

திருமணம் என்பது பொறுப்புகளையும் மகிழ்ச்சியையும் பகிர்ந்துகொள்வதே ஆகும். கணவன் - மனைவி இருவரும் இணைந்து குடும்ப மற்றும் நிதி பொறுப்புகளை ஏற்றுக்கொள்ள வேண்டும். ஒருவருக்கொருவர் ஆதரவாக இருந்து, புரிதலுடனும் அன்புடனும் உறவைப் பேண வேண்டும். மேலும், இருவரும் தங்கள் தேவைகள் மற்றும் எதிர்பார்ப்புகளை வெளிப்படையாகப் பேசி, தனிப்பட்ட வளர்ச்சிக்கும், ஆரோக்கியமான உறவிற்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.
ஏனென்றால் இப்போதெல்லாம் திருமணமாகி ஒரு சில நாட்களிலேயே ஏதாவது ஒரு காரணத்தை காட்டி டபக் டபக்கென்று விவாகரத்து செய்து விடுகிறார்கள்.
கவலைப்படாதீங்க...
புது வாழ்க்கையை எளிமையான முறையில் இனிதோடு வாழ வேண்டுமென்று நீங்கள் நினைத்தீர்களேயானால் திருமணத்திற்கு பிறகு என்னென்ன கடைபிடிக்க வேண்டும், எதை செய்ய வேண்டும் என்பதை பற்றி கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டும்.
அதேபோல் திருமணத்திற்குப் பிறகு குழந்தை பிறப்புக்கு பொதுவாக சில ஆரோக்கியமான பழக்கவழக்கங்கள் மற்றும் மருத்துவ ஆலோசனைகள் முக்கியம். ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பின்பற்றுவது, உடல் எடையை சீராகப் பராமரிப்பது, மாதவிடாய் சுழற்சியைப் புரிந்துகொள்வது, மற்றும் கருவுறுதல் வாய்ப்புகளை அதிகரிப்பதற்கான திட்டமிடல் ஆகியவை உதவும்.
திருமணத்திற்கு பிறகு கடைபிடிக்க வேண்டியவை:
* திருமணமான பிறகு ஆணாக இருந்தாலும் சரி பெண்ணாக இருந்தாலும் சரி வீட்டில் இருப்பவர்கள் அவர்களை சரிசமமாக நடத்த வேண்டும். இந்த காலத்தில் பெண்களும் வேலைக்கு செல்கிறார்கள். அவர்களுக்கும் ஏகப்பட்ட டென்ஷன் இருக்கிறது. ஆகவே அவர்களுக்கும் ஆரோக்கியமான உணவை கண்டிப்பாக தரவேண்டும். பெற்றோர்களே, இருவருக்கும் முடிந்த வரை உங்களுடைய அன்பையும் ஆதரவையும் அளியுங்கள்.
* தினமும் பழங்களை சாப்பிடும் பழக்கத்தை வைத்துக் கொள்ள வேண்டும். இருவரும் காலையிலோ அல்லது மதியமோ கண்டிப்பாக ஏதாவது ஒரு பழத்தை சாப்பிட்டே ஆக வேண்டும்.
* திருமணத்திற்கு முன்பு தம்பதிகள் எடுத்துக்கொண்ட பரிசோதனைகளில் ஏதாவது குறைகள் இருக்கும் பட்சத்தில் அதற்கான மருந்துகளை டாக்டரின் ஆலோசனையின் படி விடாமல் எடுத்துக்கொள்ள வேண்டும். டாக்டர் எப்ப சொல்கிறாரோ அப்போது மறு பரிசோதனையையும் செய்து கொள்ள வேண்டும்.
* திருமணம் ஆன பின்பு பொதுவாக எடுக்கும் சில ரத்தப் பரிசோதனைகளையும், தைராய்டு டெஸ்டையும் டாக்டரின் ஆலோசனையின் படி எடுத்துக் கொள்ள வேண்டும். அதாவது cbc, lft, kft, வைட்டமின் டெஸ்ட், தைராய்டு போன்றவற்றை எடுத்துக் கொள்ள வேண்டும். ஏனென்றால், திருமணமான பிறகு குறிப்பாக பெண்களுக்கு ஒரு விதமான மன அழுத்தமும் வேலைப் பளுவும் அதிகமாகும். ஆகவே ஏற்கனவே உங்களுக்கு சுகர் அல்லது பிபி இல்லை என்றாலும், சில மாற்றங்களின் காரணமாக திருமணத்திற்கு பிறகு உண்டாகலாம். திருமணத்திற்கு பிறகு இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை இந்த டெஸ்டை எல்லாம் இருவரும் செய்து கொள்ள வேண்டும். பெண்கள் abdomen ultrasound, pcod, pcos, cervical cancer போன்ற சோதனைகளையும் செய்து கொள்வது நல்லது.
* தம்பிகளா, உங்களுக்கு திருமணத்திற்கு முன்னால் சிகரெட் அல்லது மது குடிக்கும் பழக்கம் இருந்தால் தயவு செய்து திருமணத்திற்கு பிறகு அதை எல்லாம் நிறுத்தி விடவும்.
ஏனென்றால், அதனால் உங்களுடைய விந்தணுக்களின் எண்ணிக்கை குறையலாம். மேலும் நுரையீரலும், கல்லீரலும் பாதிக்கப்படலாம். இந்த பாதிப்பானது உங்களோடு மட்டும் நின்று விடாமல் பிறக்க போகும் உங்களுடைய குழந்தைகளையும் பாதிக்கும்.
* அதே போல கண்ணுகளா, நீங்களும் திருமணத்திற்குப் பிறகு எண்ணெயில் பொரித்த உணவுகளை தவிர்ப்பது நல்லது. ஏனென்றால் அதிகமான எண்ணெய் உணவை சாப்பிட்டால் கர்ப்பம் தரிப்பதில் பிரச்னை உண்டாகலாம். கர்ப்ப பையில் கொழுப்பின் காரணமாக fibrosis உருவாகவும் வாய்ப்பிருக்கிறது. அதற்காக அதை முழுவதுமாக நிறுத்தி விட வேண்டும் என்று அர்த்தம் இல்லை. வாரத்தில் ஒரு நாள் பூரி, பஜ்ஜி, சமோசா போன்றவைகளை சாப்பிடலாம். குறிப்பாக நீங்கள் உங்களுடைய எடை விஷயத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
குடும்பப் பொறுப்புகள், நிதிப் பிரச்னைகள் மற்றும் வேலைப் பிரச்னைகள் இவை எல்லாம் சேர்ந்து தாம்பத்திய உறவுகளில் மன அழுத்தத்தை ஏற்படுத்தும். திருமணத்திற்குப் பின் ஆரோக்கியம் என்பது ஒரு தொடர்ச்சியான முயற்சி. உடல் மற்றும் மன நலனில் கவனம் செலுத்துவதன் மூலம் இருவரும் மகிழ்ச்சியாக வாழலாம்.