ஒரு நூல் எப்படி இருக்க வேண்டும்? நூலுக்கு எப்படிப் பெயரிட வேண்டும்? நூலில் எவையெல்லாம் இருக்க வேண்டும்? நூல் அழகாக அமைந்திட என்ன செய்ய வேண்டும்? என்று அவர்கள் மனதில் பல கேள்விகள் எழுகின்றன. இக்கேள்விகளுக்கு நன்னூல் நல்ல பதில்களைத் தருகிறது. அவற்றைப்பற்றி இப்பதிவில் பார்ப்போம்.
தங்களது பெயர் ஏதாவதொரு இதழில் வந்து விடாதா? என்கிற விருப்பம் பலரிடமும் இருக்கத்தான் செய்கிறது. இதழ்களில் எப்படி எழுதுவது? எதை எழுதுவது? எழுதியவைகளை இதழ்களுக்கு எப்படி அனுப்புவது என்று தெரியாமல் இன்னும் பலர் இருக்கின்றனர். இவர்களெல்லாம், தற்போது முகநூல் (Facebook), புலனம் (Whatsapp) என்று சமூக வலைத்தளங்களில் எழுதிக் கொண்டிருக்கின்றனர்.
சமுக வலைத்தளங்களில் எழுதியவர்கள் பலரும் தங்களை எழுத்தாளராக அல்லது கவிஞராக அடையாளப்படுத்திக் கொள்ளும் விருப்பத்துடன், தாங்கள் எழுதியவைகளையெல்லாம் தொகுத்து, அதை ஒரு நூலாக்கிட வேண்டுமென்கிற எண்ணத்தில் இருக்கின்றனர். சிலர், தங்களது சமூக வலைத்தளப் பதிவுகளை நூலாக்கம் செய்து வெளியிட்டும் இருக்கின்றனர். ஒரு நூல் அழகாக அமைந்திட என்ன செய்ய வேண்டும்? என்று அவர்கள் மனதில் பல கேள்விகள் எழுகின்றன. இக்கேள்விகளுக்கு நன்னூல் நல்ல பதில்களைத் தருகிறது.
நூலுக்கு எப்படிப் பெயரிடுவது?
‘நூலுக்குப் பெயரிடும் முறை’ குறித்து நன்னூல் ஒன்பது வழிமுறைகளை விளக்கியுள்ளது.
1. நூலுக்குரிய முதல் நூலின் பெயர் (உதாரணமாக, இராமாயணம், பாரதம்)
2. நூலை இயற்றிய கருத்தாவின் பெயர் (உதாரணமாக, அகத்தியம், தொல்காப்பியம்)
3. நூலின் அளவை முன்னிறுத்தும் பெயர் (உதாரணமாக, நாலடியார், புறநானூறு)
4. நூலில் காணப்படும் பெரும்பான்மைப் பொருளின் பெயர் (உதாரணமாக, களவியல்)
5. நூலில் அமைந்திருக்கும் பொதுப் பொருளின் பெயர் (உதாரணமாக, அகப்பொருள்)
6. நூலைச் செய்வித்தவனை முன்னிறுத்தும் பெயர் (உதாரணமாக, வீரசோழியம்)
7. நூலின் இயல்பை முன்னிறுத்தும் பெயர் (உதாரணமாக, சிந்தாமணி, நன்னூல்)
8. நூலில் கூறப்படும் பொருளில் சிறப்புடையதின் பெயர் (உதாரணமாக, வெற்றிவேற்கை, ஆத்திச்சூடி)
9. நூலின் காரணத்தை முன்னிறுத்தும் பெயர் (உதாரணமாக, நிகண்டு)
எனும் ஒன்பது காரணங்களின் அடிப்படையில் நூலின் பெயர் அமையும். அப்படி அமைப்பதே சரியானது என்றும் வலியுறுத்துகிறது.
நூலாக்க உத்திகள்:
நூலாக்கத்திற்கான உத்திகள் 32 என்று தொல்காப்பியம், நன்னூல், பாடலனார் போன்றவை குறிப்பிடுகின்றன. இவற்றுள் நன்னூல்,
1. சொல்லித் தொடங்குதல் வேண்டும்.
2. காரண காரிய முறைப்படி இயல்களை வைத்தல் வேண்டும்.
3. நூலில் கூறக்கருதும் பொருள்களை தொகுத்துக் கூறுதல் வேண்டும்.
4. பின்னர் அவற்றைவகுத்துக் காட்டுதல் வேண்டும்.
5. கூறவந்த கருத்தை மேலோர் கூறியுள்ளவாறு முடித்துக்காட்ட வேண்டும்.
6. தான் கூறும் கருத்துக்கு இலக்கியத்தின் இடம் கூறுதல் வேண்டும்.
7. முன்னோர் கூறிய கருத்துகளை பொருத்தமான இடங்களில் எடுத்தாள வேண்டும்.
8. பிறருடைய கோட்பாடுகளையும் எடுத்துக் கூறுதல் வேண்டும்.
9. சொற்களின் பொருள் விளக்க உருபுகளை விரித்துக் கூறுதல் வேண்டும்.
10. ஒன்றோடொன்று தொடர்புடைய சொற்களை இணைத்துக் கூறுதல் வேண்டும்.
11. இருபொருள்படக் கூறுதல் வேண்டும்.
12. காரணம் விளங்காமல் கூறப்பட்டதை காரணம் கூறி முடிக்க வேண்டும்.
13. ஒரு பொருளுக்குரிய இலக்கணத்தை ஒப்புமைப்படுத்தி உறுதிப்படுத்துதல் வேண்டும்.
14. உறுதிப்படுத்திய இலக்கணத்தை பிறவிடங்களிலும் பயன்படுத்துமாறு தொடர்புபடுத்துதல் வேண்டும்.
15. வழக்கொழிந்தவற்றை விலக்குதல் வேண்டும்.
16. தற்காலத்தில் வழக்குக்கு வந்தப் புதுமைகளை ஏற்புடையது எனில் ஏற்றுக் கொள்ள வேண்டும்.
17. பின்னால் இவை தேவைப்படும் என்றுணர்ந்து அவற்றை முன்கூட்டியே சொல்வது வேண்டும்.
18. ஒரு பொருளுக்கு கருவியாய் அமையவேண்டியதை பின்னால் நிறுத்திக் காட்டுதல் வேண்டும்.
19. வெவ்வெறு வேறுபட்ட கருத்துகளையும் எடுத்துக் காட்டல் வேண்டும்.
20. அவ்வாறு வேறுபடும் கருத்துகளை தொகுத்துக் கூறல் வேண்டும்.
21. இறுதியில் சொல்லப் போவதை முற்பகுதியில் சொல்ல நேர்ந்தால் அது பின்னர் விளக்கப்படும் என்று கூறுதல் வேண்டும்.
22. முற்பகுதியில் கூறப்பட்டதை பிற்பகுதியில் மீண்டும் சொல்ல நேர்ந்தால் முன்னரே கூறப்பட்டது என்று கூறுதல் வேண்டும்.
23. மாறுபட்ட இரண்டு கருத்துகளில் ஏதாவதொன்றை துணிந்து ஏற்க வேண்டும்.
24. மேற்கோள்கள் எடுத்துக்காட்ட வேண்டும்.
25. தான் சொல்ல வந்ததை மேற்கோளுடன் பொருத்திக் காட்ட வேண்டும்.
26. ஐயத்திற்கு இடமின்றி சொல்லவந்த கருத்தை உரைக்க வேண்டும்.
27. சொல்லாமல் விட்டவற்றிற்கும் காரணம் கூறுதல் வேண்டும்.
28. பிறநூல்களின் முடிவுகளை ஏற்றுக் கொள்ள வேண்டும்.
29. தன்னுடைய புதிய கருத்துகளை பலவிடங்களில் எடுத்துச் சொல்லுதல் வேண்டும்.
30. சொற்பொருள் விளக்கத்தையும் அங்கேயே கொடுத்திடல் வேண்டும்.
31. ஒத்த கருத்துக்கள் உடையனவற்றை ஓரிடத்தில் வகைப்படுத்த வேண்டும்.
32. மேலும் ஆராய்வதற்குரிய எல்லைகளை எடுத்துக்காட்டுதல் வேண்டும்.
என்று முப்பத்திரண்டு உத்திகளைப் பயன்படுத்தி, நூல் உருவாக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறது.
நூலுக்கான அழகுகள்:
ஒரு நூலை அலங்கரிப்பதற்கு அந்நூலில் பத்து வகை அழகுகள் இருக்க வேண்டும் என்று நன்னூல் குறுப்பிடுகிறது. அவை;
1. கூறவந்த பொருளைச் சொற்கள் விரியாமல் சுருக்கமாகக் கூறவேண்டும்.
2. சுருக்கமாகச் சொன்னாலும் பொருளைத் தெளிவாக விளங்க வைக்க வேண்டும்.
3. படிப்பவருக்கு இனிமை தரும்படி சொல்ல வேண்டும்.
4. நூலில் நல்ல சொற்களைச் சேர்த்துச் சொல்ல வேண்டும்.
5. சந்த இன்பம் இருக்குமாறு நூலை அமைக்க வேண்டும்.
6. ஆழ்ந்த கருத்துகள் உடையதாக நூல் இருக்க வேண்டும்.
7. கூறும் கருத்துகளைக் காரண காரிய முறைப்படி தொகுத்துக் கூறவேண்டும்.
8. உயர்ந்தோர் கருத்தோடு மாறுபடாமல் கூறவேண்டும்.
9. மிகச்சிறந்த பொருளைத் தருகின்ற நூலாக அது இருக்கவேண்டும்.
10. கூறவந்த பொருளை விளக்க ஆங்காங்கே எடுத்துக்காட்டுகள் தரப்படவேண்டும்.
நூலுக்கான குற்றங்கள்:
ஒரு நூலில் இருக்கக்கூடாதவை எவையென பத்துக் குற்றங்களை நன்னூல் வரையறுத்துக் கூறுகிறது. அவை;
1. குறிப்பிட்ட ஒரு பொருளை விளக்குவதற்கு தேவையான சொற்களில் குறைவுபடக் கூறுதல்
3. குறித்த ஒரு பொருளை விளக்குவதற்கு தேவையான சொற்களை விட மிகைப்படக் கூறுதல்
3. சொன்னதையேத் திரும்பத் திரும்பச் சொல்லுதல்
4. முன்னர் சொல்லிய ஒரு செய்திக்கு முரணாகக் கூறுதல்
5. குற்றமுடைய சொற்களை ஆங்காங்கே சேர்த்தல்
6. கூறவேண்டிய செய்தியை இதுவோ, அதுவோ என்று தயக்கத்தோடு கூறுதல்
7. பொருளோடு பொருந்தாத வெறும் சொற்களை அடுக்கி அலங்கரித்துக் கூறுதல்
8. சொல்லத் தொடங்கியப் பொருளை விட்டுவிட்டு இடையில் மற்றொரு பொருளைக் குறித்துப் பேசுதல்
9. விரிவாகச் சொல்ல ஆரம்பித்து, பொருளை போகப் போகச் சொல் நடையும் பொருள் நடையும் தேய்ந்து குறைத்து முடித்தல்
10. சொற்களிருந்தும் அவற்றால் பொருட்பயன் ஏதுமில்லாது கூறல்
நூல் எழுத விரும்புபவர்கள், நன்னூல் குறிப்பிடும் நடைமுறைகளைக் கடைப்பிடித்து நூல் எழுதினால், அந்த நல்ல நூல் என்று பெயர் பெற வாய்ப்பிருக்கிறது. நூல் எழுதுவதற்கு மட்டுமின்றி, தாங்கள் எழுதும் கதை, கட்டுரை, கவிதைகளிலும் இந்த நடைமுறையைப் பின்பற்றினால் தங்கள் படைப்புகள் எதுவாயினும் சிறப்பாக அமையும்.