அம்மாவின் A-க்ளாஸ் ஐடியா, அப்பாவின் கடும் கட்டளை: குறுக்கு வழி புளியம்பழம் சம்பவம் நினைவில்!

கடையம் புதுக்கிராம அக்ரஹாரத்தில் அப்பாவின் ஒற்றைச் சட்டம் நடக்கும் வீட்டில், குறுக்கு வழி புளியம்பழம் சம்பவத்தில் புத்தகப்பை அவமானத்திலிருந்து மகளை மீட்ட அம்மாவின் நுண்ணிய தந்திரம்.
ammavin-a-class-idea
ammavin-a-class-idea
Updated on
Kalki Strip
Kalki Strip

கதைக்கலாம் கலக்கலாம் வாங்க… கல்கி ஆன்லைன் வழங்கும் எழுத்து மேடையில் அம்மாவின் Class ஐடியா… Mass எஸ்கேப்! பற்றிய அனுபவத்தை கேட்டிருந்தோம். அதில் தேர்வான ஐந்து சுவாரஸ்யமான கட்டுரைகளில் இரண்டாவது கட்டுரை இதோ…

ஒன்றா? இரண்டா? எடுத்துச்சொல்ல? காலஞ்சென்ற அம்மாவை நினைவு கூற, அவரைப் பற்றி எழுத ஒரு அருமையான தலைப்பை அளித்த மங்கையர் மலருக்கு நன்றி.

பள்ளிக்கூடத்தில் படிக்கையில், வீடு திரும்புகையில், நேர் வழியில் வீடு வரவேண்டும். குறுக்கு வழியில் வரக்கூடாது என்பது தந்தையின் கட்டளை. அந்த காலத்தில் எங்கள் வீட்டில் அப்பா வைத்ததுதான் சட்டம். மீறினால் புத்தகப் பையுடன் வீட்டு வாசலில் நிற்கவேண்டும். கவி பாரதியின் ஊரான கடையம் புதுக்கிராமத்தில் உள்ள பெரிய வீடுகளில் ஒன்றில் நாங்கள் வசித்து வந்தோம். எங்களுடைய வீட்டு ஹாலில் சுமார் 80 பேர்கள் அமர்ந்து சாப்பிடலாம். கோவில் தர்மகர்த்தாவாக இருந்த அப்பாவிற்கு ஊரில் நல்ல மரியாதை உண்டு.

தேவையானவைகளை வாங்கிக் கொடுக்கும் அப்பா பேச்சிற்கு மறு பேச்சு கிடையாது. அம்மாவும் வாய் திறந்து எதுவும் பேசமாட்டார்கள். மரியாதை கலந்த பயம். அன்று பள்ளிக்கூடத்தில் இருந்து வீடு திரும்புகையில், எனது சிநேகிதிகள் கல்யாணியும், கமலாவும் குறுக்கு வழியாக போகலாம். அங்கே புளிய மரத்திலிருந்து புளியம்பழம் பறித்து சாப்பிடலாம் என்று சொல்ல, ஆசையுடன் நாவில் நீர் ஊற நானும் சென்றேன். புளியம்பழம் சுவையாக இருக்க கொஞ்சம் சாப்பிட்டு விட்டு, கொஞ்சத்தை ஸ்கூல் பைக்குள் போட்டுக்கொண்டு வந்தேன்.

இனி வருவதுதான் க்ளைமேக்ஸ். வீடு திரும்ப பதினைந்து நிமிடங்கள் லேட். பயந்துகொண்டே மெதுவாக வீட்டிற்கு வர, வாசலில் நின்று கொண்டிருந்த அப்பாவைக் கண்டு நடுங்கிப் போனேன். கூடவே வந்த கல்யாணியும், கமலாவும் என் அப்பாவைக் கண்டதும் எஸ்கேப். "ஏன் லேட்? குறுக்கு வழியா வந்தயா..? பையில என்ன..? எனக்குத் தெரியும்!

இதையும் படியுங்கள்:
இசைஞானி 50... நூறாண்டு தாண்டி வாழி!
ammavin-a-class-idea

ஸ்கூல் பையைத் தலைல தூக்கி நில்லு. அக்ரஹாரத்துல எல்லாரும் பார்க்கட்டும். என்று அப்பா சொல்லவும், நான் பெரிதாக அழ ஆரம்பித்துவிட்டேன். நான் அழுததை உள்ளிருந்து கவனித்த அம்மா, மட-மடவென வந்து, "வெள்ளிக்கிழமையும் அதுவுமா, நம்மாத்து மகாலெஷ்மியை இப்படி வாசலில் நிறுத்தவேண்டாம்" என்று மெதுவாக அப்பாவின் காதில் கூற, அவர், அம்மாவை ஒரு முறை முறைத்தார். அந்த வினாடியில், "மீனா! உள்ள ஓடிப்போய் கை-கால் அலம்பிட்டு சீக்கிரமா ஸ்வாமிக்கு விளக்கேத்து" என்று அம்மா கூறவும், நான் வீட்டுக்குள்ளே ஓடிவிட்டேன். வீட்டிற்குள் ஏற்கெனவே அம்மா விளக்கேற்றி இருந்தார்கள்.

பிறகு அப்பாவிடமிருந்து அம்மாவிற்கு செம மண்டகப்படி கிடைத்தது என்று பாட்டி சொன்னார்கள். பாவம் அம்மா! புதுக்கிராமத்தில், வீட்டிற்கு வெளியே புத்தகப்பையைத் தலையில் வைத்து நான் நிற்பதிலிருந்து காப்பாற்ற, ஒரு ஏ க்ளாஸ் ஐடியாவை அம்மா கொடுக்க, நான் மாஸ் ஆக சைக்கிள் கேப்பில் எஸ்கேப் ஆனேன். அன்று முதல் நோ குறுக்கு வழி! நோ புளியம்பழம்.!

logo
Kalki Online
kalkionline.com