
பீனிக்ஸ் பறவை (Phoenix) என்றதும் நம் அனைவருக்கும் நினைவில் வருவது அது நெருப்பில் எரிந்து சாம்பல் ஆனாலும் அதிலிருந்து உயிர்த்தெழுந்து வரும் பறவைதானே? இது உண்மை தானா? பீனிக்ஸ் பறவை என்று உண்மையிலேயே ஒரு பறவை இருக்கிறதா? இதைப் பற்றி விரிவாக இந்தப் பதிவில் காண்போம்.
பீனிக்ஸ்(Phoenix) பறவை கழுகை விட பெரிதாக இருக்கக்கூடிய பறவை. இதனுடைய இறக்கைகள் சிகப்பு, தங்கம், ஊதா போன்ற நிறங்கள் கலந்திருக்கும். இதன் இறக்கைகள் பார்ப்பதற்கு நெருப்பை போல ஜொலிக்குமாம். இதனுடைய வால் நீல நிறத்தில் இருக்கும். பீனிக்ஸ் பறவையின் கண்கள் நீல நிறத்தில் ஜொலிக்கும் என்று சொல்லப்படுகிறது. இதனுடைய தலையில் கொண்டையும், தலையை சுற்றி ஒளி வட்டமும் இருக்குமாம். மொத்தத்தில் இந்த பறவை பார்ப்பதற்கு கம்பீரமாக இருக்கும்.
பீனிக்ஸ் பறவை 500 முதல் 1500 வருடங்கள் வரை உயிர் வாழக்கூடியது என்று சொல்லப்படுகிறது. இந்த பறவை தன்னுடைய ஆயுட்காலம் முடியும் போது வாசனை மிக்க மரக்கட்டைகளை வைத்து பெரிய கூடு கட்டி அதன் மீது உட்கார்ந்து தனக்கு தானே தீவைத்துக் கொள்ளுமாம். அதன் பிறகு அந்த சாம்பலில் இருந்து மறுபடியும் பிறந்து வரும். அப்படி பிறந்து வரும்போது முன்பைக் காட்டிலும் மிகவும் வலிமையாக இருக்குமாம்.
இதெல்லாம் உண்மையா? என்று கேட்டால் அதுதான் கிடையாது. ஏனெனில், பீனிக்ஸ் என்ற பறவை உலகத்திலேயே கிடையாது. பண்டைய எகிப்திய புராணக்கதையில் 'பென்னு' என்ற பெயரில் முதல் முதலில் இந்த பறவை குறிப்பிடப்பட்டது. அந்த புராணக்கதை கிரேக்கத்திற்கு வரும்போது இந்த பறவையில் பெயர் 'பீனிக்ஸ்' என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இப்படி ஒரு நாகரீகத்தில் சொல்லப்பட்ட கதை பல நாகரீகங்களிலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
இதுப்போன்ற கதை நிறைய நாகரீகங்களில் வேறு வேறு பெயர்களில் சொல்லப்பட்டது. அதற்கான காரணம், இது ஒரு பாசிட்டிவான குறியீடு என்பதனால் ஆகும். இது மனிதர்களின் உணர்வுகளுடன் தொடர்புடையதாக உள்ளது. ஒரு மனிதன் காலையில் எழுந்ததில் இருந்து இரவு தூங்கும் வரை துன்பங்களை சந்திக்கிறான், கஷ்டப்படுகிறான்.
ஆனால், அடுத்த நாள் முதல் நாளை விட மிகவும் வலிமையாக ஏழுந்து போராட ஆரம்பிக்கிறான். இதே தத்துவத்தை தான் பீனிக்ஸ் பறவையின் கதையும் சொல்கிறது. இதனால் தான் உலகம் முழுவதும் இந்த கதையை அனைவரும் ஏற்றுக் கொண்டனர் என்றே சொல்லலாம்.