சமீபத்தில் ’எழுத்தாளர் லேனா தமிழ்வாணனுடன் ஒரு நாள்’ நிகழ்வு பேனாக்கள் பேரவை சார்பில் மதுராந்தகம் அருகில் உள்ள அவருடைய பண்ணை வீட்டில் நடைபெற்றது. சென்னையிலிருந்து ஒரு குளிர்சாதன பேருந்தில் 43 எழுத்தாளர்கள் என்.சி. மோகன் தாஸ் மற்றும் மடிப்பாக்கம் வெங்கட் தலைமையில் அவருடைய பண்ணை வீட்டில் கூடிக் கலந்து பேசினோம். லேனா தமிழ்வாணன் அவருடைய தந்தையார் அந்தப் பண்ணையை உருவாக்கிய விதத்தையும், தற்போது அதை அவர் பாதுகாத்து வரும் பாங்கினையும் மிக அழகாக விளக்கினார்.
நிகழ்ச்சியில் திரைத்துறையைச் சார்ந்த தேவி பாலாவும், சுபா என்றழைக்கப்படும் சுரேஷ் மற்றும் பாலசுப்ரமணியமும் கலந்து கொண்டனர். நிகழ்வின் நடுவில் எழுத்தாளர் தேவி பாலா தன்னுடைய திரையுலக அனுபவங்களை நம்முடன் பகிர்ந்து கொண்டார். இதோ அவை உங்களின் பார்வைக்காக:
”எனது முதல் சிறுகதை ’சுமங்கலி பிரார்த்தனை’ 1979ல் கலைமகள் இதழில் பிரசுரமாகியது. அதே ஆண்டு, ’இதயம் பேசுகிறது’ இதழில், எனது ‘ஒரே கேள்வி’ சிறுகதை, பிரசுரமாகியது. இரண்டு சிறுகதைகளும் பரிசுகளைப் பெற்றன. எனது முதல் தொடர்கதை “அக்டோபர் பௌர்ணமி!” சாவி இதழில் பிரசுரமானது. அதனைத்தொடர்ந்து பிரபல மாத, வார பிரபல இதழ்களிலும், எனது ஆயிரத்துக்கும் மேற்பட்ட படைப்புகள் பல்வேறு இதழ்களில் வெளியாகியுள்ளன.
“மடிசார் மாமி” தொடர்கதை புத்தகமாக பல பதிப்புகள் வெளியாகி, விற்பனை ஆனது. பிறகு சின்னத்திரையிலும் அது வெளியானது. புத்தகத்தில் ஸ்ரீவித்யாவும், திரையில் கே.ஆர். விஜயாவும் அந்த சிறுகதைக்கு பெருமை சேர்த்தார்கள். இது எனக்கு ஒரு நட்சத்திர அந்தஸ்த்தை ஏற்படுத்திக் கொடுத்தது.
நாவல், தொடர்கதைகள் என இரண்டாயிரத்துக்கும் மேலே எழுதியுள்ள என்னை வளர்த்த பெருமை பத்திரிகையாளர்கள் அமரர் சாவி, மணியன், விகடன் பாலன் சார், கல்கி ராஜேந்திரன், குமுதம் எஸ்.ஏ.பி. சார், ரா.கி. ரங்கராஜன், ஜ.ரா.சு. , கீழாம்பூர், லேனா, அமரர் விக்ரமன் என அனைவரையும் சேரும்.
சின்னத்திரையில், தொலைக்காட்சியில் 14 ஒரு மணி நேர நாடகம், சன், விஜய், ஜெயா, ஜீ தமிழ், போன்ற பிரபல தொலைக் காட்சிகளில், இந்த முப்பது ஆண்டுகளில், பதினைந்தாயிரத்துக்கும் மேற்பட்ட எபிசோடுகளை படைத்துள்ளேன். என்னை வளர்த்த ஆசான்களின் பட்டியலில் அமரர் இயக்குநர் சிகரம் கே. பாலசந்தர், ஏவி.எம். சரவணன், ஏவி.எம். குமரன், A.C. திருலோகசந்தர், எஸ்.பி. முத்துராமன், சத்யஜோதி தியாகராஜன், விகடன் டெலிவிஸ்டாஸ், விஷன் டைம், ராடன் ராதிகா, குஷ்பூ, ரேவதி, தூர்தர்ஷன் எம்.எஸ். பெருமாள் ஆகியோர் அடங்குவர்.
கலைஞரின் கைகளால், ’ஆனந்தம்’ தொடருக்கு, சிறந்த கதாசிரியருக்கான தமிழக அரசின் தங்கபதக்கம், கே. பாலசந்தர் கையால் தங்க பேனா, பாரதிராஜா கையால் விருது, மயிலாப்பூர் அகாடமியில் ஐந்து முறை சிறந்த திரைக்கதை ஆசிரியருக்கான விருதுகள், ஏ.வி.எம். நிறுவனத்தில் பல விருதுகள். விகடன், மற்றும் கவிதாலயா, சத்யஜோதியின் விருதுகள் என பல விருதுகள் எனது படைப்புகளுக்கு பெருமை சேர்த்துள்ளன.
1979 ல் என்னுடைய 20ஆம் வயதில் தொடங்கிய என் எழுத்துப் பயணம் இந்த ஆண்டுடன் 46 ஆண்டுகளை நிறைவு செய்கின்றது. பயணம் தொடர்கிறது.
பலரும் பெரிய ஆதரவு தந்து ஒரே மாதத்தில் 8 நாவல்களெல்லாம் வெளியானது உண்டு. 1990களில் தொடங்கிய பாக்கெட் நாவல் ஜி.அசோகனின் குடும்ப நாவலாக இன்றும் தொடர்கிறது. எனது 40 ஆண்டு கால இனிய குடும்ப நண்பரான ஆன்லைன் புஸ்தகா ராஜேஷ் இன்றும் எனக்கு ஆதரவு தந்து வருகிறார். எனது 400 க்கும் மேற்பட்ட ஈ.புத்தகங்கள் அவர் மூலம் நல்லமுறையில் விற்பனையாகி வருகின்றன.
இந்த சாதனைகள் அத்தனைக்கும் காரணம் என் அன்னை,, முன்மாதிரியான என் தந்தை, பாராட்டி ஊக்குவித்த உடன் பிறப்புகள், எனது மனைவி, இன்று கதாசிரியராகி உள்ள என் அன்பு மகள் ஸ்ருதி பிரகாஷ், எனது அன்பான வாசகர்கள், ரசிகர்கள் ஆகியோருக்கு அதிக பங்கு உண்டு,” என்று சொல்லி முடித்தார்.
அன்னாருடைய எழுத்துலகப் பயணம் மேலும் சிறக்க பேனாக்கள் பேரவையின் சார்பில் அவருக்கு வாழ்த்துக்களைக் கூறி அவரிடமிருந்து நான் விடைப் பெற்றேன்.