
நம்மை நம் செயல்களை யாராவது கவனித்துக்கொண்டும் பாராட்டிக்கொண்டும் இருக்க வேண்டும் என்ற கவன ஈர்ப்புத் தன்மை சிறு குழந்தைகளுக்கு இருப்பது இயல்பு.
குழந்தைகளின் குணநலனே கவன ஈர்ப்புத் தான். சொல்லமுடியாமலும், சொல்லத்தெரியாமலும் அழுதோ அடம் பிடித்தோ எதையாவது சேதப்படுத்தியோ தன்பால் கவனத்தை ஈர்க்கும். இதே குணநலன் வயதானவர்களிடமும் காணப்படும். அவர்கள் தன் இருப்பை முக்கியத்துவத்தை உணர்த்த முயன்று கொண்டேயிருப்பார்கள். இரண்டு தரப்பினருக்கும் தன்னை மறந்தோ/உதாசீனப்படுத்தியோ விடுவார்களோ என்ற ஐயம் அடிநாதமாக இருக்கும். பாராட்டப்பட்டும், கொஞ்சப்பட்டும் வளரும் குழந்தைக்கும், நித்தமும் விசாரிக்கப்படும் முதியோருக்கும் இந்த குறை பெரும்பாலும் குறையும் .
இந்த அடிப்படை கவன ஈர்ப்புத் தற்காலத்தில், குழந்தைகள், வயதானவர்கள் என்ற எல்லையைத் தாண்டி, எல்லா வயதினரிடமும் மோகமாக மாறி பரவியுள்ளது. சராசரியாக இயங்கும் அனைவருக்கும் தன்னை வெளிப்படுத்தி வேறுபடுத்திக் காட்டவேண்டிய நிர்ப்பந்தத்தை, வளர்ந்து பெருகி வியாபித்து நிற்கும் மீடியா உண்டாக்கி வைத்துள்ளது.
எதையாவது எப்படியாவது செய்து வெளிச்சம் தன் மேல் விழுந்து, சில கணமேனும் பிரபலமாகத் தெரிந்து விடவேண்டும் என்ற தவிப்பு தேசிய வியாதியாகி நிற்கிறது.
எல்லோர் கையிலும் இருக்கும் கைப்பேசி எல்லாவற்றையும் காட்சிப்படுத்தியபடி மீடியாவில் பரப்பியபடி இருக்கின்றன. கண்ட குப்பையையும் சேஷ்டைகளையும் கண்டு களிக்கும் கூட்டமும் பெருகி இவர்களுக்குப் பார்வையாளர்களாக மாறிவிடுகிறார்கள். பிறகு என்ன? எல்லோரும் நடிகர்கள் தான் எல்லாமே நாடகம் தான். உலகமே ஒரு நாடக மேடை என்று இந்த போக்கு வளராதபோதோ சொல்லிவிட்டுச் சென்றவன் எவ்வளவு பெரிய ஞானி.
ஒத்தை வரி விடையாக ஷார்ட்ஸ்ஸும், சிறுகுறிப்பு பதிலாக பேஸ்புக்கும், நீண்ட பேராவாக யூடியூப்பும் வந்து விட்டது . கேள்வி புரிகிறதோ இல்லையோ பதில் எழுதித் தள்ளிக்கொண்டே போகவேண்டியது தானே. படிப்பவர்கள் படிக்கட்டும், மதிப்பெண் நிறையக் கிடைத்தால் பிரபல்யம் ஆகிவிடலாம், குறைத்து மதிப்பிட்டால் அவர்களைத் திட்டி எதிர்வினையாற்றி ட்ரெண்டாகி விடலாம். இந்த போக்கு சிறியவர்கள் முதல் வயதானவர்கள் வரை வியாபித்து நிற்கிறது.
ஒரு சிறந்த செயற்கரிய செயலை செய்து பிரபலமாவது என்பது புரிந்துக் கொள்ளகூடிய செயல். பல சாதனையாளர்கள் இருந்த இடம் தெரியாமல் அடையாளப்படுத்தப்படாமல் மறைந்து போவது சமூக அவலம் தான். சமூகத்திற்கும் மக்களுக்கும் பயன் தரும் வகையில் பணியாற்றியவர்கள் போற்றப்பட்டு பாராட்டப்பட்டு பாதுகாக்க பட வேண்டியவர்கள் தான்.
பல சமயங்களில் ஒரு சொல்லோ செயலோ உருவாக்கியவர்கள் யாரென்று அறியாமல் பயன்பாட்டுக்கு வந்து பயன்படுத்தி கொண்டும் வருகிறோம். இதனை யார் செய்தார்கள் என்பதை பற்றி சிந்திக்க நமக்கு நேரம் காலம் பொறுமை இருப்பதில்லை. இது எவ்வளவு கண்டிக்கத்தக்க செயலோ அதனை போன்றே சில்லறை விஷயங்கள் பிரபல்யம் அடைந்து போற்றப்படுவதும் கண்டிக்கத்தக்கதே!.
யாருக்கும் சிறிதும் பயன்தராத, யாரையும் எந்த விதத்திலும் மேம்படுத்தாத செயல்கள் காட்சிப்படுத்தப்பட்டு ஊடகங்கள் மூலம் கடத்தப்படுகிறது. அவற்றை ஏன் பரப்புகிறோம் என்றே உணராமல் பகிரப்பட்டு ஊரெல்லாம் சுற்றிவிட படுகிறது. விட்டில் பூச்சி போன்ற அந்த ஒரு விநாடி பளபளப்பு பிரபல்யத்தை ஏற்படுத்தி விடுமா நீடித்த புகழை தந்துவிடுமா அது அவசியம் தானா என்ற கேள்வி யாருக்கும் எழுவதில்லை.
இந்த வியாதியை அகற்றுவது எப்படி? பதிவுகளை போடுபவனுக்கு அது பொன் குஞ்சு தான். அதனை பொன் முட்டையிடும் விசயமாக மாற்றாமல் இருப்பது சமூகத்தின் கடமை இல்லையா? முதல் பார்வையிலேயே நிராகரிக்கப்பட்டு பரப்பப்படாமல் போனால் இவை தனது இயல்பான மரணத்தை விரைவிலேயே அடையும். பரபரப்பை தேடி அலையும் சமூகம் இதை செய்யத்துணியுமா?
ஏதாவது ஒரு காட்சி ஊடகத்தில் தோன்றியவரை கண்டுவிட்டால், நான்கு நண்பர்களுடன் உணவு உண்டால் அதனை செல்பி எடுப்பது, திருவிழா, கூட்டம் என்று சென்றால் காட்சிப்படுத்துவது என்று துவங்கி விபத்தை பிறர் துன்பத்தை வீடியோ எடுப்பது வரை தரம் கெட்டு குற்றயுணர்ச்சியற்ற சமூகமாக மாறி நிற்கிறோம். இப்போதெல்லாம் குழந்தைகளுக்கு கூட போட்டோ எடுக்கையில் கோணலாய் வாயை வைத்துக்கொள்ள வேண்டும் என்று புரிகிறது.
காலத்தின் ஓட்டத்தில் இந்த மலிவான பதிவுகள் மறைந்து போகும் என்பது உண்மைதான். பெரியது செய்ய நினைப்பவர்கள்தான் பெரிய, நீடித்த பயன்களையும், இருப்பையும் நாடுவார்கள். சிறியதாய் செயல்படுபவர்களுக்கு ஒரு நிமிட பிரபல்யம் போதுமானதே.
சமூகத்திற்கு உருப்படியான நன்மைகள் செய்தால் பிரபல்யம் அடைவது தான் நியாயம் என்ற நினைப்பும், குறிக்கோளும் இருந்தால் தான் இவற்றை மாற்றமுடியும். அத்தகைய விழிப்புணர்வு வர இன்னும் எத்தனை கோடி கிருமிகளை சகித்துகொள்ளவேண்டுமோ?