நெற்றியில் டிரில்லிங் செய்தாலும் அயராத ஷாலின் துறவி Zhao Rui ! இது எப்படி சாத்தியம்?

(Shaolin Monk Zhao Rui)
Shaolin Monk (Zhao Rui)
Shaolin Monk (Zhao Rui)Img Credit: Ecns
Published on

சாதாரண ஒரு சின்ன குண்டூசியோ அல்லது பிளேடோ நமது உடல் பாகத்தில் கீறினால் கூட என்ன அலறு அலறுகிறோம்!

இரும்பு மற்றும் எஃகை ஓட்டை போடும் டிரில்லிங் மெஷினை வைத்து உங்கள் நெற்றியில் துளையிட்டால்...

போதும், போதும் மேலே பேச வேண்டாம் என்று அலறத் தோன்றுகிறது இல்லையா?!

ஆனால் உலக பிரசித்தி பெற்ற ஷாலின் துறவிகளுக்கு இந்த அசாதாரணமான உளவியல் ஆற்றல், குங் பூ, உடல் வலு இதெல்லாம் சாதாரணம்!

34 வயதான ஷாலின் துறவி ஜவோ ரூயி (Shaolin Monk Zhao Rui) தனது உடல் வலு எதை வேண்டுமானாலும் தாங்கும் என்பதை உலகமே அச்சம் கலந்த ஆச்சரியத்தோடு பார்க்கும் படி நிரூபிக்கிறார்.

இவர் நெற்றியில் ஒரு இரும்புத் தடியை செருகினால் அதை சுலபமாக வளைத்து விடுகிறார். எலக்ட்ரிக் டிரில்லிங் மெஷினுக்கும் இதே கதி தான்!

“வலிக்கும் தான்! ஆனால் அதை எப்படிக் கையாள்வது என்பதை நான் நன்கு கற்றுக் கொண்டேன்” என்கிறார் இவர்!

‘சூப்பர் டஃப் உடல் என்னுடையது; இளமையில் இப்படி இல்லை. ஒரே நடுக்கமாக இருக்கும். ஆனால் இப்போதோ பாறாங்கற்களை என் மண்டையால் மோதி உடைக்கிறேன்’ என்கிறார் இவர்!

ஷாலின் குங்பூ என்றால் உலகமே அதிரும்! பத்துக்கும் மேற்பட்ட வித்தியாசமான ஸ்டைல்கள் இதில் உள்ளன. சுமார் 1525 வருடங்களுக்கு முன்னர் ஷாலின் ஆலயம் சீனாவில் ஹெனான் மாநிலத்தில் சாங் மலைத்தொடரில் கட்டப்பட்டது. இதை பிரபலமாக்கியவர் இந்தியாவிலிருந்து இங்கு வந்த துறவி போதி தர்மர் தான்.

ஷாலினில் உடல் பயிற்சிகளோடு மனப் பயிற்சிகளும் கற்றுத் தரப்படும்.

இதில் வல்லுநரான ஜவோ ரூயி செய்து காட்டும் வித்தைகள் நம்மை மலைக்க வைக்கும்; திகைக்க வைக்கும்; பிரமிக்க வைக்கும்.

ஒரு எஃகு பிளேடால் தன் தொண்டையை அவர் அறுத்துக் காண்பிக்கிறார்.

கூர்மையான முள் கம்பிகள் கொண்ட படுக்கையில் சிரித்துக் கொண்டே படுக்கிறார். இரும்புத் தடியை தன் தொண்டையால் வளைக்கிறார்.

இவரைப் பற்றிய வீடியோ படங்களை இணைய தளத்தில் காணலாம்.

இரண்டு வருட காலம் கடுமையான பயிற்சிகளை இவர் ஷாலின் ஆலயத்தில் மேற்கொண்டார்.

இதையும் படியுங்கள்:
Shreyas Iyer: மும்பையின் தெருவில் இருந்து சர்வதேச கிரிக்கெட் வரை!
Shaolin Monk (Zhao Rui)

இவர் க்யிகாங் (Qigong) என்னும் உடல் ஆற்றல் மேம்படும் பயிற்சியில் வல்லவரானார். சந்தா என்று சொல்லப்படும் சீன கிக்-பாக்ஸிங் கலையிலும் சிறந்து விளங்கினார்.

இவரது ஆற்றலுக்குக் காரணம் இவரது க்யிகாங் தான் என்று சொல்லப்படுகிறது.

உலகில் எவ்வளவோ ஆச்சரியகரமான மனிதர்கள் இறைவன் படைப்பில் தோன்றுகிறார்கள்.

அவர்களில் பயப்பட வைக்கும் சாகஸங்களைச் செய்து காட்டுபவர் ஜவோ ரூயி!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com