
உலகின் மிகப் பிரபலமான இரத்தினக்கற்களில் ஒன்று ஹோப் வைரம் (Hope Diamond). 45.52 காரட் எடை கொண்ட இந்த அரிய நீல நிற வைரம் 1666 ஆம் ஆண்டிலிருந்து பல்வேறு உரிமையாளர்களிடம் சென்று தற்போது அமெரிக்காவிலுள்ள வாசிங்டன் நகரிலுள்ள தேசிய இயற்கை வரலாற்றுக்கான தேசிய அருங்காட்சியகத்தில் (National Museum of Natural History) பாதுகாப்புடன் கூடிய காட்சிப் பொருளாக வைக்கப்பெற்றிருக்கிறது. மேலும், இந்த வைரம் 250 மில்லியன் அமெரிக்க டாலருக்குக் காப்பீடு செய்யப்பட்டிருக்கிறது.
இந்தியாவில் தோன்றியதாகக் கருதப்படும் இந்த இரத்தினக் கல்லானது 1666 ஆம் ஆண்டில் பிரெஞ்சு ரத்தின வணிகர் ஜீன்-பாப்டிஸ்ட் தாவர்னீரால் டாவர்னியர் புளூ என்ற பெயர்கொண்ட வைரக்கல்லாக வாங்கப்பட்டது. தாவர்னீரால் புளூ வைரக்கல் வெட்டப்பட்டு பிரெஞ்சு நீலம் ( லு புளூ டி பிரான்ஸ் ) என்ற பெயர் சூட்டப்பட்டு, 1668 ஆம் ஆண்டு தாவர்னீரால் அரசர் பதினான்காம் லூயிஸ் XIV என்பவருக்கு விற்கப்பட்டது. 1791 ஆம் ஆண்டில் இந்த வைரம் திருடப்பட்டது. பின்னர் பல கைகளுக்குச் சென்ற இந்த வைரமானது, 1839 ஆம் ஆண்டில் இலண்டனில் ஹோப் அண்ட் கோ என்ற நிறுவன உரிமையாளரால் வாங்கப்பட்டு அவரின் குடும்பத்தின் இரத்தின சேகரிப்பில் ஒன்றாக இருந்தது. அப்போது இந்த வைரம் "ஹோப் வைரம்" எனும் பெயரைப் பெற்றது.
பின்னர், அந்தக் குடும்பத்திலிருந்து விற்பனை செய்யப் பெற்று, பல பல உரிமையாளர்களைச் சென்றடைந்தது. முடிவில் தனது பயணத்தை நிறுத்திக் கொண்டு, அருங்காட்சியகத்தில் பாதுகாப்புடன் காட்சிப்படுத்தப்பட்டு இருக்கிறது.
இந்த வைரமானது பேரிக்காய் வடிவிலான புறா முட்டையுடன் அல்லது அக்ரூட் பருப்பு அளவிலும் வடிவத்திலும் ஒப்பிடப்பட்டுள்ளது . இதன் நீளம், அகலம் மற்றும் ஆழம் 25.60 மிமீ × 21.78 மிமீ × 12.00 மிமீ (1 அங்குலம் × 7/8 அங்குலம் × 15/32 அங்குலம்) என்று அளவீடு செய்யப் பெற்றுள்ளது. வைரத்தின் எடை 45.52 காரட் (9.104 கிராம்; 0.3211 அவுன்ஸ்). இது "ஆடம்பரமான அடர் சாம்பல்-நீலம்" மற்றும் "அடர் நீல நிறத்தில்" அல்லது "ஸ்டீலி-நீலம்" நிறத்தைக் கொண்டதாக விவரிக்கப்பட்டுள்ளது.
1996 ஆம் ஆண்டில், அமெரிக்காவின் இரத்தனக்கல் ஆய்வு நிறுவனம் வைரத்தை ஆய்வு செய்து, அவர்களின் தனியுரிம அளவைப் பயன்படுத்தி, அதை ஆடம்பரமான ஆழமான சாம்பல் நிற நீலமாக தரப்படுத்தியது .
இந்த வைரம், அதை வைத்திருப்பவருக்கு அல்லது அணிந்தவருக்கு துரதிர்ஷ்டத்தையும் சோகத்தையும் கொண்டு வரும் எனும் கதையாலும் சூழப்பட்டுள்ளது. இவற்றைத் தொடர்ந்து, 1911 ஆம் ஆண்டு, நியூயார்க் டைம்ஸ் இதழில் வெளியான கட்டுரையில், இது துரதிர்ஷ்டவசமானதாகக் கூறப்படும் கீழ்க்காணும் சில தகவல்களைப் பட்டியலிட்டது.
* ஜாக்ஸ் கோலெட் சைமன் ஃபிராங்கலிடமிருந்து ஹோப் வைரத்தை வாங்கி தற்கொலை செய்து கொண்டார்.
* இளவரசர் இவான் கனிடோவ்ஸ்கி அதை கோலெட்டிடமிருந்து வாங்கினார், ஆனால் ரஷ்யப் புரட்சியாளர்களால் கொல்லப்பட்டார்.
* கனிடோவஸ்கி அதை "தனது காதலியால் கொல்லப்பட்ட" மல்லே லாடுவுக்குக் கடனாகக் கொடுத்தார்.
* ஒரு காலத்தில் அதை துருக்கிய சுல்தானுக்கு விற்ற சைமன் மென்சரிட்ஸ், அவரது மனைவி மற்றும் இளம் குழந்தையுடன் ஒரு பள்ளத்தாக்கிலிருந்து தூக்கி எறியப்பட்டார்.
* சுல்தான் ஹமீத் அதை அபு சபீரிடம் "பாலிஷ்" செய்யக் கொடுத்தார், ஆனால் பின்னர் சபீர் சிறையில் அடைக்கப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டார்.
* துருக்கியில் கல் பாதுகாவலர் குலுப் பே ஒரு கும்பலால் தூக்கிலிடப்பட்டார்.
* அதைத் தன் வசம் வைத்திருந்ததற்காக ஹெஹ்வர் ஆகா என்ற துருக்கிய உதவியாளர் தூக்கிலிடப்பட்டார்.
* இந்தியாவிலிருந்து பாரிஸுக்கு கல்லைக் கொண்டு வந்த டேவர்னியர், "கான்ஸ்டான்டினோப்பிளில் காட்டு நாய்களால் துண்டு துண்டாகக் கிழிக்கப்பட்டார்.
* மன்னர் பதினான்காம் லூயிஸ் அதை மேடம் டி மான்டெஸ்பானுக்குக் கொடுத்தார், பின்னர் அவர் அதைக் கைவிட்டார்.
* பிரான்சின் பிரதிநிதியான நிக்கோலஸ் ஃபோக்கெட் என்பவர் அதை அணிய தற்காலிகமாகக் கடன் வாங்கினார், ஆனால், அவமானப்படுத்தப்பட்டு சிறையில் இறந்தார்.
* தற்காலிகமாக அணிந்திருந்த இளவரசி டி லம்பால், ஒரு பிரெஞ்சு கும்பலால் துண்டு துண்டாக கிழிக்கப்பட்டார்.
* கல்லை மீண்டும் வெட்டிய நகை வியாபாரி வில்லியம் ஃபால்ஸ் ஒரு பாழடைந்த மனிதனாக இறந்தார்.
* வில்லியம் ஃபால்ஸின் மகன் ஹென்ட்ரிக் தனது தந்தையிடமிருந்து நகையைத் திருடி, பின்னர் தற்கொலை செய்து கொண்டார் .
* சில ஆண்டுகளுக்குப் பிறகு (ஹென்ட்ரிக்கிற்குப் பிறகு) இது பிரான்சிஸ் டீலியூவுக்கு விற்கப்பட்டது, அவர் துயரத்திலும் பற்றாக்குறையிலும் இறந்தார்.
ஆனால், பின்னர் இவையெல்லாம் போலியானவை மற்றும் ஊகங்களின் அடிப்படையிலானவை என்று சொல்லப்பட்டது. இதனைத் தொடர்ந்து, மேலும் சில ஊகங்களும் வெளியாகின.
அமெரிக்காவிலுள்ள வாசிங்டன் நகரிலுள்ள தேசிய இயற்கை வரலாற்றுக்கான தேசிய அருங்காட்சியகத்தில் இவ்வைரம் பாதுகாப்பாக வைக்கப்பெற்ற பின்பு, இந்தக் கட்டுக்கதைகளெல்லாம் முடிவுக்கு வந்துவிட்டன.