
இந்தியாவில் சுயதொழில் செய்வோரைக் காட்டிலும், மாதச் சம்பளத்திற்கு வேலைக்குச் செல்பவர்கள் தான் அதிகம். இதில் நாற்காலியில் அமர்ந்து கொண்டு வேலை செய்பவர்கள் ஒருபுறம் இருக்க, கால்கள் வலிக்க நின்று கொண்டே வேலை செய்பவர்களும் இருக்கிறார்கள். பல வேலைகளை அமர்ந்து கொண்டு செய்ய முடியாது தான். இருப்பினும் அவ்வப்போது அமர்ந்து இளைப்பாற ஒரு நாற்காலி கூட கொடுக்கப்படாதது தான் அதிகாரத்தின் உச்சமாக பார்க்கப்படுகிறது.
தற்போதைய காலகட்டத்தில் படித்த படிப்புக்கேற்ற வேலை கிடைப்பதே அரிதாகி விட்டது. குடும்பச் சூழலை மனதில் கொண்டு, இங்கு பலரும் கிடைத்த வேலையைச் செய்து வருகின்றனர். மளிகை கடைகள், ஷாப்பிங் மால்கள், துணிக் கடைகள் மற்றும் இயந்திரம் தயாரிக்கும் கம்பெனிகள் உள்பட பணியாளர்கள் சிறிது நேரம் அமர்ந்து இளைப்பாற அனுமதிப்பதில்லை. சாப்பிடும் நேரம் மட்டுமே வேலையாட்கள் அமர்கின்றனர்.
பொதுவாக ஒருவர் ஒரு நாளைக்கு 8 மணி நேரம் தான் வேலை செய்ய வேண்டும் என்று சட்டம் கூறுகிறது. ஆனால் சில நிறுவனங்கள் 12 மணி நேரத்திற்கும் வேலை செய்ய வேண்டும் என தொழிலாளர்களை நிர்பந்திக்கின்றன. என்ன தான் உலகம் தொழில்நுட்ப வளர்ச்சி அடைந்தாலும், வேலைக்குச் செல்பவர்களின் இந்த நிலைமை இன்னும் மாறவேயில்லை.
அமர்ந்து கொண்டு பணிபுரியும் பணியாளர்களுக்கு தூக்கமின்மை, செரிமான கோளாறுகள், முதுகு வலி, மூட்டு வலி மற்றும் மன அழுத்தம் போன்ற பிரச்சினைகள் ஏற்படுகின்றன. அதேபோல் நின்று கொண்டே பணிபுரிபவர்களுக்கும் சில பிரச்சினைகள் ஏற்படுகின்றன. தொடர்ந்து 8 மணி நேரம் நிற்பதே அதிக கால் வலியை உண்டாக்கும். இதுதவிர கால் வீக்கம், தசை வலி, உடல் சோர்வு மற்றும் கீழ் முதுகு வலி போன்ற பாதிப்புகளும் ஏற்படுகின்றன. கால் வலியால் எப்போது கீழே அமரப் போகிறோம் என்று நினைக்கும் பணியாளர்கள் இங்கு ஏராளம். ஆனால் வேலை நேரம் முடியும் வரை அமரக் கூடாது என்பது பல நிறுவனங்களில் எழுதப்படாத விதியாகவே இருக்கிறது.
செய்யும் வேலையை விட்டு விட்டால் பிழைப்புக்கு வேறு வழியில்லை என்பதால், பலரும் நின்று கொண்டே பணிபுரிந்து வருகின்றனர். அதிலும் தொழில்துறை சார்ந்த வேலைகளில் பணியாளர்கள் சிறிது நேரம் கீழே அமர்ந்தால் கூட, மேலாளர் உடனே எழுந்திருக்க சொல்லி அதட்டுவார். சில நிறுவனங்களில் பெண்களுக்கும் இதே நிலைமை தான்.
குறைந்தபட்சம் ஒருநாளைக்கு சிறிது நேரமாவது பணியாளர்கள் உட்கார்ந்து இளைப்பாற நிறுவனங்கள் அனுமதிக்க வேண்டும். ஒரே இடத்தில் நின்று கொண்டே வேலை செய்யும் போது இடையிடையே நடமாடுவது மற்றும் சாய்ந்த நிலையில் இருப்பது போன்றவை உடல்நல பாதிப்புகளை குறைக்கும் என மருத்துவர்கள் சொல்கின்றனர். நின்று கொண்டே அமரும் பெரிய நாற்காலிகளை பணியாளர்களுக்கு நிறுவனங்கள் கொடுக்கலாம். அனைத்து வேலைகளுக்கும் இது சரி வராது என்றாலும், ஒருசில வேலைகளுக்கு இது ஏற்புடையதாக இருக்கும்.
கடந்த 2018 ஆம் ஆண்டில் கேரளாவில் நின்று கொண்டே வேலை செய்யும் பெண்களுக்கு இருக்கை வசதியை ஏற்படுத்தித் தர வேண்டும் என கேரளா அரசு உத்தரவிட்டது. ஒரு போராட்டத்தின் முடிவில் தான் அரசு இந்த உத்தரவைப் பிறப்பித்தது. தமிழ்நாட்டிலும் 2021 இல் வேலை செய்பவர்களுக்கு இருக்கையை உறுதிப்படுத்த வேண்டும் என சட்டத்திருத்தம் செய்யப்பட்டது. ஆனால் எத்தனை நிறுவனங்கள் அரசின் உத்தரவைக் கடைபிடிக்கின்றன என்பது கேள்விக்குறி தான்.
நாள் முழுக்க நின்று கொண்டே பணிபுரியும் பணியாளர்களுக்கு ஒரு சல்யூட்!