POCSO சட்டம்...
POCSO சட்டம்...

பாலியல் வன்முறைக்கு ஆண் குழந்தைகள் பலியாவது இல்லையா?

POCSO சட்டம் குழந்தைகளுக்கு அளிக்கும் பாதுகாப்பு என்ன?

பாலியல் வன்முறைக்கு ஆண் குழந்தைகள் பலியாவது இல்லையா? அதைப்பற்றி சமூகம் அதிகம் பேசாதது ஏன்?

பாதிப்புக்கு உள்ளாகி இருக்கும் குழந்தைகளின் மனநிலையை மாற்றி அவர்களை மீட்டு வருவது எப்படி?

தெரிந்து கொள்ளவோம்.

ஒரு சமூக ஆர்வலரின் பார்வையில் இவற்றை அலசுகிறது இந்த நேர்காணல்:

திருமதி. சுதா முரளி, POSH & POCSO பயிற்றுவிப்பாளர் மற்றும் நிறுவனர் KIAH PRO கன்சல்டிங் அவர்களுடன் நடந்த கலந்துரையாடலின் தொகுப்பு இதோ உங்களுக்குகாக:

திருமதி. சுதா முரளி...
திருமதி. சுதா முரளி...
Q

போக்ஸோ சட்டம் ஆண் பெண் குழந்தைகளையும், சிறார்களையும் எப்படி காக்கின்றது?

A

POCSO என்பது ப்ரொடெக்ஷன் ஆப் சில்ட்ரன் அகைன்ஸ்ட் செக்சுவல் அப்பென்சஸ் (Protection Of Children against Sexual Offence). இந்த ஆக்ட் 2012 முதல் அமலுக்கு வந்தது. இந்தச் சட்டத்தின் அடிப்படையில், 18 வயதுக்குக் கீழ் இருக்கும் எல்லாருமே குழந்தைகள் என வரையறுக்கப் படுகின்றனர். அப்படிப் பார்த்தால் சிறார்கள் மற்றும் சிறுமிகள் இருவருமே இதில் அடக்கம்.

இந்தச் சட்டத்தின் கீழ் இவர்கள் எப்படிக் காக்கப் படுகிறார்கள் என்று பார்த்தோமென்றால், குற்றம் சாட்டப்பட்டவர் பெரியவராக இருந்தாலும் சரி சிறியவராக இருந்தாலும் சரி சம்மதம் பெற்றுச் செய்தோம் எனக் கூற இயலாது. POCSO வழக்குகளை விசாரிப்பது சிறப்பு நீதிமன்றமாகும். வழக்கின் தன்மையைப் பொறுத்து ஜாமீன் கிடைக்குமா இல்லையா என்பதை நீதிமன்றம் தீர்மானிக்கும்.

பாதிக்கப்பட்டவர்களின் அடையாளம் இந்தச் சட்டத்தின் கீழ் மறைக்கப்படும். இப்படித்தான் இந்த சட்டத்தின் கீழ் பாதுகாக்கப்படுகின்றனர்.

Q

பெண் குழந்தைகளை போலவே ஆண் குழந்தைகளும் பாதிக்கப்படுகிறார்களா? ஆம் எனில் ஏன் அவர்களை துன்புறுத்துபவர்களை பற்றி வெளியே அதிகம் தெரிவதில்லை?

A

இது ஒரு நல்ல கேள்வி. ஆம், பெண் குழந்தைகள்போலவே ஆண் குழந்தைகளும் இப்போது இந்த துன்புறுத்தலுக்கு ஆளாகிறார்கள். ஹராஸ்மெண்ட் அண்ட் அப்யூஸ் இது இரண்டுமே நடக்கிறது. பெரும்பாலும் வீட்டை விட்டு வெளியே ஒடிவரும் குழந்தைகள்தான் பாதிக்கப் படுகிறார்கள். இப்படி இவர்கள் பாதிக்கப்படுவதற்கான காரணம் அவர்களுக்கு ஒரு நிரந்தர பாதுகாப்பு இல்லாதது.

இதைப் பற்றி ஏன் வெளியில் தெரிவதில்லை என்றால், சமூகத்தின் கண்ணோட்டம்தான் காரணம். ஆண் குழந்தைகள் வெளியில் சென்று எதையும் எதிர்கொள்ளப் பழக வேண்டும், எதையும் தாங்கிக்கொள்ள வேண்டும், அழக் கூடாது, எதற்கும் பயப்படக்கூடாது. இப்படி ஆண் குழந்தைகளுக்கு நம் சமூகம் வைத்திருக்கும் எதிர்பார்ப்பு ஏராளம். இதனாலேயே பாதி குற்றங்கள் நமக்குத் தெரிவதில்லை. பெண் குழந்தைகளுக்கு நாம் எடுத்துக் கொள்ளும் அக்கறை ஆண் குழந்தைகளுக்கு பெரும்பாலும் எடுப்பது கிடையாது. எச்சரிக்கைகளும் தருவது கிடையாது. அதுதான் உண்மை.

இன்றைய காலகட்டத்தை வைத்துப் பார்த்தால் ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் நாம் அவசியம் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என குழந்தைகளுக்கு நாம்தான் சொல்லிக் கொடுக்க வேண்டும்.

Q

பாதிக்கப்பட்ட குழந்தையையோ, சிறாரையோ மனதளவில் ஏற்படும் அதிர்ச்சியிலிருந்து எப்படி மீட்பது?

A

பாதிக்கப்பட்டவர்கள் குழந்தைகளாக இருந்தாலும் சிறுவர்களாக இருந்தாலும், மிகவும் துன்ப நிலையில்தான் இருப்பார்கள். ஒரு குழப்பத்துடன்தான் இருப்பார்கள் என்று கூடச் சொல்லலாம். ஏனெனில் அவர்களுக்கு என்ன நடக்கிறது எனப் பாதி நேரம் தெரிவது இல்லை. உதாரணத்திற்கு ஒரு சிறு குழந்தையை மடியில் உட்கார வைத்துக்கொண்டால், அது பாசத்தினால் உட்கார வைத்துக்கொள்கிறார்களா இல்லை பாலியல் துஷ்பிரயோகத்திற்காக உட்கார வைத்துக் கொள்கிறார்களா என்ற வித்தியாசம் கூட அந்த குழந்தைக்கு முக்கால்வாசி நேரம் தெரிவது இல்லை.

அந்தக் குழந்தைக்கு இது மிகப் பெரிய மனப்போராட்டமாக மாறி விடுகிறது, அவர்கள் வளர்ந்து பெரியவர்கள் ஆனாலும் அந்த வடு மறைவதில்லை. இவர்களை மீட்டுக்கொண்டு வருவதற்கு உரிய மனநல மருத்துவரை அணுகுவது அவசியம். அவர்கள் மனதில் என்ன இருக்கிறது எனப் பேசி புரிந்துகொண்டு, அவர்களைச் சகஜ நிலைக்குக் கொண்டுவருவது அவர்களால் மட்டுமே முடியும்.

ஆனால், இந்த ரிக்கவரி பற்றி (மீட்டு வருவது) நிறைய இடங்களில் நாம் பேசுவதே கிடையாது. எப்படிப் பாதுகாப்பது, எப்படித் தடுப்பது என்பதை மட்டும்தான் பேசுகிறோமே தவிர ரிக்கவரி பற்றி நாம் விட்டு விடுகிறோம். ஆக, இந்த ரிக்கவரிக்குத்தான் குடும்பத்தினர் ஒத்துழைப்பு மிக மிக முக்கியம்.

சகஜ நிலைக்கு வருவது சில காலம் எடுக்கும். அது அந்தக் குழந்தையைப் பொறுத்தது. ஒரு சில பேருக்கு ஒரு சில மாதங்கள் ஆகலாம் ஒரு சில குழந்தைகளுக்கு ஒரு சில வருடங்கள் ஆகலாம். அந்தக் குழந்தைக்குத் தேவையான இடைவெளி கொடுக்க வேண்டும். அவர்களைப் பாதிக்கப்பட்டவர்களாகப் பார்க்கக்கூடாது. அவர்களிடம் அதைப் பற்றியே பேசக்கூடாது. இப்படிச் செய்வது அவர்களுக்கு ஒரு பாதுகாப்பு உணர்வு தரும்.

இதையும் படியுங்கள்:
லேடீஸ் விரும்பும் லேட்டஸ்ட் ஃபாஷன் – லெக்கிங்ஸ் இந்த 10 வகைகள் மிகப் பிரபலம்!
POCSO சட்டம்...
Q

பள்ளியும், சமூகமும் சேர்ந்து எப்படி குழந்தைகளை காப்பது?

A

ள்ளிகளில் இன்று நிறைய நல்ல விதிமுறைகள் அரசின் வழிகாட்டுதலின் படி போடப்பட்டுள்ளது. பெற்றோர்கள் தங்களின் சிரமங்களைப் பார்க்காமல் பள்ளி நிர்வாகத்தோடு இணைந்து செயல்பட்டால் பாதி குற்றங்கள் குறையும். உதாரணத்திற்குப் பள்ளிகளில் கொடுக்கப்படும் பெற்றோர்களுக்கான அடையாள அட்டை எடுத்துச் செல்லுதல், குழந்தைகளை அவசரக் காலத்தில் அழைத்துச் செல்லும்போது பள்ளிகளில் கடவுச்சீட்டு பெற்றுக்கொள்ளுதல், குழந்தைகளிடத்தில் தெரியாத நபருடன் போகக்கூடாது என அடிக்கடி நினைவூட்டுதல் போன்றவற்றைச் செய்யலாம்.

Q

‘Victim shaming’ எவ்வாறு நிறுத்துவது, நிறுத்த வாய்ப்பிருக்கிறதா?

A

து ஒரு ரொம்ப நல்ல கேள்வி. இதை ‘விக்டிம் ஷேமிங்’ என்று நான் சொல்ல மாட்டேன். இது ‘விக்டிம் பிளேமிங்’ (Victim Blaming’.) அதாவது பாதிக்கப்பட்ட குழந்தையைக் குறை சொல்லுவது. இன்றைய காலகட்டத்தில் பச்சிளம் குழந்தையைக்கூட காம வெறியர்கள் விடுவதில்லை. அப்படி இருக்க, எப்படி ஒரு குழந்தையை நாம் குற்றம் சாட்டுவது?

இதை நிறுத்துவதற்கு நாம் விழிப்புணர்வைத்தான் ஏற்படுத்த முடியும். எல்லாரையும் மாற்ற முடியாது குறைந்தபட்சம் சிலரையாவது மாற்றினால் அது எல்லாரிடத்திலும் மாற்றத்தை ஏற்படுத்தும்.

Q

குழந்தைகளுக்கு எவ்வாறு இது அவர்கள் தப்பு இல்லை என புரிய வைப்பது?

A

ரு பாதிக்கப்பட்ட குழந்தை நினைப்பது ‘நாம்தான் தவறாக நடந்துகொண்டோம்; நாம்தான் தவறு செய்துவிட்டோம்; என் மேல்தான் அழுக்கு இருக்கிறது என்று நினைக்கிறது. பாவம் அவர்களுக்குத் தெரிவதில்லை அவர்கள் மேல் தப்பு இல்லை என்பது. இதை அவர்களுக்குப் புரியவைக்க, முதலில் நம்மிடம் வந்து அவர்கள் சொல்லுவதை முழுமையாக நாம் நம்ப வேண்டும். நம் சமூகத்தின் மிகப் பெரிய தவறே அதுதான். பெரியவர்கள் சொல்வதை நம்பும் நாம் குழந்தைகள் சொல்லுவதைக் கேட்பதில்லை. அவர்களுடன் அமர்ந்து நாம் இருக்கிறோம் அவர்களுக்குத் துணையாக எனப் புரிய வைக்க வேண்டிய கடமை நம்மிடம் இருக்கிறது.

பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் எனத் தெரிந்தவுடன் தகுந்த ஆலோசகரிடம் அழைத்துச் செல்ல வேண்டும். மீண்டும் மீண்டும் அவர்களைத் தூண்டும் விதமாகப் பேசுவதோ, நடந்த சம்பவத்தை நினைவு கூறுவதோ நடக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

குழந்தைகள் எதிர்பார்ப்பது அவர்களுக்கு ஆறுதல் கூறி, அவர்களின் கையை பிடித்துக்கொண்டு வழிநடத்தும் பெற்றோரையோ, ஆசிரியரையோ அல்லது ஒரு பொறுப்பாளரையோதான். நாமும் நம்மைச் சுற்றியுள்ள சமூகமும் இதைச் செய்யும் என நம்புவோம்.

தொகுப்பு: மதுவந்தி

logo
Kalki Online
kalkionline.com