இந்திய சுதந்திரப் போராட்ட வீரர், பிரபல பத்திரிகையாளர், புகழ் பெற்ற எழுத்தாளர், மிகச் சிறந்த சமூக சிந்தனையாளர், சாகித்ய அகாடமி விருது பெற்ற நாவலாசிரியர், எதையும் சீர்தூக்கி ஆராய்ந்து கூறும் நல்ல விமர்சகர், தமிழ் சமூகப் போராளி என பன்முகத் தன்மை கொண்டவர் அமரர் கல்கி அவர்கள். இத்தனைக்கும் சொந்தக்காரரான இவர், கும்பகோணத்துக்கு அருகில் உள்ள புத்தமங்கலம் எனும் சிறு கிராமத்தில் 1899ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 9ம் தேதி எளிய குடும்பம் ஒன்றில் பிறந்தார் என்று கூறினால் பலருக்கும் இதை நம்புவதற்கு சற்று கடினமாகத்தான் இருக்கும்.
இவர் தமது உயர்நிலைக் கல்வியை முடிக்கும் முன்பே, அண்ணல் காந்தியின் சுதந்திரக் கொள்கையின் மீது ஏற்பட்ட ஈர்ப்பின் காரணமாக, கல்வியை பாதியிலேயே விட்டு விட்டு நாட்டு சுதந்திரத்துக்கான போராட்டதில் கலந்து கொண்டார். இந்த சுதந்திரப் போராட்டத்துக்காக மூன்று முறை சிறை வாசத்தையும் அனுபவித்தார். வாழ்க்கையை நன்றாக அனுபவிக்க வேண்டிய வயதில், சந்தோஷமான வாழ்க்கையா அல்லது இந்திய சுதந்திரமா என்ற கேள்வி இவர் முன்பு வைக்கப்பட்டபோது, நாட்டு சுதந்திரமே முக்கியம் என்று முடிவெடுத்த தியாகி இவர். எளிமையான வாழ்க்கைக்குத் தேவையான பொருளாதார வசதி தம்மிடம் இல்லாதபோதும், நாடு சுதந்திரம் அடைந்த பிறகு சுதந்திரப் போராட்ட தியாகிகளுக்கு வழங்கப்பட்ட சிறு சிறு சலுகைகளையும் அனுபவிக்க ஏற்றுக்கொள்ளாத மனம் படைத்த உண்மையான இந்தியக் குடிமகன் இவர்.
நல்ல வருமானம், வசதியான வாழ்க்கை இவரைத் தேடி வந்தபோதும், நாட்டு நலன் ஒன்றையே குறிக்கோளாக ஏற்று காந்திய கொள்கையான மது ஓழிப்புப் பிரச்சாரத்தில் தம்மை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டு அதை வலியுறுத்தும் எழுத்துப் பணியை தேர்ந்தெடுத்த உத்தமர் அமரர் கல்கி அவர்கள்.
அது மட்டுமின்றி, அனைவருக்கும் ஆலய தரிசனம், எல்லோருக்கும் பொதுவானவன் இறைவன் என்பதை மனதில் திடமாகக் கொண்டு தாழ்த்தப்பட்ட மக்களோடு ஆலயப் பிரவேசம் செய்த மாமனிதர் கல்கி. தமது எழுத்து வலிமையின் மூலம் சமூக சீர்திருத்தத்துக்கான பல்வேறு கருத்துக்களை தாம் எழுத்திய கட்டுரைகளின் மூலம் மக்கள் மனதில் பதிய வைத்தார். குறிப்பாக, பெண் கல்வியை அவர் பெரிதும் வலியுறுத்தினார். அன்று கல்கி போன்றவர்கள் போட்ட விதையின் காரணமாகத்தான் இன்று பெண்கள் பலரும் பல்வேறு துறைகளில் சாதனைப் பெண்களாகத் திகழ்கிறார்கள் என்று கூட கூறலாம்.
அதேபோல், கைம்பெண் கொடுமையை அவர் கடுமையாகச் சாடினார். அதேசமயம் கைம்பெண் மறுவாழ்வு போன்றவற்றை தமது எழுத்தில் ஆதரித்தார். அன்று அவர் பத்திரிகைகள் வாயிலாக வலியுறுத்திய விஷயங்கள் இன்று பலராலும் போற்றப்படுகின்றன, பின்பற்றப்படுகின்றன. தமிழர்தம் வரலாறு மீது இவர் கொண்டிருந்த அளப்பரிய ஆர்வத்துக்கு உதாரணங்களாகத் திகழ்ந்தன இவரது நாவல்களும் கட்டுரைகளும். தம்மை ஒரு விவசாயி என்று எப்போதும் கூறிக்கொள்வதில் பெருமிதம் கொள்ளும் கல்கி, ஆரம்ப காலத்தில் தமது கட்டுரைகள் சிலவற்றை, 'விவசாயி' எனும் பெயரிலேயே எழுதியுள்ளது குறிப்பிடத்தக்கது.
கல்வனின் காதலி, தியாக பூமி, சிவகாமியின் சபதம், அலையோசை, பார்த்திபன் கனவு மற்றும் தற்போது பொன்னியின் செல்வன் போன்ற பிரபல நாவல்களை எழுதிய இவர், 'மீரா' திரைப்படத்துக்கு கதை, வசனத்துடன், 'காற்றினிலே வரும் கீதம்' உள்ளிட்ட பல சமூக உணர்வைத் தூண்டும் பாடல்களையும் எழுதியுள்ளார் என்பது பலரும் அறியாத விஷயம்.
அன்று அவர் கண்ட கனவுகள் இன்று சமூகத்தில் நிஜமாகின்றன எனும்போது அவரை ஒரு மிகச் சிறந்த சமூகப் போராளி என்றும் ‘பேனா போராளி’ என்றும் கூறுவது மிகப் பொருத்தம்தானே!