
ஓவியர் மணியம் – ஒரு முழுமையான கலைஞர்!
ஓவியர் மணியம் நூற்றாண்டை அர்த்தமுள்ள வகையில் கொண்டாடியிருக்கிறது இந்து பத்திரிகை நிறுவனம். அவரது அரிய ஓவியங்களைத் தொகுத்து ஒரு புத்தகமாக வெளியிட்டிருக்கிறார்கள்.
இந்து பத்திரிகை அலுவலகத்தில் நடைபெற்ற இந்த விழாவில் இந்து குழுமத்தினர், மணியம் மற்றும் கல்கி குடும்பத்தினர் கலந்து கொண்டனர்.
மணியத்தின் மகன் பிரபல ஓவியர் மணியம் செல்வன் இந்த புத்தக ஆக்கத்திற்கு பெரிய பங்களித்திருக்கிறார். அவரது மகள்கள் இருவரும் இறைவணக்கம் பாடி நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார்கள்.
நூலை வெளியிட்டுப் பேசினார் நடிகர் சிவகுமார். முதல் பிரதியைப் பெற்றுக்கொண்டார் தோட்டாதரணி. ஓவியக் கலையில் தேர்ந்தவரான சிவகுமார் சக ஓவியரான மணியத்தின் படைப்புகளைப் பற்றி அதன் நுட்பங்களை உணர்ந்து பேசியது அருமையாக இருந்தது.
கல்கி குடும்பத்தின் சார்பில் சீதாரவியும், லஷ்மி நடராஜனும் கலந்து கொண்டனர். ”இந்த புத்தகம் வெளிவர பெரும் உழைப்பைத் தந்த குழுவினருக்குதான் முதல் பாராட்டு... நேர்த்திமிகு அற்புதப் படைப்பு...” என்று சீதாரவி சொன்னபோது கீதா வெங்கட்ராமன் தலைமையிலான குழுவினர் எழுந்து நிற்க எல்லோரும் கரவொலி எழுப்பி பாராட்டு தெரிவித்தார்கள்.
ஓவியர் மணியம் செல்வனின் பேச்சு முத்தாய்ப்பாக அமைந்திருந்தது.
இளம் வயதில் ஓவியக் கல்லூரியில் சேர்ந்து பயில ஆரம்பத்திருந்தார் மணியம். அப்போது தான் வரைந்த ஓவியங்கள் சிலவற்றை கல்கி ஆசிரியரான கிருஷ்ணமூர்த்தியின் பார்வைக்கு எடுத்துச் சென்றார்.
அவற்றைப் பார்வையிட்ட கல்கி தன் எதிரில் நின்று கொண்டிருந்த இளைஞனின் திறமையை புரிந்து கொண்டார்.
‘நீ நாளை முதல் கல்கி அலுவலகத்தில் பணியில் சேர்ந்துகொள்’ என்றார்.
‘என் கல்லூரிப் படிப்பு??’ என்று தயங்கியவாறு மணியம் கேட்க, ‘உன் திறமைக்குத்தான் வேலையே தவிர உனக்கு கிடைக்கப்போகும் டிப்ளோமாக்காக இல்லை. அந்த வேலை இப்போதே உனக்கு கிடைத்துவிட்டதே?’ என்றாராம் கல்கி.
இப்படிச் சொன்னவருக்கு இருந்த திறனறியும் நுட்பமும், கேட்டவருக்கு இருந்த தன்னம்பிக்கையும் வீண் போகவில்லை. ஒரு வெற்றிக் கூட்டணி இப்படித்தான் உருவானது.
கல்கி பத்திரிகை தொடங்கி அப்போது ஐந்து மாதங்கள்தான் ஆகியிருந்தன. கல்கியோடு சேர்ந்து மணியத்தின் வளர்ச்சி அபாரமாய் பெருகியது. மகத்தான ஒரு ஆரம்பம்தான் அவருக்கு. எத்தனை பேருக்கு வாய்க்கும்?
இதனை நன்றியோடு நினைவுகூர்ந்தார் மணியம் செல்வன்.
கல்கியின் ‘ மோகினித்தீவு ‘ என்ற சரித்திர நாவலுக்குதான் முதல் முதலாக சித்திரம் தீட்டினார் மணியம். ‘சிவகாமியின் சபதம்’, ‘பொன்னியின் செல்வன் ‘ போன்ற தொடர்கள் மணியத்தின் திறமையை தமிழகமெங்கும் பேசவைத்தன.
சுமார் இருபத்தெட்டு ஆண்டுகள் தனது ஓவிய வாழ்க்கையை அர்ப்பணிப்புடன் செய்த ஓவியர் மணியம் தன்னுடைய 44-ம் வயதில் காலமானார்.
”அவ்வளவு இளைய வயதில் காலமானதாலோ என்னவோ அவருடைய திறமைகளை ஆசிகளாக எங்கள் குடும்பத்துக்கு வழங்கிவிட்டுப் போயிருக்கிறார். நானும் என்னைப் பின்பற்றி என் மகள்களும் மூன்று தலைமுறைகளாக ஓவியக் கலையில் ஈடுபாடு வைத்திருக்கிறோம்” என்று நெகிழ்ச்சியுடன் கூறினார் மணியம் செல்வன்.
புத்தகத்தைப் புரட்டியவுடனேயே அதன் செய் நேர்த்தி கண்களைக் கவர்கிறது. மணியத்தின் ஓவியங்கள் புராதனத் தன்மை கொண்டவை. அந்தத் தன்மை மாறாமல் அவை அச்சிடப்பட்டிருகின்றன.
ஒவ்வொரு பக்கமும் ஓவியரின் வாழ்க்கையையும், அர்ப்பணிப்பையும் உணர வைத்தது.
கல்கி, பிறகு சதாசிவம் ஆகியோர் தொடர்ந்து கொடுத்த ஊக்கமும், ராஜாஜியின் வழிகாட்டலும் ஓவியர் மணியத்தின் திறமைகளை வளர்த்தெடுத்தன.
ராஜாஜி எழுதிய சக்ரவர்த்தித் திருமகன் தொடருக்கும் ஓவியம் தீட்டியிருக்கிறார் மணியம்.
கல்கியின் பொன்னியின் செல்வன் தொடருக்கு குந்தவை, நந்தினி, வானதி ஆகியோருக்கு தனித்தனியாக சிகையலங்காரம் கொடுத்து வேறுபடுத்திக் காட்டியிருக்கிறார்.
கல்கியுடன் நிறைய பயணம் செய்திருக்கிறார். அஜந்தா, எல்லோரா குகை ஓவியங்களை நேரில் பார்த்து நெகிழ்ந்திருக்கிறார். அந்த ஓவியங்களின் பாதிப்பு அவரது சித்திரங்களில் நன்றாகவே வெளிப்படுகின்றன.
இரண்டு முறை பாதாமிக்குப் பயணம் செய்திருக்கிறார். சிற்ப அதிசயங்களை நேரடியாகப் பார்த்து வரைந்திருக்கிறார்.
அப்போதெல்லாம் அவருடைய மனைவியும் உடன் பயணித்து உணவுத் தேவைகளை கவனித்துக் கொண்டிருக்கிறார்.
இலங்கை அனுராதபுரம் போன்ற இடங்களுக்கும் நேரில் சென்று கலை பொக்கிஷங்களை வாசகர்களின் கண்களுக்கு விருந்தாக்கியிருக்கிறார்.
கல்கி தீபாவளி மலர்களில் அவர் வரைந்த ஓவியங்கள் அழகுக்கு அர்த்தம் சேர்த்தன.
”பார்த்திபன் கனவு” திரைப்படம் உருவானபோது, ஓவியராகவும், கலை இயக்குநராகவும், ஆடை வடிவமைப்பாளராகவும் பணியாற்றினார் ஓவியர் மணியம்.
ஓவியர் மணியம் சிறந்த புகைப்படக் கலைஞரும்கூட. அவர் எடுத்த புகைப்படங்கள் புத்தகத்தில் ஆங்காங்கே பயன்படுத்தப்பட்டிருக்கின்றன.
தன் ஓவியக் கலைக்குத் தேவைப்படும் புராதன பூஜைப் பாத்திரங்களைக்கூட தேடிப்பிடித்து புகைப்படம் எடுத்து வைத்திருக்கிறார் மணியம்.
அவருடைய தேடல் முழுக்க ஓவியம் சார்ந்ததாகவே இருந்திருக்கிறது.
இப்படிப்பட்ட அர்ப்பணிப்பு இன்றைக்கு அரிதான ஒரு விஷயம்.
மணியத்தைக் கொண்டாட உருவான இந்த புத்தகம் அவரை அறிமுகம் செய்த கல்கியையும் சேர்த்து கொண்டாடியிருக்கிறது.
காலத்தால் பிரிக்க முடியாத பந்தமல்லவா அது!