மாடுகளுக்கும் வார விடுமுறை அளிக்கும் விநோத கிராமம்!

Livestock
Livestock

உடல்நலம் சோர்ந்து விடக் கூடாது என்ற காரணத்தால் பசு, கறவை மற்றும் எருது உள்ளிட்ட கால்நடைகளுக்கு ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள சில கிராமங்களில் ஒருநாள் விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்த கூடுதல் விவரங்களை இப்போது காண்போம்.

வேலை செய்யும் அனைத்து உயிரினங்களுக்கும் ஓய்வு என்பது அவசியம் தேவை. அது மனிதர்களாக இருந்தாலும் சரி, கால்நடைகளாக இருந்தாலும் சரி. அவ்வப்போது ஓய்வு எடுத்தால் தான், செய்யும் வேலையை தொய்வின்றி சீராகச் செய்ய முடியும்‌. வேலைக்குச் செல்லும் மனிதர்களுக்கு வாரத்தில் ஒரு நாள் அல்லது இரண்டு நாள் விடுப்பு அளிக்கப்படும். இது அவர்களுக்கு வேலை மீதான மன அழுத்தத்தை குறைக்க உதவுவதோடு, குடும்பத்துடன் நேரத்தை செலவிடவும் வழிவகுக்கிறது.

அதே போல் விவசாயப் பணிகளுக்கு உதவும் கால்நடைகளுக்கும் ஓய்வு அளித்தால் எப்படி இருக்கும் என்று கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள். அட இதுவும் நல்லாத்தான் இருக்கும் என்று தோன்றுகிறதா! இதைத் தான் ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள சில கிராமங்கள் ஆண்டாண்டுகளாய் செய்து வருகின்றனர்.

மாடுகளைத் தொடர்ந்து வேலை வாங்கி வந்தால் அவை சோர்ந்து விடும் அல்லவா! இதனைக் கருத்தில் கொண்டு மாடுகளுக்கும் ஓய்வு அவசியம் என்பதை உணர்ந்த கிராம மக்கள் வாரத்தில் ஒருநாள் விடுமுறை அளித்து எந்த வேலையும் அளிக்காமல் முழுமையான ஓய்வைத் தருகின்றனர். ஜார்க்கண்ட் மாநிலத்தில் இருக்கும் லடேஹர் பகுதியில் சக்லா என்ற பஞ்சாயத்திற்கு உள்பட்ட துரிசோத் உள்ளிட்ட 12 கிராமங்களில் தான் கால்நடைகளுக்கு வாரந்தோறும் ஒருநாள் ஓய்வு அளிக்கப்பட்டு வருகிறது. ஓய்வு நாளில் எப்பேற்பட்ட அவசர வேலையாக இருந்தாலும் கிராம மக்கள் கால்நடைகளை வேலை வாங்க மாட்டார்களாம். இப்பழக்கம் நீண்ட ஆண்டுகளாகவே இங்கு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது என சொல்லப்படுகிறது.

இங்கு வாழும் பழங்குடியின மக்கள் மாடுகளுக்கு வாரத்தில் வியாழக் கிழமை ஓய்வளிப்பதை வழக்கமாக கொண்டிருந்தனர். இதனைப் பார்த்து சுற்றியிருக்கும் கிராம மக்களும் வாரந்தோறும ஞாயிற்றுக் கிழமையில் கால்நடைகளுக்கு ஓய்வளித்து வருகின்றனர். மேலும், விடுமுறை நாட்களில் மாடுகளிடம் வேலை வாங்குவதைப் பாவமாகவும் கருதுகின்றனர்.

இதையும் படியுங்கள்:
20 ஆண்டுகளுக்குப் பிறகு அருள்வாக்கு கொடுத்த காளை மாடு!
Livestock

பல ஆண்டுகளுக்கு முன் ஓய்வில்லாமல் தொடர்ச்சியாக நிலத்தை உழுது கொண்டிருந்த மாடு ஒன்று சரிந்து விழுந்தது இறந்து விட்டதாம். இதனைக் கண்ட விவசாயிகள் அதிர்ச்சி அடையவே, மாடுகளைக் காப்பாற்ற ஒரு நாள் ஓய்வு தரும் பழக்கத்தைக் கொண்டு வந்ததாக சொல்லப்படுகிறது. தற்போது ஜார்க்கண்ட் மாநிலத்தில் மட்டும் ஏறக்குறைய 24 கிராமங்களில் கால்நடைகளுக்கு வாரத்தில் ஒருநாள் ஓய்வு அளிக்கப்பட்டு வருகிறது என்பதை மாநில கால்நடைப் பராமரிப்புத் துறை அமைச்சகமும் உறுதி செய்துள்ளதாக கூறப்படுகிறது.

விவசாயத்திற்கு உற்ற துணையாய் உதவும் மாடுகளின் நலனும் முக்கியம் எனக் கருதிய கிராம் மக்களின் எண்ணம் மிகவும் உயர்ந்தது. இந்த நடைமுறையை கால்நடை வளர்ப்பவர்கள் அனைவரும் பின்பற்றினால் நன்றாக இருக்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com