

இந்த ஆரூடம், கைரேகை, நேமாலஜி, ந்யூமராலஜி, அருள்வாக்கு, ஜோஸ்யம், சாமி ஆடி குறி சொல்வது, சோழி போட்டு பார்ப்பது, கிளி ஜோஸ்யம் நிமித்தம், ஜாதகப்பலன்கள், நாடி, ஓலை, ஜோதிட முற்பிறப்பு மறுபிறப்பு… நவக்கிரக கட்டங்கள்!
இதெல்லாம் எந்த அளவுக்கு உண்மை எந்த அளவுக்கு நம்பலாம் என்பதை அவரவர் வாழ்வில் நடந்ததை வைத்து தான் தீர்மானிக்க முடியும்.
உண்டு என்றால் அது உண்டு. இல்லை என்றால் அது இல்லை.
(இது கம்பரின் கம்பராமாயணக் கருத்தை வைத்து கண்ணதாசன் எழுதிய பாடல்.)
சில விஷயங்களைக் கேள்விப்படும் போதும், படிக்கும் போதும் பகுத்தறிவுப் பகலவர்கள், நவீன குவாண்டம் அறிவு ஜீவிகள் கூட சற்று குழம்பிப் போவது நிச்சயம்.
எத்தனையோ சொல்லலாம். சிலவற்றை மட்டும் இப்போது பார்ப்போம்.
லால்பகதூர் சாஸ்திரி பிரதமராக இருந்த காலம் 1964 - 1966. அவரது அமைச்சரவையில் இந்திரா காந்தி அம்மையார் செய்தி ஒலிபரப்புத் துறை அமைச்சர்.
1965 வாக்கில் ஒரு நாள் பார்லிமெண்ட்டுக்குள் போகும் போது வழியில் ஒரு சாமியார் ஒரு பேப்பரை இந்திரா அவர்கள் கையில் தந்து விட்டுப் போய்விட்டார், பதிலுக்குக் காத்திராமல்.
இந்திரா அவர்களும் தன் கைப்பையில் அந்தப் பேப்பரை வைத்துக்கொண்டு போய்விட்டார். அன்று இரவு எடுத்துப் பார்த்தார், அதில் '24.01.1966 அன்று நீங்கள் பிரதமராக பொறுப்பு ஏற்பீர்கள்' என எழுதி இருந்தது. வேறு எதுவும் எழுதவில்லை.
அதை அப்படியே மேஜையில் டிராயரில் போட்டுவிட்டு மறந்து விட்டார். அதைப் பற்றிய நினைவும் இல்லை.
11.01.1966 ல் சாஸ்திரி அவர்கள் மர்மமான முறையில் ரஷ்யாவில் காலமானார். குல்ஜாரிலால் நந்தா அவர்கள் இடைக்காலப் பிரதமர் பொறுப்பு வகித்தார். அடுத்து யார் பிரதமர் என கட்சியினர் கூடி ஆலோசித்தனர். காமராஜர் அவர்களின் ஆலோசனைப்படி இந்திரா காந்தி அம்மையார் தேர்வானார். 24.01.1966 அன்று பதவி ஏற்றார்.
இது வரலாறு.
அன்று இரவு சாமியார் தந்த பேப்பர் கண்ணில் பட்டது. எத்தனை தீர்க்கமான அக்யுரேட்டான கணிப்பு. இப்படிகூட ஆரூடம் ஒருத்தரால் முன் கூட்டி சொல்ல முடியுமா என வியந்தார்!
அது வரை இந்திரா அம்மையார் இந்த ஜோஸ்ய விவகாரங்களில் அத்தனை நம்பிக்கை இல்லாதவர்.
அந்த சாமியாரைக் கூப்பிட்டு வரச் சொன்னார்.
வந்தார் அந்த சாமி. அவர் தான் தாந்திரீகர் சந்திராசாமி.
அதற்குப் பின் சந்திராசாமி ராஜகுரு ஆனார். இந்திரா அவர்கள் அவரை ஆலோசிக்காமல் எந்த முடிவும் எடுக்க மாட்டாராம்.
டெல்லியில் ஆசிரமம் கட்டிக் கொள்ள இந்திரா அவர்கள் நிலம் ஒதுக்கினார் அவருக்கு.
அது மட்டுமா? பின்னாட்களில் திரு பி.வி நரசிம்ம ராவ் , வி.பி சிங் அவர்களுக்கும் ஜோதிட ஆலோசகர் ஆனார்.
பிரிட்டிஷ் பிரதமர் மார்கரெட் தாட்சர் அவர்களும் பின்னால் பிரதமர் ஆவார் என 1975ல் ஆரூடம் சொன்னார்.
பலித்தது.
பிரிட்டன் ராஜ வம்சத்துக்கும் சாணக்யர் ஆனார்.
ஜைன குடும்பத்தைச் சார்ந்த சந்திராசாமி சிறு வயதில் ஆன்மீக நாட்டம் கொண்டு வீட்டை விட்டு வெளியேறி தாந்தீரீகராய் அம்பிகை உபாசனை செய்து முன்னேற்றம் அடைந்தார். ஜைனர் ஆயினும் அவர் காளி உபாசகர்.
அவர் புகழ் உச்சியில் இருந்த காலத்தில் புருனை, பஹ்ரைன், நாட்டு மன்னர்களும் இவர் குறி சொல்வதை ஏற்று நம்பினார்கள். நடிகை எலிசபெத் டெய்லர், பாலஸ்தீன யாஸர் அராஃபத், முகமது அல் ஃபயத் (இளவரசி டயானா காதலர் டோடி அல் ஃபயத் தகப்பனார்), இவர்களுக்கும் ஆன்மீக ஆலோசகர் ஆனார்.
அரசியல் வட்டாரத்தில் செல்வாக்குடனும் செல்வச் செழிப்புடனும் வலம் வந்தார். (அவர் வாழ்வின் பிற்பகுதி… அவர் மீது அன்னியச் செலாவணி மோசடி வழக்குகள், ராஜீவ் அவர்களின் கொலையில் அவர் மீதான சந்தேகம். அங்கே நாம் போக வேண்டாம். ஒரு ஜோஸ்யருக்கும் கஷ்டகாலம் வரும் என உணர்க.)
இரண்டாவதாக நான் சொல்லப் போவது அம்மையார் ஜெயலலிதா அவர்களுக்கு ஒருவர் சொன்ன கைரேகை பலன்.
அவர் சினிமாத் துறையில் வந்து ஹீரோயினாக பிரபலமானது 1965 ல்.
1961 முதலே சிறுமியாக நடிக்க வந்து விட்டார். 1966 ஒரு வாரப்பத்திரிக்கையில் (குமுதம்) ஒரு துணுக்கு செய்தி. ஷூட்டிங் இடைவேளையில் அவரை ஒரு கை ரேகை நிபுணர் கையைப் பார்த்து பலன் சொன்னார்.
“நீங்கள் தமிழ்நாடு முதல் அமைச்சர் ஆவீர்கள்”, என்று.
அப்போது அவருக்கு வயது 18, சிரித்து விட்டார் ஜெயலலிதா அவர்கள்.
“இந்த கைரேகை ஜோஸ்யம் இது எல்லாம் சுத்தப் பொய் ஃபிராடு என்பதற்கு இந்த கை ரேகை பலனே சாட்சி” என்றார்.
இந்த செய்தியைப் படித்த ஞாபகம் நன்றாக நினைவில் இருக்கு.
24.06.1991ல் தன் 43 ஆம் வயதில் முதல்வர் பொறுப்பேற்றார் என்பது வரலாறு... கை ரேகை பொய்க்கவில்லை.
மூன்றாவதாக சொல்லப்போவது...
நாகை வேளாங்கண்ணி அருகில் கோரகச் சித்தர் சமாதி வடக்குப் பொய்கை நல்லூரில் உள்ளது. இவர் போகரின் சீடர். கோரகச் சித்தரின் சீடர் பாப்பையா சுவாமிகள் சமாதி பொறையாரில் உள்ளது. அங்கு பௌர்ணமி அன்று விசேஷ பூஜை நடக்கும் என நான் கேள்விப்பட்டேன்.
அந்த பூஜை அன்று இரவு ஒரு பட்டிக்காட்டு படிப்பறிவில்லாத ஒரு விவசாயி மீது பாப்பையா சுவாமிகள் எழுந்தருளி அருள் வாக்கு சொல்கிறார்.
சரி போய் பார்ப்போம் என்று பார்க்கப் போனேன்.
ஒரு பௌர்ணமி இரவு 2002 ஆம் வருஷம்.
பால் வியாபாரம் செய்பவர் அவர். மாடு கன்று விவசாயம் அவர் தொழில். படிப்பு எட்டாம் வகுப்பு அளவே.
கறுத்த உருவம்... 38 - 40 வயது அவருக்கு இருக்கும்.
பூஜை தொடங்கியது. இரவு 11 மணி வாக்கில் பேசத் தொடங்கினார்.… பாட்டு பாடறமாதிரி ஸ்லோகங்கள்.. என்ன மொழி புரியவில்லை... ஒரு அட்சரம் கூட தமிழ் இல்லை. என்ன சொல்கிறார் அதுவும் புரியவில்லை. ஆனால் நிச்சயம் இது ஏமாற்று இல்லை என்று மட்டும் தெரிந்தது. வசூல் எதுவும் கிடையாது. காணிக்கையும் இல்லை.
இரண்டு மணி நேரம் கேட்டுவிட்டு போய்விட்டேன்.
மறு நாள் நண்பர் ஒருவரிடம் இது பற்றி செய்தியாகச் சொன்னபோது அவர், “அவசியம் அடுத்த பௌர்ணமிக்கு என்னை அழைத்துப் போங்கள்”, என்றார்.
அவர் வைதீகக் குடும்பத்து சமஸ்கிருத பண்டிதர் ஆவார்.
புரோகிதமும் செய்வார்.
போனோம்.
அருள் வாக்கு சொல்லச் சொல்ல இவர் குறித்துக் கொண்டார். எங்களுக்கு எதுவும் புரியவில்லை.
மறுநாள் சொன்னார், "அவர் பேசியது ஆதி சமஸ்கிருதம். வால்மீகி காலத்து வழக்க மொழி" என்றார்.
இப்போது இணையத்தில் தீர்க்க தரிசிகள் நாஸ்ட்ரடாமஸ், பாபா வாங்கா இவர்கள் செய்தி நிறைய அடிபடுகிறது. தீர்க்கதரிசனங்கள் அவர்கள் சொன்னது நடக்கிறது என்று. சில நடந்துள்ளன. 2026 மூன்றாம் உலகப் போர் வரும் என்றார்கள். போர் நடக்கிறது அதன் வேகத்தைப் பார்த்தால் அது மூன்றாம் உலகப் போரில்லை... 3.001, 3.002, 3.003 ஆக போகிறது.
1898 ல் மார்கன் ராபர்ட்சன் என்பவர் The sinking of the Titan என ஒரு புத்தகம் எழுதினார். அதில் மூழ்கவே மூழ்காத டைட்டன் என்ற கப்பல் ஒரு பனிப்பாறை மீது மோதி முழுகும். அதில் லைஃப் படகுகள் சிலவே இருக்கும் என்று எழுதி இருந்தார்.
14 வருடங்கள் கழித்து 14.04.1912 ல் ஒரு பனிப்பாறை மோதி டைட்டானிக் கப்பல் முழுவதும் 15.04.1912 காலை 2.20 க்கு முழுகியது.
குறி சொல்பவர்களும் கைரேகை வல்லுனர்களும் ஜாதகம் பார்ப்பவர்களும் பிரச்னைக்கு சொல்வது பரிகாரம்.
இந்தக் கோவிலுக்கு இத்தனை வாரம் போ.. இதைத் தானம் செய்.. அதைக் கொடு என லிஸ்ட் சொல்வார்கள்.
இருப்பவர்களுக்கு ஓ கே.. ஏழைகளும் தங்கள் பிரச்னை தீர தங்கள் சொற்ப வருவாய் பணத்தை இதில் செலவு செய்யும் போது கொஞ்சம் கஷ்டப்படுகிறது மனசு. என்ன பண்றது பிரச்னைகள் வசதி பார்த்தா வருகிறது இப்போது?
மூதறிஞர் இராஜாஜி அவர்கள் முதலமைச்சராக இருந்த போது சக அமைச்சர்களில் பலர் சோதிடப்பித்து பிடித்து அலைந்தார்கள்.. இது அவருக்கு பிடிக்கவே இல்லை.
“இறைவன் உனக்கு இது தான் என்று விதித்துள்ளதை முன் கூட்டியே தெரிந்து கொள்வதில் என்ன பிரயோசனம்?” எனச் சொல்லுவார் இராஜாஜி என அமரர் கல்கி அவர்கள் எழுதினார்.
குடந்தை சோதிடர் பாத்திரத்தை அறிமுகம் செய்யும் இடத்தில் மனிதர்களின் சுபாவம், வருங்காலத்தை அறிவதில் ஒரு ஆசையுடன் இருப்பதைக் குறிப்பார். இந்த ஆசை ஆளும் அரச குலத்தவர்களுக்கு வரும்போது நம் நாயகன் வந்தியத்தேவனுக்கும் வந்ததில் தவறில்லை என்பார்.
சில ஜோஸ்யர்கள் சொல்லும் ஆரூடம், குறி, வாக்கு அட்சரம் பிசகாமல் பலிப்பதும் உண்டு. கூட்டம் மொய்க்கும். அது சில காலம் தான். அவரே பிற்காலத்தில் பல வருடங்கள் கழித்து சொல்வது பலிக்காது.
இந்த சோதிடம், சகுனம், ராசி, திருஷ்டி கழித்தல் எல்லாம் அதிகம் புழங்கும் இடங்கள் ஒன்று அரசியல் தலைவர்கள், அவர்களின் கூட்டாளிகள் கூடாரம், இரண்டு சினிமா உலகம்.
இந்த நாளில் பிரச்சாரம் ஆரம்பியுங்கள்.. வேட்பு மனு தாக்கல் செய்யுங்கள்.. என சோதிடர்களின் அறிவுரை படியே கட்சி நடக்கும். (கட்சியின் முக்கிய கொள்கை முற்போக்கு மற்றும் மூட நம்பிக்கைகள் மறுப்பாக இருந்தாலும்...)
சினிமாவிலும் நெகடிவ் சமாச்சாரங்களைப் பார்த்து அலறுவார்கள்… “எங்கே தேடுவேன் பணத்தை எங்கே தேடுவேன்” எனப் பாடிய அன்றிலிருந்து கலைவாணர் என்.எஸ் கிருஷ்ணனுக்கு பணப் பிரச்னை ஆரம்பமானது என்பார்கள்.
“இனிப் பாட மாட்டேன்.. இனிப் பாட மாட்டேன்” என ஒரு பாட்டு பாடினார் நடிப்பிசைப் புலவர் கே.ஆர் இராமசாமி… அதற்குப் பின் அவர் பாடவே இல்லை.
ஒரு தலை ராகம் படத்தில் டி.எம்.எஸ் அவர்கள் “நான் ஒரு ராசி இல்லா ராஜா” பாடலைப் பாடியதற்கு பின்னாளில் வருந்தினார். அதற்குப் பின் பாடும் வாய்ப்புகள் குறைய ஆரம்பித்து விட்டது எனச் சொன்னார் ஒரு பேட்டியில்.
எம்.ஜி.ஆர் படங்களில் முதல் காட்சியில் அவர் “வெற்றி! வெற்றி!” என ஓடி வருவதை எடுப்பார்கள்.
எம்.ஜி.ஆர் தேர்தலில் வெற்றி பெற்றதும் உடனே முதல்வர் பதவி ஏற்கவில்லை. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்குப் போய், வேண்டுதல் நேர்த்திக்கடன் செலுத்தி விட்டு வந்து, பிறகு தான் பதவி ஏற்றார். எழுத்தாளர் மணியன், வித்வான் லெட்சுமணன் யோசனைப் படி என்பார்கள்.
நடிகை பானுமதி ஒரு அஷ்டாவதானி.. அருங்கலைகள் பல பயின்றவர். இயல் இசை நாடக கலைஞி, எழுத்தாளர், நடிகை, பாடகி, ஸ்டுடியோ ஓனர், தயாரிப்பாளர், டைரக்டர்… இப்படி பன் முக நாயகி. ஜோதிடத்தை விட்டு வைப்பாரா… நன்றாய் ஜாதகம் கைரேகை பார்ப்பார்.
ஒரு முறை எம்.ஜி.ஆரிடம் கை காட்டச் சொல்ல அவர் மறுத்தார். அவருக்கு நம்பிக்கை இல்லை இதில் எல்லாம். பானுமதி பிடிவாதமாகப் பார்த்து நீங்க முற்பிறவியில் ஒரு அரசர் என்றார்.
எம்.ஜி.ஆர் கும்பலக்கினம், துலாம் ராசி, சுவாதி நட்சத்திரம் 2 ம் பாகம். ராஜயோக ஜாதகம். ராகு அவர் ஜாதகத்தில் ராஜயோக ராகு. நீச்ச பங்க ராஜயோகம், கஜகேசரி யோகம்... அவர் ஜாதகத்தில் இடம் பெற்றிருந்தன.
டிரம்ப் ஜாதகம் - சிம்ம லக்னம் - விருச்சிக ராசி - கேட்டை நட்சத்திரம் – நீச்சபங்க ராஜயோகம், கஜகேசரி யோகம் – தற்போது குரு திசை – சுக்கிரபுத்தி சுக்கிரன் 12ஆம் வீட்டில் இருப்பதால் சர்வதேச கவனம் பெறுகிறார். (அதெல்லாம் சரிதான். ஜாதகப்படி எப்போ வாயை வச்சுகிட்டு சும்மா இருப்பாராம்… சும்மா இருந்தாலே உலக ஷேமம் தானே.)
நடிகர் வெண்ணிற ஆடை மூர்த்தி ஜோதிடக்கலை பயின்ற நிபுணர். 1965 லேயே ஜெயலலிதா அவர்கள் அமைச்சர் ஆவார் என்றாராம் (வெண்ணிற ஆடை படத்தில் நடிக்கும் போது)!
ஜெயலலிதா பதவி ஏற்ற பின் வெண்ணிற ஆடை மூர்த்தி வீட்டுக்குச் சென்று அவர் மனைவியிடம், “அமைச்சர் ஆவேன் என்று சொன்னார். முதலமைச்சர் எனச் சொல்லலியே” என்றாராம். அம்மையாருடன் எப்போது வேண்டுமானாலும் தொலைபேசியில் பேசும் உரிமை பெற்றவர் வெண்ணிற ஆடை மூர்த்தி.
நடிகர் ராஜேஷ் அவர்கள் மறைந்து விட்டார். ஆரம்ப கால கட்டங்களில் அவருக்கு ஜோதிடம் ஜாதகம் எல்லாம் புரட்டு எனச் சொல்லி வந்தவர். அவர் வாழ்வில் ஒரு ஜோஸ்யர் வந்து கடந்த காலத்தை புட்டு புட்டு வைத்தார். அன்று முதல் ஜோதிடம் பயிலத் தொடங்கி பல நூல்கள் எழுதி உள்ளார். ஆன்மீகத்தில் பல படிகளைக் கடந்தார். ஆன்மீக விஷயங்களில் நிறைய வீடியோ யூட்யூபில் போட்டார்.
பி.வி இராமன் என்ற பிரபல ஜோதிடர் அகில இந்திய அளவில் புகழ் பெற்றவர். சர் சி வி இராமன் அவர்களுக்கு இதில் நம்பிக்கை கிடையாது. இருவரும் ஒரு முறை சந்தித்த போது சர் சி வி இராமன் அவர்களிடம் ஜாதக குறிப்பைக் கேட்டார். அவர் தரவில்லை. ஆனாலும் அவரது நடவடிக்கைகள் முக லட்சணம் வைத்து ஜாதகத்தைக் கணித்து விட்டார் பி வி இராமன்.
ஞானசம்பந்தப் பெருமான் இந்த ஜோதிட நல்ல நாள் கெட்ட நாள் சமாச்சாரத்துக்கு முடிவு கட்ட கோளறு பதிகம் பாடினார்...
வேயுறு தோளி பங்கன் விட முண்ட கண்டன்
மிக நல்ல வீணை தடவி மாசறு
திங்கள் கங்கை முடிமேல் அமர்ந்து
எனது உளமே புகுந்து அதனால்
ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழன்
வெள்ளி சனி பாம்பிரண்டுமுடனே
ஆசறு நல்ல நல்ல அவை மிக நல்ல நல்ல
அடியாரவர்க்கு மிகவே.
இறை அடியவர்க்கு எல்லா நாளும் நல்ல நாளே, கவலைப்படாதே எனப் பாடினார்.
அருணகிரி நாதர் கந்தர் அலங்காரத்தில் இப்படிப் பாடினார்...
நாளென் செயும் வினை தான் என் செயும் எனை நாடி வந்த
கோள் என் செயும் கொடும் கூற்று என் செயும் குமரேசர் இரு
தாளும் சிலம்பும் சதங்கையும் தண்டையும் சண்முகமும்
தோளும் கடம்பும் எனக்கு முன்னே வந்து தோன்றிடினே.
எல்லாவற்றுக்கும் மனத் தெம்பு தானே முக்கியம். நமக்கும் மிஞ்சிய சக்தியின் துணை வேண்டும் என நினைப்பது சகஜமே.
அதைத் தானே இந்த ஜோதிட, கை ரேகை, சகுனம், நல்ல நேரம், திருஷ்டி சமாச்சாரங்கள் மறை முகமாய் ஒரு டானிக் போல் தருகின்றன.
சரி இந்த விஷயத்துக்கு என்ன தான் முடிவு.. என்ன தான் தீர்ப்பு.. இதெல்லாம் உண்மையா.. நம்பலாமா? கூடாதா?
இதோ ஔவையாரின் தீர்ப்பு
ஒன்றை நினைக்க அதுவொழிந்திட்டொன்றாகும்
அன்றி அது வரினும் வந்தெய்தும், ஒன்றை
நினையாது முன் வந்து நிற்பினும் நிற்கும்
எனையாளும் ஈசன் செயல்.
இந்தப் பாட்டை அடிக்கடி மனதில் சொல்லிக்கொள்ளுங்கள். ஜோதிடம், வாஸ்து, ஜாதகம், கைரேகை, பேப்பரில் ராசிபலன் பார்ப்பது, தினசரி காலண்டரில் இன்று ராசிக்கு என்ன பலன் பார்ப்பது, கிரகப் பெயர்ச்சி பலன்கள் புக் வாங்குவது போன்ற ஆசைகள் எழவே எழாது.