல மைல்கள் அப்பால் உள்ள ஒரு காட்டிற்குள் உள்ள குகைக்குள் இருந்து எடுக்கப்படுவதால், இதன் தரம் பன்மடங்கு அதிகமாகிறது. எல்விஷ் தேனை எடுத்தபிறகு, துருக்கியின் ஃபுட் இன்ஸ்டிட்யூட்ஆனது, தேனின் தரத்தை முதலில் ஆய்வு செய்யும். அதன் பின்னரே அது சந்தையில் விற்பனைக்கு கொடுக்கப்படுகிறது.