
அகிலன் கண்ணன் எனப் பரவலாக அறியப்படும் கண்ணன் அவர்கள் பதிப்பாளர், எழுத்தாளர், விமர்சகர், கவிஞர், இலக்கிய, சமூக ஆர்வலர், நாடக எழுத்தாளர் மற்றும் ஃப்ரீலான்ஸ் பத்திரிகையாளர் எனப் பன்முகத்தன்மை கொண்டவர். தனக்கு மட்டுமல்லாது தமிழ் மண்ணுக்கும் பெருமை சேர்த்து, தமிழ் மக்களின் மனதை ஆண்ட புகழ்பெற்ற எழுத்தாளரான அகிலன் அவர்களின் மகனான கண்ணன் தமிழ் இலக்கிய உலகில் மிகுந்த கவனம் பெற்றவர் ஆவார்.
கண்ணன் தனது தமிழ்ப் புத்தகாலயம் - தாகம் பதிப்பகம் மூலமாக தமிழ் இலக்கிய உலகில் புகழ்பெற்ற படைப்புகளை உருவாக்கி தமிழை வளப்படுத்த இன்றும் தீவிரமாகச் செயல்பட்டு வருகிறார். மக்களிடையே வாசிப்புப் பழக்கத்தை மேம்படுத்துவதில் தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் தனது உற்சாகமான பங்களிப்பைச் செய்து வருகிறார்.
மேலும் இளம் எழுத்தாளர்களையும் அவர்களின் எழுத்துத் திறமைகளையும் அதிலுள்ள குறைகளையும் அடையாளம் கண்டு எடுத்துச் சொல்லி ஊக்குவிப்பதில் நல்ல ஆசிரியராகவும் திகழ்ந்து வருகிறார்.
அதே நேரத்தில் சமூகப் பிரச்சனைகளையும் மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் வழிகளையும் தம் எழுத்துக்கள் மூலம் தமிழர்களிடம் கொண்டு செல்வதில் அவர் மிக முக்கிய பங்கு வகிக்கிறார்.