அரக்கோணம் காந்தி தேவராஜ் அய்யங்கார் - ஆம் அப்படித்தான் அவரை எல்லோரும் அழைத்தார்கள். காந்தி அரக்கோணம் வர இவர் காரணமாக இருந்ததால், அப்பெயரே அவருக்கு நிலைத்து விட்டது. இவர் காந்தியின் கொள்கைகளை மட்டும் இன்றி அவரின் கோட்பாடுகளையும் சேர்த்தே பின்பற்றினார்.
சட்டை அணியமாட்டார். காலில் செருப்பு கிடையாது. நான்கு முழ கதர் வேஷ்டியும், தோளில் துண்டு மட்டுமே இவரின் ஆடைகள்.
இரவில் தூங்கும் போது தலைக்கு தலையணை வைத்துக் கொள்ள மாட்டார். காரணம் கேட்டால் போராட்ட காலத்தில் சிறைக்கு செல்ல நேர்ந்தால் இந்த பழக்கங்கள் சுதந்திர வேள்விக்கு தடையாக இருக்கும் என்பார்.
காந்திய கொள்கைகளான தீண்டாமை மற்றும் மது ஒழிப்பையே தாரக மந்திரமாக ஏற்று அதற்காக போராடினார். சோளிங்கரை பூர்வீகமாக கொண்ட தேவராஜ் அய்யங்கார், சோளிங்கர் அருகே குருராஜ பேட்டையில் தாழ்த்தப்பட்ட மக்களின் மறு வளர்ச்சிக்காக நடந்த பிரச்சார மேடையில் குடி மற்றும் கல்வி அறிவு இல்லாமை காரணமாக எத்தகைய கேடு அவர்களுக்கு ஏற்படுகிறது என்பதையும், அதனால் சமமூகத்தில் அவர்கள் வளர்ச்சி உயர்த்த படாது அழுத்தப் படுகிறது என்பதையும் சுட்டிக் காட்டினார்.
மேல் சட்டை அணியாமல் ஆவேசமாகப் பேசி கொண்டிருந்த தேவராஜ அய்யங்காரை பார்த்து கூட்டதில் ஒருவர் எழுந்து , அவர் அணிந்திருந்த பூனுலை சுட்டிக் காட்டி, 'தீண்டாமை பேசும் இவருக்கு பூணூல் ஏன்' என்று விமர்சித்தார்.
'உங்கள் மறுவாழ்வு மற்றும் வளர்ச்சிக்காக நான் பேசும் பேச்சுக்கு இந்த பூணூல் தடையாக இருக்குமேயானால் இந்த பூணூல் எனக்கு தேவையில்லை' என்று கூறிவிட்டு என்று மேடையிலேயே அறுத்தெறிந்தார்.
சோளிங்கர் அருகே எரும்பி கிராமத்தில் அமைந்துள்ள கோளாத்தம்மன் கோயிலில் பக்தியின் மேலீட்டால் உயிர் பலி தந்த பாமர மக்களுக்கு உயிர் பலி தவறானது என்று கூறி எருமைக் கடா பலியை தடுக்க போராட்டங்கள் புரிந்து அதை தடுத்து நிறுத்தினார்.
தேவராஜ அய்யங்கார் வட ஆற்காடு மாவட்ட வாலாஜா தாலுக்கா காங்கிரஸ் செயலாளராக தேர்தெடுக்க பட்டு பம்பரமாக சுழன்று பணியாற்றினார். அவ்வமயம் ராஜாஜி அவர்களோடு பிரச்சார பயணத்தை மேற்கொண்டு, கள்ளுக்கடை மறியல் போராட்டத்தை நடத்தி, சிறை தண்டனை விதிக்கப்பட்டு, ராஜாஜி அவர்களோடு சிறையில் அடைக்கப் பட்டார்.
சோளிங்கர் முதல் வாலாஜா வரை தாழ்த்தப்பட்ட மக்களுக்கேன்று பத்து இடங்களுக்கு மேல் கிணறு வெட்டித் தந்தார்.
சோளிங்கர் போஸ்ட் ஆபீஸ் தெரு சந்திப்பில், இவரது நெருங்கிய நண்பர் தியாகி சுந்தராஜுலு நாயுடு அவர்களின் இடத்தில் ராஜேந்திர பிரசாத் ஓட்டலை நடத்தி வந்தார், தேவராஜ அய்யங்கார். அந்த இடமே காங்கிரஸ் அரசியல் கூடாரமாக விளங்கிற்று. அந்த தெருமுனையே பிரச்சார மேடைக்கு தகுதி படைத்தது போல் பிரச்சாரங்களை நடத்தினர்.
1942ல் வெள்ளையனே வெளியே போராட்ட களத்தில் பம்பாயில் இருந்து திரும்பி வந்து கொண்டிருந்த காமராஜர் அவர்களை, கைது ஆக இருந்ததில் இருந்து தப்பிக்க வைக்க, ராஜாஜி அறிவுறுத்தலோடு, ரகசியமாக சோளிங்கருக்கு இடம் பெயர்த்தார், தேவராஜ் அய்யங்கார்.
தனது ஓட்டலில் அவருக்கான ஆகாரங்களை ஏற்பாடு செய்து அனைத்து காங்கிரஸ் தொண்டர்களையும் ஒன்று திரட்டினார். பம்பாய் வெள்ளையனே வெளியேறு கலவரத்தின் அடிப்படை விவரங்களை காமராஜர் அவர்களிடம் சேகரித்தார். இதன் தொடர்ச்சியாக காமராஜரை விருதுநகரில் சிறை படுத்திய போது பல காங்கிரஸ் தலைவர்களோடு தேவராஜ அய்யங்காரும் சிறை படுத்தப்பட்டார்.
அரக்கோணத்தில் 1992ல் தேவராஜ அய்யங்கார் மற்றும் அவர்கள் சகாக்களை நினைவு கூறும் தியாகிகள் நினைவு தூண், 1992ல் ஜனாதிபதியாக இருந்த ஆர். வெங்கட்ராமன் அவர்களால் அரக்கோணம் புது பஸ் ஸ்டாண்டில் திறந்துவைக்கப்பட்டது.
தேவராஜ அய்யங்கார் அவர்களோடு உடன் சிறைவாசம் அனுபவித்தவர்களுள் திரு. பக்தவத்சலம், திரு. கக்கன், திரு. ராஜாஜி, திரு. காமராஜர், திரு வீ. வீ. கிரி மற்றும் திரு நீலம் சஞ்சீவ ரெட்டி ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.
தகவல், படங்கள் தந்து உதவியவர்: தியாகி தேவராஜ அய்யங்காரின் பேரன், ஆர். பட்டாபிராமன்.