
நம் அனைவருக்கும் மர்மங்கள் நிறைந்த பெர்முடா முக்கோணம் பற்றி தெரியும்.
கப்பலிலும் விமானத்திலும் இந்த பகுதியை கடப்பவர்கள் மாயமாய் மறைந்துவிடுவார்கள். இந்த பெர்முடா முக்கோணத்தைப் போன்றே மற்றொரு மர்மம் நிறைந்த ஒரு பகுதி பூமியில் உள்ளது. அது தான் அலாஸ்கா முக்கோணம்.
அலாஸ்கா முக்கோணம் என்பது தெற்கு பகுதியில் ஏங்கரெஜ் முதல் ஜூனாவ் வரையிலும் வடக்கில் உட்கியாக்விக் புள்ளியிலும் இணையும் முக்கோண வடிவ உருவக பகுதியாகும். நிலம் முக்கோணமாக இருப்பதில்லை. ஆனால், மர்மங்கள் நிகழ்வது இந்த மூன்று இடங்களில். நடுவில் முக்கோணத்தை கற்பனை செய்து கொண்டால் சரியாக அந்த பகுதியில் சம்பவங்கள் நிகழ்கிறது.
அலாஸ்கா முக்கோணத்தில் 1950 இல் டக்லஸ் சி-54 ஸ்கைமாஸ்டர் இராணுவ விமானம் ஒன்று 44 பேரோடு காணாமல் போனது. அதன் பின்னர் ஆயிரக்கணக்கான தன்னார்வலர்களின் உதவியோடு அமெரிக்க மற்றும் கனேடிய விமானங்கள் தேடுதல் முயற்சியில் ஈடுபட்டது. ஆனால் சி-54 விமானம் பற்றியோ பயணிகளைப் பற்றியோ எந்த தகவலும் கிடைக்கவில்லை.
அலாஸ்கா முக்கோணம் அக்டோபர் 1972 இல் குறிப்பிடத்தக்க கவனத்தை ஈர்த்தது, அமெரிக்க ஹவுஸ் மெஜாரிட்டி தலைவர் தாமஸ் ஹேல் போக்ஸ் சீனியர், அலாஸ்கா காங்கிரஸின் நிக் பெகிச், பெகிச்சின் உதவியாளர் ரசல் பிரவுன் மற்றும் பைலட் டான் ஜான்ஸ் ஆகியோரை ஏற்றிச் சென்ற விமானம் ஏங்கரேஜில் இருந்து ஜூனாவ் செல்லும் வழியில் மாயமானது. விமானம் பற்றி ஒரு தடயமும் இல்லாமல் காணாமல் போனது. தேடுதலில் விமானத்தின் சிதைவுகள் கூட கிடைக்கவில்லை.
மற்றொரு முக்கிய சம்பவம்... 25 வயதான கேரி ஃபிராங்க் சோதர்டன் முக்கோண நடுப்பகுதியில் வேட்டையாடச் சென்றார். ஆனால் வீடு திரும்பவில்லை. இரண்டு தசாப்தங்களுக்குப் பிறகு 1997 இல், வடகிழக்கு அலாஸ்காவில் உள்ள முள்ளம்பன்றி ஆற்றின் ஓரத்தில் ஒரு மனித மண்டை ஓடு கண்டுபிடிக்கப்பட்டது. டிஎன்ஏ சோதனைப்படி அந்த மண்டை ஓடு கேரி பிராங்கின் உடையது என்று முடிவு செய்யப்பட்டது. மேலும் அவர் கரடியால் கொல்லப்பட்டார் என்றும் கூறப்படுகிறது.
அதன் பின்னர் இந்த முக்கோண பகுதியில் 20,000-க்கு மேற்பட்டோர் மர்மமான முறையில் காணாமல் போயுள்ளனர். இதுவரை அவர்கள் என்ன ஆனார்கள் என்பது இன்னும் மர்மமாகவே உள்ளது. இதனால் தான் இந்த பகுதியில் மக்கள் தொகை குறைவாக உள்ளது. இதுக்குறித்து எடுத்த புள்ளிவிவரப்படி, அலாஸ்காவில் ஒவ்வொரு ஆண்டும் சராசரியான 2,250 பேர் காணாமல் போயிருப்பது தெரிய வந்துள்ளது.
அலாஸ்கா முக்கோணத்தில் அசாதாரண காந்த செயல்பாடு விமானத்தின் பறக்கும் திசையை விட்டு குழப்புவதாகவும், அங்கு வானில் தோன்றும் அதிசய ஒளி வீச்சுகள் விசித்திரமான வானத்தில் செயல்பாடுகளில் அவர்கள் சிக்கி விடுகிறார்கள் என்றும் கூறப்படுகிறது.
வழக்கமாக அமெரிக்கர்கள் நம்பும் வேற்று கிரகவாசிகள் இந்தப் பகுதியில் வசிப்பதாக கூறுகின்றனர். இன்னும் சிலர் பேய்கள் தான் இது போன்ற சம்பவங்களை நிகழ்த்துவதாகவும் நம்புகின்றனர்.
அலாஸ்காவின் பூர்வீகக்குடி மக்களான டிலிங்கிட் மற்றும் சிம்ஷியன் சமூக மக்கள் காணாமல் போனவர்கள் பற்றி கதை ஒன்று சொல்கிறார்கள். குஷ்டகா என்னும் நீர் நாய் தான் நினைத்த வடிவத்தை எடுக்கும் ஆற்றல் கொண்டது. விபத்துகளால் மனிதர்களை பாதிக்க வைத்து அவர்களுக்கு உதவுவதைப் போல மனித வேடம் கொண்டு அவர்களை நடுக்காட்டுக்கு அழைத்து சென்று அவர்களை கிழித்து தங்களைப் போன்ற நீர்நாயாக மாற்றுகின்றனவாம்.
உண்மை தெரியும் வரை சொல்லும் கதைகளை கேட்கத்தான் வேண்டும்.