

வளர்ச்சி எனும் நோக்கத்தில், நம்மைச் சுற்றி பல சேவைகள், கட்டுமான வேலைகள் நடந்துகொண்டிருக்கின்றன. இது மக்களுக்காகத்தான் என்று ஒருபுறம் இருந்தாலும்; இதில் யார் யார் சம்பந்தப்பட்டு இருக்கிறார்கள் என்ற தகவல் அனைவருக்கும் தெரியுமா? அதை எப்படி தெரிந்துகொள்ளலாம்?.
தனிநபருக்கான வசதி: இன்றைய டிஜிட்டல் யுகத்தில், அரசாங்கம் மேற்கொள்ளும் திட்டங்களைப் பற்றி அறிய குடிமக்கள் செய்தித்தாள்களையோ அல்லது வாய்மொழி செய்திகளையோ மட்டுமே நம்பியிருக்க வேண்டியதில்லை. இந்திய அரசு myScheme எனும் தளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இது கல்வி, சுகாதாரம், வீட்டுவசதி மற்றும் வேலைவாய்ப்பு போன்ற துறைகளில் நடந்துவரும் அல்லது வரவிருக்கும் ஆயிரக்கணக்கான திட்டங்களைப் பட்டியலிடும் போர்ட்டலாகும் (Portal).
இதோடு மானியம் (subsidy) தொடர்பான தகவல்களுக்குத் தனிநபர்கள் தங்களின் அடிப்படை விவரங்களை (basic details) இதில் உள்ளிடுவதன் மூலம் எந்ததெந்தத் திட்டங்களுக்குத் தகுதியாக இருக்கிறோம்; அதில் எவ்வாறு விண்ணப்பிக்க வேண்டும் என்பதையும் கண்டறியலாம்.
நாம் செலுத்தும் வரி எங்கெல்லாம் செல்கிறது? திட்டங்களை அறிவித்ததற்கு அப்பால் நகர்ப்புற மேம்பாட்டிற்கு பொது வரி நிதி எவ்வாறு செலவிடப்படுகிறது (public tax funds are spent on urban development) என்ற கேள்வி அனைவருக்கும் இருக்கும்.
இது திறந்த அரசாங்கத் தரவு (Open Government Data (OGD) என்ற தளத்தின் மூலம் வெளியிடப்படுகிறது. இந்தத் தளத்தில் நிதி ஒதுக்கீடுகள் (fund allocations), விநியோகங்கள்(disbursements), திட்ட முடிவுகள் (project outcomes) குறித்த தகவல்களைக் காணலாம். மாவட்ட வாரியான செலவுகள், துறை சார்ந்த முதலீடுகள் மற்றும் தேவைப்பட்டால் நம்முடைய தனிப்பட்ட பகுப்பாய்விற்கான மூலத்தரவைக் கூட குடிமக்கள் (raw data for independent analysis) எடுத்துக்கொள்ள வசதியும் உள்ளது.
தற்போதைய நிலவரங்களைக்கூடப் பார்க்கலாம். குறிப்பாக நகர்ப்புற திட்டங்களுக்கு MoHUA (Ministry of Housing and Urban Affairs)இன் புள்ளிவிவரப்பிரிவு ஒரு ஒருங்கிணைந்த மிஷன் டாஷ்போர்டை(Mission Dashboard) வழங்குகிறது.
இந்தத் தளம் ஸ்மார்ட் சிட்டிகள் மற்றும் AMRUT(Atal Mission for Rejuvenation and Urban Transformation) போன்ற முக்கிய நகர்ப்புறப் பணிகளில் நடக்கும் நிகழ்நேரத் தரவை ஒருங்கிணைக்கிறது.
இதன்மூலம் குடிமக்கள் ஒரு திட்டத்தின் செயல்திறன் அளவீடுகள் (track performance metrics), நிதி பயன்பாடு, முன்னேற்ற அறிக்கைகளைக் (progress reports) கண்காணிக்க அனுமதிக்கிறது. முக்கியமாக எந்த ஒப்பந்தக்காரர்கள் அல்லது நிறுவனங்கள்(Contractors or agencies) டெண்டர்களைப் பெற்றுள்ளன என்பதையும் இது எடுத்துக்காட்டுகிறது. இதன் மூலம் உள்கட்டமைப்பு மேம்பாட்டில் ஒரு அரசின் பொறுப்புணர்வையும் உறுதி செய்யமுடிகிறது.
ஆக மக்கள் தொகை, மக்கள் பயன்பாடு என்று பல்வேறு நோக்கங்களுக்காக அரசாங்கத்தால் பல திட்டங்கள் அரங்கேறினாலும்; சில காரணங்களால் இந்த விழிப்புணர்வு அனைவரிடமும் இருப்பதில்லை.
எனவே, ஏதோ சொல்கிறார்கள்! நாமும் அதையே கேட்போம் என்று இல்லாமல் நம்மிடம் உள்ள டிஜிட்டல் அமைப்பு வசதி மூலம் அரசாங்க நிதிகள் எப்படி திறம்பட கையாளப்படுகிறது?, யார் பணியைச் செயல்படுத்துகிறார்கள்? மற்றும் நமக்குக் கிடைக்கும் முடிவுகள் எவ்வாறு அவர்களின் வாக்குறுதிகளுடன் ஒத்துப்போகின்றன என்பதைச் சரிபார்க்க அரசாங்கம் மக்களுக்கு அதிகாரம் அளிக்கிறது; அதை அனைவரும் பயன்படுத்திக்கொள்வோம்.