

உலகம் யாவும் என்னுள் அடக்கம்!
நானோ உங்கள் பாக்கட்டில் அடக்கம்!
இத்தனை விபரங்கள் என்னில் உண்டு
என்பதே பலருக்கும் தெரியாதென்பதே கண்கூடு!
கரையும் நேரத்தைக் கைகளில் கட்டிய
கடிகாரத்தின் மூலமாய் கணக்கிட்ட காலமெல்லாம்
எந்தன் வரவால் இனிய கதையானது!
இருளும் குளிரும் இணைந்திடும் இரவில்
பார்த்தே போக பாட்டரி விளக்கை
தூக்கிச் சுமந்த சுகந்தரும் நினைவெல்லாம்
எந்தன் வரவால் இனிய வரலாறானது!
திக்குத் தெரியாமல் திண்டாடும் போழ்தினில்
திகைத்திட வேண்டாம் இருக்கிறேன் நானும்
என்றே ‘காம்பசாய்’ இயங்குவேன் நானும்!
திசைகள் நான்கினை சிறப்பாய் உணர்த்தி
போகும் வழியைப் புகல்வேன் நொடியில்!
முகவரி கொடுத்து முடுக்கி விட்டால்
சாலைகள் காட்டி சந்துகள் கடந்து
கொண்டு சேர்ப்பேன் கொடுத்த அட்ரசில்!
கூட்டிக் கழித்து வகுத்துப் பெருக்கும்
அத்தனை கணக்கையும் அயராமல் நானும்
விநாடியில் செய்து விடையைச் சொல்வேன்!
மணநாள் பிள்ளைகள் மகிழ்வான பிறந்தநாள்
நினவில் இறுத்தும் நிம்மதியான விழாக்கள்
எத்தனை வந்தாலும் எல்லா வற்றையுமே
வெளிப்புறக் கண்ணால் விரைவாய்ப் பதிந்து
பார்த்து மகிழ்ந்திடப் படமெடுத்துத் தந்திடுவேன்!
தூக்கம் விடுத்துக் கடமையைச் செய்திட
அலார்ம் அடித்து அலர்ட் செய்திடுவேன்!
உலகப் பந்தின் ஒவ்வொரு நிகழ்வையும்
அப்படியே உங்கள் முகக்கண் முன்னால்
கொண்டுவந்து நிறுத்தி கொடுப்பேன் விபரம்!
ஓய்வாய் இருக்கையில் உங்களுக்குப் பிடித்த
பாடல்கள் பலவற்றைப் படக் காட்சியுடனே
கண்களில் காட்டிக் களிப்பைக் கூட்டுவேன்!
பேரன் பேத்தி பெரிதும் மகிழ்ந்திட
உங்களை அவர்களுக்கும் அவர்களை உங்களுக்கும்
இணைத்துக் காட்டி இனபம்மிக எய்துவேன்!
பெய்கின்ற மழையிது பெரிதாய்த் தொடருமா
என்பதைக் கூட எடுத்துரைப்பேன் விலாவாரியாய்!
இன்னும் பலவும் என்னுள் அடக்கம்!
நானோ உங்கள் பாக்கெட்டில் அடக்கம்!
மொபைல் என்றும் செல் என்றும்
முக்கியஸ்தர்கள் பலர் எனை அழைக்க
கைபேசி என்றே கனிவான தமிழினிலே
கூப்பிட்டே எனையும் குதூகலிக்கச்செய்வர் சிலர்!
எந்தப் பெயரில் என்னை அழைத்தாலும்
என்கடன் உங்கட்குப் பணிசெய்து மகிழ்வதே!