அண்ணா என்றொரு அறிஞர்!

September 15 Annadurai birthday
September 15 Annadurai birthday
Published on
Kalki Strip
Kalki Strip

பேரறிஞர் என்று போற்றப்பட்ட காஞ்சீவரம் நடராஜன் அண்ணாதுரை(C.N.Annadurai), சுமார் இரண்டு ஆண்டுகளே தமிழகத்தின் முதலமைச்சராகப் பொறுப்பேற்று ஆட்சி நடத்தியிருந்தாலும், அவரின் அடிச்சுவடுகள் வரலாற்றுத் தடத்தில் அழிக்க முடியாத முத்திரையைப் பதித்துள்ளன!

’கடமை, கண்ணியம், கட்டுப்பாடு’ என்ற தாரக மந்திரமும், ’மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணமுண்டு!’என்ற வாசகமும் அவரின் மனவோட்டத்தைப் படம் பிடித்துக் காட்டுவன. சிறுவயதிலேயே தாயை இழந்து பாசத்திற்கும், படிக்க வேண்டிய வயதில் பணத்திற்காகவும் கஷ்டப்பட்டாலும், தமிழிலும், ஆங்கிலத்திலும் அடுக்குமொழியில் பேசி அசத்தும் கலையை அவர் முயன்று கற்று முன்னேறினார்.

தன் எழுத்தாலும், பேச்சாலுமே தமிழக முதலமைச்சர் நாற்காலியில் அமர்ந்தார். ஆண்ட காலம் சிறிதாயினும், அனைவர் மனதிலும் இடம் பிடித்தார். ’நாவும் விரல்களும் நல்லது செய்தால் ஊரும் உலகும் உயர்வாய்ப் போற்றும்!’ என்பதற்கு இலக்கணமாகத் திகழ்ந்தார். அவர் பேச்சாற்றலைக் கண்டு வியக்காதவர்களே இல்லை என்று சொல்லலாம்.

சாதாரண மக்கள் புகழ்வதும், பாராட்டுவதும் இயற்கையே!ஆனால், அரசியல் களத்தில், எதிர் அணியில் இருப்பவர்களாலும் வியந்து பாராட்டும் அளவுக்குப் பேசுவது என்பது சாதாரணமானதல்ல. எதிரணியினரின் பாராட்டு எளிதாய்க் கிடைத்து விடாது. அதனையும் சாதித்துக் காட்டியவர் அண்ணா!

அது 1962 ஆம் ஆண்டு 50 எம்.எல்.ஏக்களுடன் அண்ணா எதிர்க்கட்சித் தலைவராக நமது சட்ட சபையில் இருந்த நேரம். ஆளும் கட்சிக் காங்கிரஸ்காரர்கள் அடிக்கடி, அண்ணாவும் அவர் கட்சி உறுப்பினர்களும் சட்டசபையில் சரியாக இயங்கவில்லையென்று குத்திக்காட்டி கேலி பேசிக்கொண்டே இருந்தார்கள்!

ஒரு நாள் அண்ணா கீழ்க்கண்டவாறு கூறினார்:

“நீங்கள் எதிர்க்கட்சியின் செயல்பாடு சரியில்லை என்று அடிக்கடி கூறுவதைக் கேட்டால், விரைவில் நீங்களே அந்தக் குறையைப் போக்கி விடுவீர்கள் என்று எண்ணத் தோன்றுகிறது. நாங்கள் வருங்காலத்தில் இப்பொழுது நீங்கள் அமர்ந்திருக்கும் இடத்தில் அமர வேண்டியவர்கள் என்பதால், பொறுப்புணர்ந்து அடக்கத்துடன் இதனைக் கூறுகிறேன்!”

அவ்வளவுதான்! கேலி பேசிய ஆளுங்கட்சிக்காரர்கள் அவர் திறமையை வியந்ததோடு, அத்தோடு அவ்வாறு பேசுவதையே விட்டு விட்டார்களாம்! அதோடு மட்டுமல்ல, தீர்க்கதரிசியான அவர் சொன்னபடி 1967 தேர்தலில் ஜெயித்து, அரியணை ஏறியது வரலாறு!

தேர்தல் முடிவுகள் வெளி வந்ததை, உற்சாகத்துடன் ஓடி வந்து சொல்லிக் கொண்டிருக்கிறார்கள் கட்சிப் பொறுப்பாளர்கள். பெருந்தலைவர் தோற்ற செய்தியும் அண்ணாவின் காதுகளுக்கு எட்டுகிறது. அதிர்ச்சிக்குள்ளாகிறார்!

சொல்லியவர்களிடம் வருத்தமுடன் சொல்கிறார். ”என்ன இது?கிளைகளை வெட்டச் சொன்னா, மரத்தையேவா சாய்ப்பது?” என்றபடி மிகுந்த ஆதங்கத்தை வெளிப்படுத்துகிறார்!

நல்ல ஜனநாயக ஆட்சி அமைய, வலுவான எதிர்க்கட்சி அவசியந்தானே! இதுபோன்று இன்னும் பல சுவாரசிய நிகழ்வுகளைச் சொல்லிக் கொண்டே போகலாம்.

இதையும் படியுங்கள்:
பானிபூரி சாப்பிட்டால் இந்த நோய் வருமா? எச்சரிக்கும் மருத்துவர்கள்!
September 15 Annadurai birthday

செப்டம்பர் 15 பேரறிஞரின் பிறந்த நாள். இந்த நல்ல தருணத்தில் அவர் புகழ் பரப்புவோம். அவர் கூறிய ‘கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டை’ மதித்து நடப்போம்! ’மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணமுண்டு!’ என்ற அவரின் கோட்பாட்டை ஏற்று நடந்தால் உலகம் அமைதிப் பூங்காவாகும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com