

தமிழ் சினிமாவின் பிரிக்க முடியாத சாதனையாளர்களில் இயக்குநர் ஏ.வி.எம்.சரவணன் எக்காலத்திலும் மறக்க முடியாதவர். தனக்கென தனி முத்திரையுடன் முதன்மை இடத்தைப் பெறுபவர்கள் வெகு சிலரே. அதிலும் திரையுலகில் என்றும் நல்லவர், பண்பானவர் எனும் அடையாளத்துடன் இருப்பது சற்று சிரமம். அந்த விதியை மீறி ரசிகர்களால் மட்டுமல்ல புகழ்பெற்ற நடிகர் நடிகைகளாலும் நன்றியுடன் மதிக்கப்பட்டவர்களில், நெற்றியில் குங்குமப் பொட்டுடன் பணிவாக கட்டிய கைகளுடன் வெள்ளை உடையில் வலம் வந்த சரவணன் குறிப்பிடத்தக்கவர்.
AVM Productions-இன் முன்னணி நிர்வாகியும் தயாரிப்பாளரும் ஆன இவர், தமிழ் திரைப்பட வரலாற்றில் தமிழ் சினிமாவின் வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றியவர் எனும் பெருமை பெற்றவர்.
தமிழ் திரையுலகின் முன்னோடிகளில் ஒருவராகவும், புதுமைப் பார்வை கொண்டவராகவும் கருதப்படும் A.V.மெய்யப்பன் அவர்களின் மகனான சரவணன் தனது தந்தை நிறுவிய AVM நிறுவனத்தை 1960 ஆண்டுமுதல் மேம்படுத்தி, தென்னிந்தியாவின் மிகப் பழமையான மற்றும் நீடித்த திரைப்பட தயாரிப்பு நிறுவனமாக மாற்றினார். AVM Productions-ஐ பல தலைமுறைகளாக முன்னெடுத்துச் சென்றதில் பெரும் பங்காற்றியவர்.
நூற்றுக்கணக்கான படங்களில் தயாரிப்பாளர் / நிர்வாகியாக பணியாற்றி, பல தசாப்தங்களாக தமிழ் திரைப்பட துறைக்கு மக்கள் மனம் கவர்ந்த உயர்ந்த தரமான படங்களை வழங்கினார். குறிப்பாக சமுக நலன் மாற்றம் சார்ந்த குடும்பப்படங்கள், காதல், அதிரடி, நகைச்சுவை என பல துறைகளில் வெற்றி படங்களை உருவாக்கி அக்கால சினிமாப் பிரியர்களுக்கு அறுசுவை விருந்தளித்தார்.
இன்று நம்மால் ஆராதிக்கப்படும் சூப்பர் ஸ்டார்கள் வளர்ச்சிக்கு முக்கிய பங்கு வகித்தவர் இவரே. கமல், ரஜினி போன்ற அந்நேரத்தில் ட்ரெண்ட் யாரோ அவர்களை பயன்படுத்தி வெற்றிகளை கொடுப்பது சரவணனின் ராஜதந்திரம் என்றால் மிகையாகாது. உதாரணமாக நல்லவனுக்கு நல்லவன் படத்தில் ரஜினிக்கு ஏற்ற வில்லனாக கார்த்திக்கை நடிக்க வைக்கலாம் என அவரை அணுக கார்த்திக்கோ சிறிய வில்லன் கதாபாத்திரத்தில் நான் நடிக்க மாட்டேன் என சொன்னதும் அன்றைய மார்க்கெட்டில் திடமான அவருக்கு தனியே நடிக்க நல்லதம்பி எனும் ஒரு புதிய பட வாய்ப்பையே தந்தது சரவணனின் மார்க்கெட்டிங் திறனுக்கு ஒரு சான்று என்கிறது ஒரு தகவல்.
ரஜினிகாந்த், கமல்ஹாசன், சிவகுமார், ராஜ்குமார் போன்ற முன்னணி நடிகர்களின் பயணத்தில் AVM நிறுவனத்தின் பங்கு குறிப்பிடத்தக்கது. குறிப்பாக ரஜினியின் நலம் விரும்பியாக அவரது வெற்றிகளைக் கண்டு ரசித்தவர். ரஜினிகாந்தின் “மன்னன்”, “மிஸ்டர் இந்தியா” (ஹிந்தி இணை தயாரிப்பில்), முரட்டுக்காளை, போக்கிரிராஜா, சிவாஜி போன்ற பல வெற்றிப் படங்கள் மக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றன.
அன்று திரையின் வசூல் ராஜாக்களாக கருதப்பட்ட பாக்யராஜுக்கு 'முந்தானை முடிச்சு' பாராதிராஜாவுக்கு 'புதுமைப்பெண்', பாண்டியராஜனுக்கு 'பாட்டி சொல்லை தட்டாதே', அர்ஜுனுக்கு 'சங்கர் குரு' என பல பிரபலங்களுடன் இணைந்து படமெடுத்து வசூலை அள்ளிய திறமை இவருடைய பலம். நதியா பீக்கில் இருந்த போது நதியாவை சிவாஜியோடு இணைத்து எடுத்த 'அன்புள்ள அப்பா' வித்யாசமான அனுபவத்தை ரசிகர்களுக்கு அளித்தது.
இவையெல்லாம் ஒரு சோறு பதம்தான். இதைப்போல தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட பல மொழிகளில் வெற்றி தந்த நூற்றுக்கணக்கான படங்களை ஏவிஎம் நிறுவனம் தயாரித்தது.
அன்றைய காலத்தில் டிஜிட்டல் சவுண்ட், புதிய கேமரா தொழில்நுட்பங்கள், சவுண்ட் ஸ்டேஜ்கள் போன்ற பல மேம்பாடுகளை AVM ஸ்டுடியோவில் அறிமுகப்படுத்தி தொழில்நுட்ப முன்னேற்றங்களை சினிமாவுக்கு கொண்டு வந்தவர் இவரே.
தென்னிந்தியாவின் மிகப்பெரிய ஸ்டுடியோ வளாகம் என்ற நிலையை AVM பெற இவரின் பங்களிப்பு பெரிது.
திரைத்துறை மட்டுமின்றி தொலைக்காட்சி துறையிலும் தடம் பதித்து 'சித்தி' போன்ற பல வெற்றிகரமான சீரியல்களை தயாரித்து, AVM நிறுவனத்தை வெற்றிபெறச் செய்தார்.
AVM நிறுவனத்தின் அடையாளங்களான ஒழுக்கம், தரம், நேர்மை ஆகியவற்றை இறுதிவரை கட்டிக்காத்தவர். குறிப்பாக திரைப்படத் தயாரிப்பில் தரத்தை மிகுந்த கவனத்துடன் பேணியவர். ஒழுக்கத்தில் பல தயாரிப்பு நிறுவனங்களுக்கு முன்மாதிரியாக இருந்தவர்.
தமிழ் சினிமா வரலாற்றின் 'மென்மையான பெரியவர்' என்ற அடையாளத்துடன் துறையில் மிகவும் மதிக்கப்படும் நபராக இருந்தார். பல நடிகர்கள், இயக்குநர்கள், தொழில்நுட்ப நிபுணர்கள் இவரிடம் நேர்மையான வழிகாட்டுதலை பெற்றுள்ளனர்.
மேலும் எண்ணற்ற துணை நடிகர்களின் வீட்டில் எரிந்த அடுப்பு அணையாமல் செய்தவராக, ஏவிஎம். தொழிலாளர்களுக்கு வீடு கட்டிக்கொடுத்தவர் என இன்னும் பல மனிதநேயமிக்க பெருமைகளுக்கு முன்னோடியாக இருந்தவர் சரவணன்.
தமிழ்நாடு அரசு விருதுகள், சினிமா துறைக்கான வாழ்நாள் சாதனை விருதுகள், பல தேசிய மற்றும் மாநில அளவிலான கௌரவங்கள் மற்றும் திரைப்படத் தயாரிப்பில் நீண்டகாலப் பங்களிப்புக்கான பெருமை விருதுகள் என இவர் பெற்ற விருதுகள் அநேகம்.
இவரின் வழிகாட்டுதலில் இந்தியாவின் மிகப்பழைய ஸ்டூடியோவாக 70 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வரும் .AVM இந்தியாவில் மிக நீண்டகாலம் இயங்கும் ஸ்டுடியோவாக நிலைத்தது.
சென்னையில் இவரது தந்தையால் கட்டப்பட்டு 1970களின் இறுதியில் தொடங்கி 2020 வரை கம்பீரமாக இயங்கி வந்த வடபழனி ஏவிஎம் ராஜேஸ்வரி திரையரங்கம் தற்போது அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்படுவதற்காக இரு மாதங்கள் முன் இடிக்கப்பட்டது. ரஜினி, கமல், விஜய், அஜித் உள்பட சினிமா ரசிகர்கள் பலருக்கும் அதிர்ச்சி தந்த செய்தியானது.
அத்துடன் காலப்போக்கில் தமிழ் சினிமாவின் வரலாற்று அடையாளமாக விளங்கி பல தலைமுறைகளின் கனவுகளை நிஜமாக்கிய ஏவிஎம் ஸ்டூடியோவும் மாற்றம் பெற்றது. கடந்த 2023-இல், ஸ்டூடியோ வளாகத்தில் AVM Heritage Museum தொடக்கப்பட்டு பழங்கால சினிமா உபகரணங்கள், வின்டேஜ் கார்கள், மற்றும் AVM–இன் வரலாறு போன்றவைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
பிறப்பு சாதாரணமாகலாம். ஆனால், இறப்பு வரலாற்றில் பேசப்படுவதாக இருக்கவேண்டும். அதன்படி தமிழ் சினிமாவின் நீடித்த வளர்ச்சிக்கு மிகப்பெரும் பங்களிப்பை வழங்கி நேற்று பிறந்த நாள் கொண்டாடிய நிலையில் இன்று அவரின் மறைவு திரைத்துறையில் மறக்க முடியாத நிகழ்வாகியுள்ளது. தற்போது தனது 85 வயதில் மறைந்துள்ள ஏவிஎம் சரவணன் சினிமா வரலாற்றில் என்றென்றும் பாராட்டப்படுபவராக நிலைத்து இருப்பார்.