விடுதலைப் புலிகள் பிரபாகரனுடன் ஒரு சந்திப்பு

அத்தியாயம் - 46
விடுதலைப் புலிகள் பிரபாகரனுடன் ஒரு சந்திப்பு
Published on

ழத்தமிழர் பிரச்னையில் ராஜிவ் காந்தி-ஜெயவர்தனே ஒப்பந்தத்தை அடுத்து, இந்திய அமைதிப் படை இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதன் பின், ஏறத்தாழ இலங்கையின் வடக்குப் பகுதி ஐ.பி.கே.எஃப்.இன் கட்டுப்பாட்டில்தான் இருந்தது. அவர்களுக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையில் அவ்வப்போது மோதல்கள் பற்றி செய்திகள் வரும். அந்த காலகட்டத்தில், இந்திய அரசின் பத்திரிகை தகவல் அலுவலகத்தின் சென்னை அலுவலகம், சென்னையிலிருந்து பத்திரிகையாளர்களை ஒருநாள் டூர் போல இலங்கைக்கு அழைத்துச் சென்று வருவார்கள், காலையில் புறப்பட்டால், இரவு ஊர் திரும்பிவிடலாம். அப்படி ஒரு முறை விசா, பாஸ்போர்ட் சங்கடங்கள் ஏதுமில்லாமல் இலங்கை சென்று வரும்  வாய்ப்பு எனக்குக் கிடைத்தது.

இலங்கையின் பலாலி விமானப்படை தளத்தில் இறங்கி, யாழ்பாணம், நெல்லூர் கந்தசாமி கோயில் எல்லாம் பார்த்துவிட்டு வந்தேன். ஐ.பி.கே.எஃப். தளபதியுடன் பத்திரிகையாளர் சந்திப்பும் உண்டு. இலங்கை சென்ற பத்திரிகையாளர் குழுவில் மற்றவர்கள் அனைவரும் தினசரி நிருபர்கள். நான் மட்டும்தான் வார இதழ். எனவே, ஒரு வாரம் கழித்து என் கட்டுரை பிரசுரமானாலும் சில விஷயங்கள் புதுசாக இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் நான் கேட்க விரும்பிய கேள்விகளை, பிரஸ் மீட்டின்போது கேட்காமல், முடிந்தவுடன் தளபதியிடம் இரண்டு நிமிடம் தனியாகப் பேசி பதில் வாங்கினேன்.

அதில் ஒரு கேள்வி, “இந்திய அமைதிப் படையினர் தேடுதல் வேட்டை நடத்தும்போது, எதிர்பாராத வகையில் விடுதலைப் புலிகள் தலைவர்  பிரபாகரன் சிக்கினால் என்ன செய்வீர்கள்?” ஓரு சில விநாடிகள் யோசித்தபின் தளபதி சொன்னார்: “ உங்களுக்கு போரஸ் மன்னன் கதை தெரியுமா? அதைத்தான் செய்வோம்!” அதாவது, போரஸ் மன்னனை வென்ற அலெக்சாண்டர், அவனது வீரத்தை மெச்சி, நாட்டை அவனிடமே ஒப்படைத்தார் என்பது வரலாறு. ஆக, அமைதிப் படையினர் கையில் பிரபாகரன் சிக்கினாலும், இவர்கள் அவரை ஒன்றும் செய்யமாட்டார்கள் என்பதுதான் தளபதியின் மறைமுகமான பதில்!

ழத் தமிழர்களின் முக்கிய தலைவர்களில் ஒருவர் அமிர்தலிங்கம். அவர் சென்னையில் தங்கி இருந்தபோது, அவரது மனைவியை சந்தித்து பேட்டி கண்டிருக்கிறேன். நிறை மாத கர்ப்பிணியாக தன் கணவரோடு சாலையில்  இறங்கி, போராட்டத்தில் பங்கேற்ற அனுபவம் உட்பட பல்வேறு சம்பவங்களை அவர் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துகொண்டார். பாவம்! தலைவர் அமிர்தலிங்கம்! விடுதலைப் புலிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

******************

1980களின் மத்தியில் தமிழ் நாட்டு அரசியலில் முக்கிய பங்கு வகித்தது ஈழப்பிரச்னை.  இந்தத் தொடரின் முந்தைய  ஒரு அத்தியாயத்தில் தமிழ்நாடு முன்னாள் டி.ஜி.பி. மோகன்தாஸ் எப்படி ஒரு துப்பாக்கி குண்டு கூட வெடிக்காமல், ஒரு துளி ரத்தம் சிந்தாமல்  விடுதலைப் புலிகளிடம்  ஆயுதப் பறிப்பை நடத்தினார் என்று அவர் ஓய்வு பெற்றவுடன் அவரை சந்தித்தபோது கூறிய விஷயங்களைப் பதிவு செய்திருந்தேன்.  இப்போது, சிங்கத்தை அதன் குகைக்கே  சென்று சந்தித்த கல்கி நிருபர்களின் அனுபவத்தைப் பகிர்ந்துகொள்கிறேன்.

முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் உத்தரவின்பேரில், அன்றைய டி.ஜி.பி. மோகன்தாஸ்  புலிகளிடமிருந்து ஆயுதப் பறிப்பை நடத்தி முடித்த பின், பிரபாகரன் உண்ணாவிரதம் இருந்து, ஆயுதங்களைத் திரும்பப் பெற்றுக் கொண்ட நேரம் அது. அப்போது, விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனை நேரில் சந்தித்து பேட்டி காண்பது என்பது முடிவாயிற்று. அவரிடம் அப்பாயின்ட்மென்ட் வாங்க பல்வேறு வழியிலும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

நான், அவர்களின் தலைமையகமாக செயல்பட்டு வந்த வீடு இருந்த சென்னை இந்திரா நகர் பகுதிக்குச் சென்றேன். வெளியாட்கள் அவ்வளவு சுலபமாக நுழைந்துவிட முடியாதபடி தெரு முனையிலேயே புலிகளின் செக்போஸ்ட் போல ஒன்று இருந்தது. அங்கே விஷயத்தைச் சொன்னதும்,  ஒரு வீட்டுக்கு அழைத்துக் கொண்டு போனார்கள். அங்கே இருந்தவர் புலிகளின் ஆலோசகரான ஆண்டன் பாலசிங்கம். அவரிடம் அறிமுகப்படுத்திக்கொண்டு, கல்கிக்கு பிரபாகரனை  பேட்டி காண விரும்புகிறோம்  என்றதும்,  தம்பி (பிரபாகரன்) இடம்  பேசிவிட்டு சொல்வதாகச் சொல்லி, நம்முடைய தொடர்பு விபரங்களைக் கேட்டுக் கொண்டார்.

மறுநாள் கல்கி அலுவலகத்துக்கு புலிகள் அலுவலகத்தில் இருந்து பேட்டிக்கான நேரம் இரவு சுமார் ஏழு மணி என குறிப்பிட்டு தகவல் வந்தது. பிரபாகரன் பேட்டியை கவர் ஸ்டோரியாக வெளியிட இருந்ததால், அன்று முற்பகலில் அட்டைப்படத்துக்கான வண்ணப்படங்களை எடுக்க பிரத்யேகமான நேரமும் வாங்கிக்கொண்டோம். புகைப்பட நண்பர் ஏ.வி.பாஸ்கர் படமெடுக்கச் சென்றார். அன்று இரவு நாங்கள் பேட்டிக்குச் சென்றோம். நாங்கள் என்றால், கல்கி உதவி ஆசிரியர் இளங்கோவன், சக நிருபர் ப்ரியன் மற்றும் நான். ஐந்தாறு பேர் அமரக்கூடிய மேஜை, பிரபாகரனும், பாலசிங்கமும் ஒரு பக்கம் அமர்ந்திருக்க சுற்றிலும் நாங்கள். டேப் ரெக்கார்டர் சுழல பேட்டி ஆரம்பமானது.

சுமார் மூன்று மணி நேரம் பேட்டியில், தயார் செய்து வைத்திருந்த கேள்விகளை ஒவ்வொன்றாகக் கேட்டுக் கொண்டே வர, பிரபாகரன்  எந்த விதமான பதட்டமும் இல்லாமல், மடமடவென்று பதில் சொல்லிக் கொண்டே வந்தார்.  துளிக்கூட ஆங்கிலக் கலப்பு இல்லாமல், சுத்தமான ஈழத் தமிழில் அவர் பதில்கள் இருந்தன என்பது குறிப்பிடத் தக்கது.

பேட்டியின் முதல் கேள்வியே, உங்களிடமிருந்து பறிக்கப்பட்ட ஆயுதங்களை, நீங்கள் உண்ணாவிரதம் இருந்து திரும்பப் பெற்றிருக்கிறீர்கள். அது போலவே, நீங்கள் இலங்கையிலும் அஹிம்சை முறையிலேயே போராடலாமே? அதை விடுத்து, ஆயுதம் ஏந்த வேண்டிய அவசியம் என்ன?” என்பதுதான்.  அதற்கு பிரபாகரனின் பதில்:

“ உலகிலேயே அகிம்சை முறையில் வெற்றி பெற்ற நாடு இந்தியாவைத் தவிர வேறு எதுவும் இருக்க முடியாது. ஓரளவுக்கு மனிதாபிமானம் உள்ள நாடும் இந்தியாதான். அதனால்தான்  எனது உண்ணாவிரதத்துக்கு இங்கே வெற்றி கிடைத்தது. ஆனால், மனிதநேயமற்ற சிங்கள அரசின் இராணுவத்திடம் இம்முறை எடுபடாது”

தொடர்ந்து, “ காந்திஜி, இந்தியர்களை ஒன்று திரட்டி, ஆங்கிலேயர்களுக்கு எதிராகத்தானே அஹிம்சை வழியில் போராடி, வெற்றி பெற்றார்? “ என்று கேட்டோம். அதற்கு, “ இந்திய சுதந்திரப் போராட்டத்தில் காந்திஜி மட்டும்தான் பங்கெடுத்துக் கொண்டார் என்று எப்படி சொல்ல முடியும்? நேதாஜி போன்ற தலைவர்களும்தான் இருந்தார்கள். ஆயுதமேந்தினார்கள். இவற்றோடு சுதந்திர எழுச்சி இந்தியா முழுவதும் பரந்து கிடந்தது” என்று கூறியதுடன், இன்னொரு விஷயத்தையும் குறிப்பிட்டார். “அன்றைய இந்தியர்களின் சுதந்திர எழுச்சியைக் கண்ட ஆங்கிலேயர்கள், இந்த அஹிம்சை முறை தோல்வியுற்றால்,  எதிர்காலத்தில் இவர்கள் ஆயுதமேந்தவும்  தயங்கமாட்டார்கள்  என்று உணர்ந்திருப்பார்கள்.  அதைத்தான்  நேதாஜி போன்றவர்கள் உணர்த்தினார்கள். அதன் காரணமாகவே, தங்கள் காலனி ஆதிக்கத்தில்  இருந்த நாடுகளுக்கு விடுதலை கொடுக்க முன்வந்தார்கள்  என்று நாங்கள் கருதுகிறோம்”

இலங்கையில் சிங்களர்களுக்கும், தமிழர்களுக்குமான பிரச்னையின் அடிப்படைக் காரணங்களை பிரபாகரன் விளக்கிக் கூறினார்:

இலங்கையில் தமிழர்-சிங்களவர் என்ற இனவெறி ஆதியில் இருந்தே இருக்கிறது. பிரிட்டிஷ் காலனியில் இருந்து விடுபட்டபின், கல்வி, தொழில் உட்பட பலவற்றிலும் இது பிரதிபலித்தது. தமிழர்களின் உழைப்பையும், முன்னேற்றத்தையும் அவர்களால் ஜீரணித்துக்கொள்ள முடியவில்லை. இலங்கையில் மதமும் அரசியலும் பின்னிக் கிடக்கின்றன. அங்கே, அரசாங்கத்தை ஆட்டி வைத்துக் கொண்டிருப்பவர்கள் புத்த பிட்சுக்கள்தான்.  தமிழர்களுக்கு சம உரிமையும்,  தமிழ் மொழிக்கு உரிய மரியாதையையும் கொடுக்க முன்வந்த  பண்டார நாயகாவை சுட்டுக் கொன்றதே ஒரு புத்த பிட்சுதான்!

ஈழத்தமிழர்கள் ஆயுதம் ஏந்தவேண்டிய சூழ்நிலைக்கு எப்படித் தள்ளப்பட்டார்கள்? இந்தக் கேள்விக்கும் விரிவாக விடை கூறினார் பிரபாகரன்:

“சிங்கள அரசில் தமிழர்க்கு பிரதிநிதித்துவம் என்பது வெறும் கண் துடைப்பு. இன, மத அடிப்படையில் சிறுபான்மையினரான தமிழர்களுக்குப் பாதுகாப்பு அளித்த 29வது பிரிவை  புதிய அரசியல் சட்டத்தின் மூலமாக பறித்தது சிங்கள அரசு. 1948ல் தோட்டத் தொழிலாளர்களின் குடியுரிமை பறிக்கப்பட்டபோதும்,  58ல் குழந்தைகள் உள்ளிட்ட ஏராளமான தமிழர்கள் கொல்லப்பட்டு,  கோயில்கள் இடிக்கப்பட்டபோதும், அதன் பின் நடந்த கலவரங்களிலும் சரி, கடந்த 1983இலிருந்து பத்தாயிரத்துக்கும் அதிகமான தமிழர்களே கொல்லப்பட்டிருக்கிறார்கள். அப்போதெல்லாம் கூட தமிழர்களுக்கு ஆயுதமேந்தும் சிந்தனையே இல்லை.

இனக்கலவரங்களில் கொல்லப்பட்டவர்கள் தமிழர்கள்தானே தவிர, சிங்களவரோ, சிங்கள ராணுவத்தினரோ கொல்லப்பட்டதாக வரலாறு இல்லை. முப்பதாண்டுகளுக்கு மேலாக எங்கள் போராட்டம் அஹிம்சை முறையில்தான் நடந்தது. ஆனால், தமிழர் பகுதிகளில் அரசு சிங்களர்களைக்  குடியேற்ற ஆரம்பித்தது. எங்கள் உடைமைகள் பறிக்கப்பட்டன; எங்கள் மீதான மிருகத்தனமான தாக்குதல் தொடர்ந்தது. இந்தச் சூழ்நிலையில்தான், நாங்கள் பாலஸ்தீனியர்களைப் போல ‘எங்கே நாட்டை இழந்துவிடுவோமோ’ என்ற பயத்தில் 1972ல் ஆயுதமேந்திய விடுதலைப் புலிகள் இயக்கம் தோன்றியது.  நாங்கள் இப்போது கூட சிங்கள மக்களைக் கொல்வதில்லை; எங்கள் மீது தாக்குதல் நடத்தும் சிங்கள ராணுவத்தினரையே கொல்கிறோம். ஆனால், ராணுவம் எங்களை மட்டுமின்றி அப்பாவித் தமிழர்களையும் தாக்கிக் கொல்கிறது” இதுதான் பிரபாகரனின் விளக்கம்.

ஆயுதங்களைப் பற்றியும், அவைகளை இந்தியா என்னும் அன்னிய மண்ணில் சகஜமாக அவர்கள் கையாளுவதைப் பற்றியும் பேச்சு வந்தது. “இந்தியாவில் ஒரு குடிமகன் ஒரு சாதாரண துப்பாக்கி வைத்துக் கொள்வதற்குக் கூட அரசாங்கத்தின் லைசென்ஸ் அவசியம். அப்படி இருக்கும்போது, நீங்கள் ஏராளமான நவீன ரக ஆயுதங்கள் வைத்திருப்பது சட்ட விரோதமல்லவா?” என்று ஒரு கேள்வி கேட்டபோது, பிரபாகரன், பதிலேதும் சொல்லாமல் மௌனமாகவே இருந்தார்.

“உங்களிடம் இந்த ஆயுதங்கள் எல்லாம் எப்படி வந்தன?” என்ற அடுத்த கேள்விக்கு மிகவும் சாதுர்யமாக பதிலளித்தார். “ஆயுதங்கள் எங்களிடம் எப்படி வந்தன? என்பதை பறிமுதல் செய்த போலிசாரிடமே கேட்டால் தெரியும். அவர்களையே பதில் சொல்லச் சொல்லுங்கள்1” என்பதுதான் பிரபாகரனது பதில்.

“உங்களது லட்சியமான தனி தமிழ் ஈழத்துக்கு இந்தியாவின்  ஆதரவு கிடையாது” என்பதை இந்தியா தெளிவுபடுத்திவிட்ட சூழ்நிலையிலும், பிரபாகரன், “நாங்கள் இன்னமும் இந்தியாவைத்தான் நம்புகிறோம்” என்று குறிப்பிட்டார்.  அது பற்றி விளக்கும்போது, “உலக அரசியல் ஒருநாள் மாறும்.  அப்போது இந்தியா எங்களை ஆதரிக்கக் கூடும். ஈழ விடுதலைக்கு இந்தியா உதவுமா? உதவாதா? என்பது சர்வதேச அரசியல் நிலைமைகளைப் பொறுத்தது” என்றார்.

“இந்தியா போல, தமிழ் மக்கள் வாழும் பகுதிக்கு  ஒரு மாநில அந்தஸ்த்து கொடுக்கப்பட்டால்,  அதற்கு ஒப்புக்கொள்வீர்களா? தனித் தமிழ் ஈழக் கொள்கையை விட்டுவிடுவீர்களா? “ என்று கூட அவரிடம் கேட்டோம்.

அதற்கு, “தனித் தமிழ் ஈழ லட்சியத்தை விட்டுவிட்டால், பிரபாகரன் ஒரு துரோகி!” என்று தமிழ் மக்களே என்னைத் தொலைத்துவிடுவார்கள்!” என்று  முதலில்  பதிலளித்த அவர், பின்னர் “அப்படி ஒரு திட்டம் வரட்டும்;  அப்போது சொல்கிறேன்” என்று சொல்லிவிட்டார்.

 அந்தக் காலக் கட்டத்தில், பிரபாகரன் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் செல்லப்பிள்ளை; கலைஞர் கருணாநிதியை அவர் கண்டுகொள்வதில்லை” என்ற ஒரு கருத்து நிலவியது. அது பற்றிக் கேட்டபோது, பொத்தம்பொதுவாக, “எங்களுக்கு இங்குள்ள அனைவரும் ஒன்றுதான். தயவு செய்து, இங்குள்ள அரசியலோடு எங்களைத் தொடர்பு படுத்தாதீர்கள்!” என்று சொல்லிவிட்டார்.

பேட்டியைப் படித்த டி.ஜி.பி. மோகன்தாஸ், கல்கி ஆசிரியரை சந்தித்துப் பேச விரும்பினார். கல்கி ஆசிரியர் ராஜேந்திரன், நிருபர் ப்ரியன் இருவரும் சென்று டி.ஜி.பி.யை சந்தித்துப் பேசிவிட்டு வந்தார்கள். கல்கியில் வெளியான பிரபாகரன் பேட்டி தமிழ் நாட்டில் அன்று ஒரு பரபரப்பை ஏற்படுத்தியது. அநேகமாக, பிரபாகரன் தமிழ்ப் பத்திரிகைக்கு அளித்த விரிவான பேட்டி அது ஒன்றுதான் என நினைக்கிறேன். 

மறக்க முடியாத சந்திப்பு.

(தொடரும்)

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com