பென்சிலைக் கூட விட்டுச் சென்ற நேர்மை: கலாமின் நெகிழ வைக்கும் கதை!

கலாம் சாரின் மறைவுக்குப் பிறகு அவருக்கு இருந்த சொத்துக்கள் என்னென்ன தெரியுமா?
A P J Abdul Kalam
abdul kalam life story Credits The peninsula foundation
Updated on
Kalki Strip
Kalki Strip

நமது இந்திய மண், எத்தனையோ தலைவர்களைத் தரணிக்கு அர்ப்பணித்திருக்கிறது. தன்னலம் கருதாமல் அவர்களும் உடல், பொருள், ஆவியை உலக நலனுக்காகவே ஈந்திருக்கிறார்கள். ஏழை மக்களின் வாழ்வில் ஏற்றம் காண வைப்பதையே குறிக்கோளாகக் கொண்டு, தங்கள் வாழ்க்கையை எளிமையானதாக்கிக் கொண்டு, இரவு பகல் பாராது உழைத்திருக்கிறார்கள். அவர்களின் அதிகபட்ச உழைப்பை நல்கி, அதிலேயே ஆனந்தம் கண்டிருக்கிறார்கள். கறைபடியாத கரங்களுடன், கனிவு மாறாத முகத்துடன், நிதானத்தையும் பொறுமையையும் கேடயங்களாகக் கொண்டு, தாங்கள் வகிக்கும் உயர்ந்த பதவிக்குப் பெருமை சேர்த்திருக்கிறார்கள்.

அதிலும், இந்திய நாட்டின் மிக உயரிய பதவியான ஜனாதிபதி பதவியில் இருந்துகொண்டு (முதல் இந்தியக் குடிமகன்), நேர்மையையும், சகோதரத்துவத்தையும், மனவுறுதியையும் தன் சொத்துக்களாகப் பாவித்து, உலக நாட்டுத் தலைவர்களுக்கே முன்மாதிரியாகத் திகழ்ந்தவர், நாட்டின் 11-வது குடியரசுத் தலைவராக இருந்த நம் அப்துல் கலாம் (abdul kalam life story) அவர்கள். நாட்டின் தென்கடைக்கோடியில் இருந்து, வடக்கிலுள்ள தலைநகரின் உயரிய பதவிக்குத் தன் எளிமையால் எழில் சேர்த்தவர் இவர்.

இவரின் ஆச்சரியத்தக்க நடைமுறைகளால் ஈர்க்கப்பட்டு, 'கலாம் எஃபெக்ட்' (Kalam Effect) என்ற புத்தகத்தையே எழுதியுள்ளார் ஜனாதிபதி அலுவலகத்தில் இவர் காலத்தில் பணிபுரிந்த ஐ.ஏ.எஸ் அதிகாரியான பி.எம். நாயர். அதிலிருந்து சில தகவல்கள்:

ராஷ்டிரபதி பவன் போன்ற உயரிய பொறுப்பில் உள்ளவர்கள் வெளிநாடுகளுக்குச் செல்லும்போது, அந்த நாட்டுத் தலைவர்கள் விலை உயர்ந்த பரிசுகளை அளிப்பார்கள். வேண்டாமென்று மறுப்பது அவர்களை உதாசீனப்படுத்துவதாக அமைந்துவிடுமாகையால், விருப்பம் இல்லாவிட்டாலுங்கூட அவற்றைப் பெற்றுக்கொண்டுதான் ஆக வேண்டும். கலாம் சாரும் அப்படிப் பரிசுப் பொருட்களைப் பெற்று வருவாராம். வந்தவுடன் முதல் வேலையாக அவற்றைப் பட்டியலிட்டு, புகைப்படம் எடுத்த பின், ஆவணக் காப்பகங்களில் (Archives) முறைப்படி ஒப்படைத்து விடுவாராம். அதன் பிறகு அவற்றைத் திரும்பிக்கூடப் பார்க்க மாட்டாராம். ராஷ்டிரபதி பவனை விட்டுச் சென்றபோது ஒரு பென்சிலைக் கூடத் தன்னுடன் அவர் எடுத்துச் செல்லவில்லையாம்!

2002-ஆம் ஆண்டில் அவர் பொறுப்பேற்ற பிறகு வந்த ஜூலை–ஆகஸ்டில், ரமலான் மாதம் வந்தது. வழக்கமாக ஜனாதிபதிகள் ‘இப்தார் விருந்து’ அளிப்பது மரபு. திரு. நாயரிடம், "ஏற்கெனவே நன்றாக உணவருந்தும் நிலையில் உள்ளவர்களுக்கு நாமும் ஏன் விருந்தளிக்க வேண்டும்?" என்று கேட்ட ஜனாதிபதி கலாம் அவர்கள், அதற்கென ஒதுக்கப்பட்ட தொகை எவ்வளவு என்று கேட்கிறார். "ரூ. 22 லட்சம்" என்று பதில் வர, "அதற்குப் பதிலாக அந்தத் தொகையைத் தேவைப்படும் அனாதை ஆசிரமங்களுக்கு வழங்கி, அங்குள்ளவர்களுக்குத் தேவைப்படும் உணவு, உடை, போர்வைகள் வழங்க ஏற்பாடு செய்துவிடுங்கள்" என்று கூறினார்.

பின்பு, "ஒரு நிமிடம் உள்ளே வாருங்கள்!" என்று நாயரைத் தன் அறைக்கு அழைத்துச் சென்று ரூ.1 லட்சத்தை அவர் கையில் கொடுத்து, "இதனையும் அந்தத் தொகையுடன் சேர்த்துக் கொள்ளுங்கள். இது எனது தனிப்பட்ட சேமிப்புப் பணம். தயவுசெய்து இதனை வெளியில் சொல்ல வேண்டாம்!" என்றாராம். மிஸ்டர் நாயரோ, "சாரி சார்! என்னைத் தடுக்காதீர்கள். இவ்வளவு உயர்ந்த எண்ணத்துடன் செயல்படும் உங்கள் குணத்தை உலகுக்குத் தெரிவிக்க வேண்டியது எனது கடமை! நான் நிச்சயமாக எல்லோரிடமும் இதனைச் சொல்வேன்!" என்று சொல்லிவிட்டே வெளியில் வந்தாராம்.

இதில் 'ஹைலைட்' என்னவென்றால், எந்தெந்த ஆசிரமங்களுக்கு வழங்க வேண்டும் என்பதை ஜனாதிபதி மாளிகை அதிகாரிகள் குழுதான் தேர்வு செய்ததாம். கலாம் சார் அந்தத் தேர்வில் எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லையாம். அவர் பக்தியுள்ள முஸ்லிமாக இருந்தபோதிலும், அவர் பதவிக்காலத்தில் இப்தார் விருந்து ராஷ்டிரபதி பவனில் நடக்கவே இல்லையாம்!

ஒருமுறை, ஜனாதிபதி கலாமுடன் இந்திய உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி ஏதோ ஒரு கருத்து குறித்து ஆலோசனை செய்து கொண்டிருந்தாராம். தனது கருத்தைத் தெரிவித்த கலாம் அவர்கள் அருகிலிருந்த நாயரிடம், "நான் சொல்வது சரிதானே?" என்று வினவ, அவரோ "எனக்கு இக்கருத்தில் உடன்பாடில்லை!" என்று கூற, நீதிபதி விக்கித்து விழித்துவிட்டாராம். ஏனெனில் எந்த ஜனாதிபதியிடமும் உதவியாளர்கள் அவ்வாறு பேச முடியாதாம்! வெளியில் வந்த நீதிபதியிடம் திரு. நாயர் சொன்னாராம்: "அவருக்கு 'ஆமாம்' (OK) போடுவது பிடிக்காது. என் கருத்தை விளக்கும்போது அதில் நியாயம் இருந்தால் அவர் தனது கருத்தையே மாற்றிக் கொள்வார்!" என்று.

கலாம் சார் தன் பணிக்காலத்தில் தன் குடும்பத்தார் 50 பேரை டெல்லிக்கு அழைத்திருந்தாராம். அவர்கள் ராஷ்டிரபதி பவனில் ஒரு வாரம் தங்கியது, சாப்பிட்டது ஆகிய அனைத்திற்கும் அவர் கேட்டுக்கொண்டபடி கணக்கிடப்பட்டது. சுமார் 2 லட்ச ரூபாய் சொந்தப் பணத்தை அதற்கெனச் செலுத்தினாராம். எந்தச் சந்தர்ப்பத்திலும் அலுவலக வாகனங்களை உபயோகிக்கவே இல்லையாம்.

இவையெல்லாம் ஒருபுறம் இருக்க, தனது சகோதரரை அவர் தன்னுடனே அந்த ஒரு வார காலமும் தன் அறையிலேயே தங்க வைத்துக் கொண்டாராம். சகோதரர் தங்கியிருந்த காரணத்தால், அந்த அறை வாடகையையும் தன் கணக்கில் சேர்க்கச் சொன்னாராம். இந்திய வரலாற்றிலேயே இப்படி ஒரு ஜனாதிபதி இருந்ததில்லையாம்!

அவரின் பதவிக்காலம் முடிந்ததும், ராஷ்டிரபதி பவன் பணியாளர்கள் அனைவரும் அவரிடம் குடும்பத்துடன் வந்து விடைபெற்றார்கள். திரு. நாயர் மட்டும் மனைவியின்றித் தனியாக வர, அவர் மனைவிக்குக் காலில் முறிவு ஏற்பட்டுள்ளதால் வரமுடியவில்லை என்பதைத் தெரிந்துகொண்டார் கலாம். அடுத்த நாள் காலை திரு. நாயர் வீட்டைச் சுற்றிப் பாதுகாப்புப் படையினர் கூட, "என்ன... ஏது?" என்று நாயர் பதறினார். அப்போது கலாம் அவர்கள், நாயரின் மனைவியை நேரில் கண்டு நலம் விசாரித்து விடைபெற வந்திருப்பதாகத் தெரிவித்தனர். நாயர் நெகிழ்ந்து போய்விட்டார்!

கலாம் சாரின் மறைவுக்குப் பிறகு அவருக்கு இருந்த சொத்துக்கள் இவைதானாம்:

  • 6 பேண்டுகள் (2 DRDO சீருடை)

  • 4 சட்டைகள் (2 DRDO சீருடை)

  • 3 சூட்டுகள் (1 மேற்கத்திய முறை, 2 இந்திய முறை)

  • 2500 புத்தகங்கள்

  • 1 பிளாட் (அதையும் நன்கொடையாக வழங்கிவிட்டார்)

  • பத்மஸ்ரீ, பத்மபூஷண் மற்றும் பாரத ரத்னா விருதுகள்

  • 16 கௌரவ டாக்டர் பட்டங்கள்

  • 1 இணையதளம், 1 டிவிட்டர் கணக்கு, 1 மின்னஞ்சல் முகவரி

இதையும் படியுங்கள்:
சிறுகதை: வானப்பிரஸ்த்தம்!
A P J Abdul Kalam

அவரின் இறுதிக்கால 8 ஆண்டுகால ஓய்வூதியத் தொகையை (Pension), கிராம முன்னேற்றத்திற்காக நன்கொடையாக வழங்கிவிட்டார்.

ஒவ்வொரு அரசியல்வாதியும், அரசு ஊழியரும் இவரைப் பின்பற்றி வாழ்ந்தால், நமது இந்திய நாடு உலகில் முதன்மை நாடாக உயரும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை! அற்புதமான மனிதர் அப்துல் கலாம் அவர்களின் புகழ் என்றும் வாழும்!

logo
Kalki Online
kalkionline.com